மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

கலைராஜனுக்கு வலை வீசும் சசிகலா

கலைராஜனுக்கு வலை வீசும் சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகி பிப்ரவரி 8 ஆம் தேதி, சசிகலா தமிழகத்தில் காலெடுத்துவைத்ததும் அவரை சந்திக்க அதிமுகவிலும் அதிமுகவுக்கு வெளியேயும் பலர் சந்திக்க முயற்சித்து வருகிறார்கள்.அதேநேரம் சசிகலாவின் குடும்பத்தினரோ அதிமுகவில் இருந்து வெளி கட்சிகளுக்கு சென்ற முக்கிய நபர்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள்.

அதிமுகவை மீட்கவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் சசிகலா தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அதிமுகவிலிருந்து வெளியேறியிருப்பவர்களையும், அதிமுகவில் உள்ளவர்களையும், விட்டமின் ப மூலமாகவும் சமுதாய பாசத்தாலும் வலைபோட்டு வருகிறார்கள் சசிகலா உறவினர்களும் அமமுகவினரும்.

முன்னாள் அதிமுக தென் சென்னை மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான வி.பி.கலைராஜன், சசிகலா குடும்பத்தினர் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவில் இணைந்து தற்போது வரையில் திமுக,வில் அரசியல் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு நேற்று பிப்ரவரி 10ஆம் தேதி 60வது பிறந்த நாள். பிறந்தநாளுக்காக கலைராஜனை தொடர்புகொண்டும், நேரில் சந்தித்தும் பலர் வாழ்த்துகள் தெரிவித்து வந்துள்ளனர். அதில் ஒரு போன் சசிகலாவின் உறவினர் போன். வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டு இருவரும் நலம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, நலம் விசாரிப்புக்கு இடையில் உரையாடல் திடீரென்று டிராக் மாறியது.

“பழசை மறந்து சின்னம்மாவிடம் வாங்க. அவரை சந்தித்துப் பேசுங்க. உங்களுக்கு என்ன தேவையோ அனைத்தும் திருப்தியாக செய்வாங்க. நீங்களும் தற்போது பொருளாதாரத்தில் கஷ்டப்படுவதாக சொல்கிறார்கள். நீங்கள் வந்தால் அந்த மாவட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தி அதிமுகவை மீட்கலாம்”என்று கூறியுள்ளார் சசிகலாவின் உறவினர்.

அதற்கு பதில் சொன்ன கலைராஜன், “என் மீதுள்ள அக்கறைக்கும் பாசத்துக்கும் நன்றி. சின்னம்மா நல்லாயிருக்காங்களா கேட்டதாகச் சொல்லுங்கள். இனி சாதி சமுதாயம்னு என்னிடம் பேசாதீர்கள். இதற்கு முன்னாடி ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோதும் அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். அதன் பிறகு நான் சங்கமம் ஹோட்டலில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி வைத்தியலிங்கம் மூலமாக ஆசைகளைக் காட்டி அழைத்தார் மறுத்துவிட்டேன். இப்ப நீங்க கூப்பிடுறீங்க.

டாக்டர் வெங்கடேஷ் பேச்சைக் கேட்டதாலதான் பலரும் அதிமுகவை விட்டு வெளியேறினார்கள். அதில் நானும் ஒரு ஆள். அவங்க நடத்துறது கட்சி இல்ல கம்பெனி. நான் இனி ஒரு போதும் அந்தப் பக்கம் திரும்ப மாட்டேன்”என்று சொல்லியுள்ளார் வி.பி. கலைராஜன்.

மீண்டும் விடாமல் அந்த உறவினர் சமாதானப்படுத்த முயல, “கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மியாட் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எனக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தினமும் உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறிவந்தார். டாக்டர்களிடம் என்னோட உடல் நலனைப் பற்றி அக்கறையோடு கேட்டு வந்தார். அப்படிப்பட்டவரை விட்டு வர முடியாது. இப்ப போன் பண்ற உங்களுக்கு நான் ஆஸ்பத்திரில இருந்தப்ப என் ஞாபகம் வந்ததுண்டா?”என்று கேட்டு மறுத்துவிட்டார் கலைராஜன்.

கலைராஜனைப் போல், மாற்றுக் கட்சியில் உள்ள சசிகலா சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமும், மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களிடமும் தொடர்புகொண்டு வருகிறார்கள் சசிகலா உறவினர்கள்.

-வணங்காமுடி

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

வியாழன் 11 பிப் 2021