மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

அபூர்வ சகோதரர்கள்... ரெண்டக்கா - அதிமுக, திமுகவை வறுத்த கமல்ஹாசன்

அபூர்வ சகோதரர்கள்... ரெண்டக்கா - அதிமுக, திமுகவை வறுத்த கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள எம்.கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி நடந்தது. வழக்கமாக அதிமுக பொதுக்குழு நடத்தும் ஸ்ரீ வாரி திருமண மண்டபத்துக்கு அருகேதான் இந்த மண்டபமும் இருக்கிறது.

நான் நாத்திகன் அல்ல பகுத்தறிவுவாதி என்று அடிக்கடி மேற்கோள் காட்டும் கமல்ஹாசன் கட்சியின் முதல் பொதுக்குழுவை நிறைந்த தை அமாவாசையில் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம்தான்.

திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக என திராவிடக் கட்சிகளின் பொதுக்குழு கூட்டங்களையே அதிகம் பார்த்திருந்த தமிழக அரசியல் வட்டாரம் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தை நேற்று கண்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே திராவிட கட்சிகளில் இருந்தவர்கள்தான்.

பொதுக்குழுவுக்காக எம்.கன்வென்ஷன் மண்டபத்தை சில நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பொதுக்குழு அரங்கை முற்றிலும் டிஜிட்டல் மயப்படுத்தியிருந்தனர். பொதுக்குழு வாசலில் பொதுக்குழு அழைப்பு இருக்கிறதா என்று செக் செய்து உள்ளே அனுமதிப்பது திராவிடக் கட்சிகளின் பாணி. ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுவுக்காக அதன் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் முறையில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அந்த கடிதத்திலேயே அவர்களின் நுழைவுக்காக க்யூ ஆர் கோடும் அனுப்பப்பட்டிருந்தது. அரங்க வாயிலில் அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அது பொருந்தியவர்களுக்குத்தான் உள்ளே செல்ல அனுமதி. கமல்கூட இப்படித்தான் அனுமதிக்கப்பட்டார். உள்ளே செல்லும்போதே அனைவரது மொபைல்போன்களும் வாசலிலேயே வாங்கி வைக்கப்பட்டன.

கட்சியின் ஐந்து பொதுச் செயலாளர்கள், புதுச்சேரி மாநிலத் துணைத் தலைவர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் பேசினார்கள். பேசிய பலரும் கட்சியின் உள்கட்டமைப்ப்பு பற்றியும் முதன்முறை சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராவது பற்றியும், முதன்முறையாக பொதுக்குழு கூடியிருப்பது பற்றியும் பேசினார்கள்.

பொதுக்குழு கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கமல்ஹாசனை கட்சியின் நிரந்தர தலைவராக ஆக்கும் தீர்மானமும் ஒன்று.

கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது திமுகவையும், அதிமுகவையும் கடுமையாக சாடினார். குறிப்பாக ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை பெயர் குறிப்பிட்டே பேசினார்.

“கொஞ்ச காலம் முன்பு பாண்டிச்சேரியில் நடந்த பிரஸ் மீட்டில், மக்கள் நீதி மய்யம் பற்றிய கேள்விக்கு, 'நான் அரசியல் பத்தி பேசிக்கிட்டிருக்கேன்’ என்று கிண்டலாக பதில் சொன்னார் ஸ்டாலின். நாமெல்லாம் ஒரு கட்சியா என்ற மாதிரி பதில் கொடுத்திருந்தார். அதை மன்னித்துவிடலாம், ஆனால் மறக்க முடியாது. ஆனால் இன்றைக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் என்று பேசுகிறார். அன்று நம் பெயரையே உச்சரிக்கத் தயங்கினார்கள். ஆனால், இன்று நம்மையும் ஒரு கட்சியாக பேசும் அளவுக்கு நமது வளர்ச்சி இருக்கிறது. இந்த வளர்ச்சியை நாம் இன்னும் அதிகரிக்க வேண்டும்.

கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று நம்மை கேட்கின்றனர். நாம் முறையாக மக்களிடம் வாங்கி அதை ஒழுங்கான கணக்கோடு பராமரித்து வருகிறோம். ஆனால் நம்மைக் கேள்வி கேட்பவர்கள் எப்படி அரசியலுக்கு வந்தார்கள், அரசியலுக்கு வரும்போது எப்படி இருந்தார்கள், இன்று எவ்வளவு சொத்துகளோடு இருக்கிறார்கள்.

இன்று என் மகள் அட்சராகூட இந்தப் பொதுக்குழுவுக்கு வருகிறேன் என்று சொன்னார்கள். ஆனால் அதை நான் தவிர்த்துவிட்டேன். அவர்களுக்கான பாதையை அவர்களே கட்டமைத்துக்கொள்கிறார்கள். இந்தக் கட்சியில் எனக்குப் பிறகு வருபவர்கள் இங்கிருந்தே, கட்சியில் இருந்தே வர வேண்டும்” என்று கூறிய கமல்ஹாசன்,

“ஜெயலலிதா, சசிகலா என்று முதலில் இரண்டு அக்காக்கள் இருந்தனர். பின் அவர்கள் அம்மா என அழைக்கப்பட்டனர். இப்போது ஊழல் செய்துவிட்டு சிறைக்குப் போன சசிகலாவை ஏதோ விடுதலை போராட்ட தியாகியைப் போல வரவேற்கிறார்கள். சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் ஏதாவது நடக்கும் என்று ஸ்டாலினும் காத்திருக்கிறார். இந்த அபூர்வ சகோதர்கள் ஓபிஎஸ், இபிஎஸ்ஸின் நடவடிக்கைகளால் அதிமுக விரைவில் இரண்டாக உடையும். அதற்காக நாம் காத்திராமல் நம்முடைய வேலைகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

பெரிய கட்சிகள் என்று திமுக, அதிமுகவை சொல்லி வந்தார்கள். இப்போது மக்கள் வேறுவிதமாக பேசிக்கொள்கிறார்கள். நாம் திமுக, அதிமுகவோடு சேர வேண்டாம். நாம் நேர்மையான அணி. டெல்லியில் மக்களுக்கான போராளியாக எனது அருமை நண்பர் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடிக்கவில்லையா? அதுபோல நாமும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம். அதற்காக மக்களிடம் சேர்வோம், திமுக, அதிமுகவை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். 21ஆம் தேதி மாநாட்டுக்குத் தயாராவோம்” என்று சூடாகவே பேசினார் கமல்ஹாசன்.

மதியம் 1.30-க்குப் பொதுக்குழுவின் காலை அமர்வு முடிந்தவுடன் சைவம், அசைவம் என இரு வகை விருந்தும் பரிமாறப்பட்டது. தை அமாவாசை என்பதால் பலர் சைவ விருந்தையே தேர்ந்தெடுத்தனர்.

-ராகவேந்திரா ஆரா

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

வெள்ளி 12 பிப் 2021