மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

சி.வி. சண்முகம் தரைலெவல் அட்டாக்- தினகரன் பதில்!

சி.வி. சண்முகம் தரைலெவல் அட்டாக்- தினகரன் பதில்!

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை எதிர்த்து இருமுறை டிஜிபி அலுவலகத்துக்குச் சென்று புகார் கொடுத்தவர்களில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகமும் ஒருவர். இன்று (பிப்ரவரி 11) விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம், டிடிவி தினகரனை மிகக் கடுமையாக ஒருமையில் தாக்கியிருக்கிறார்.

சசிகலா மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக சொன்னீர்களே, எப்போது எடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, “சட்டம் தன் கடமையை செய்யும். விரைவில் நடவடிக்கை இருக்கும்” என்று கூறினார்.

மேலும் அவர் இன்று டிடிவி தினகரன் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்.

“சசிகலா அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும்... சசிகலா அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. உங்களை தினகரனிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் ஸ்லீப்பர் செல் இல்லை.ஓப்பன் செல்லே வைத்திருக்கிறோம். அது டிடிவி தினகரன் தான். அவரிடமிருந்து சசிகலாவையும், குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

தினகரனை நம்பிதான் ஆட்சி. கட்சி என இரண்டையும் கொடுத்துவிட்டு சிறைக்குப் போனார் சசிகலா. ஆனால் ஒரு மாதத்தில் கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி என்ற கதையாக உடைத்துவிட்டார்.

நான் நிதானமாக பேசுகிறேனா என்று கேட்கிறார் தினகரன். இவர் தான் எனக்கு ஊத்திக் கொடுத்தாரா...ஊத்திக் கொடுத்து ஊத்திக் கொடுத்து அடுத்தவன் குடியைக் கெடுத்தவர் தான் டிடிவி தினகரன். கூவத்தூரில் ஊத்திக் கொடுத்தவர் அவர்தான். இல்லையென்று சொல்லச் சொல்லுங்கள்.

அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் வியர்வையிலும் உழைப்பிலும் உருவான இயக்கம். இனி ஒரு முறை சசிகலாவிடம் அதிமுக அடிமையாக இருக்காது”என்று கூறியிருக்கிறார் சி.வி. சண்முகம்.

2011 காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டணிக் கட்சித் தலைவருமான விஜயகாந்த் குடித்துவிட்டு பேசுகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டிய நிலையில்... அவர்தான் ஊற்றிக் கொடுத்தாரா என்று ஜெயலலிதாவுக்கு கடுமையான பதில் அளித்திருந்தார் விஜயகாந்த்.

அதே வார்த்தை பிரயோகம் இன்று மீண்டும் அரசியலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் டிடிவி தினகரன் இதற்கு உடனடியாக பதில் அளித்திருக்கிறார்.

“நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து... மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. வாழ்க வசவாளர்கள்”என்று கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.

-வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 11 பிப் 2021