மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

தைரியமா கேக்குறீங்களே நாலு... நிக்கிறதுக்கு இருக்கா ஆளு? கோவையில் சீட்டு பிரிப்பதில் அதிமுக - பாஜக மல்லுக்கட்டு!

தைரியமா கேக்குறீங்களே நாலு... நிக்கிறதுக்கு இருக்கா ஆளு? கோவையில் சீட்டு பிரிப்பதில் அதிமுக - பாஜக மல்லுக்கட்டு!

சசிகலா வருகை, தமிழகம் முழுவதும் அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் கொங்கு மண்டலத்தில் அதன் தாக்கம் பெரிதாக இல்லை; சொல்லப்போனால் சிறியதாகக் கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதுள்ள அதிமுக ஆட்சியைத் தங்களுடைய ஆட்சியாகப் பார்க்கும் கொங்கு மக்களின் மனநிலையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது அங்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எட்டுத் திக்கிலும் நடக்கின்ற வளர்ச்சிப் பணிகளும்கூட அதிமுகவின் கோட்டைக்கு இன்னும் பலம் சேர்த்திருக்கலாம். அதனால் மறுபடியும் நம்மதான் ஜெயிப்போம் என்று அதிமுகவினர் படுதெம்பாக உள்ளனர். அவர்களைவிட அதிமுகவின் கோட்டையை அதிகம் நம்புவது பாரதிய ஜனதா கட்சியினர்தான்.

கோவை மாவட்டத்தில் எங்கே நின்றாலும் வென்று விடுவோம் என்ற நம்பிக்கையில்தான் அதிக சீட்டுகளை வாங்குவதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் படுதீவிரமாகவுள்ளனர். கடந்த மாதம் வரையிலும் வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கும், ஜி.கே.செல்வக்குமாருக்கு கோவை வடக்கும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு கிணத்துக்கடவும் வேண்டுமென்று அதிமுகவிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். இதுபற்றி நம்முடைய மின்னம்பலத்திலும் நாம் எழுதியிருந்தோம். அது போன மாசம்; இது இந்த மாசம் என்பதைப்போல இப்போது சூலுார் தொகுதியையும் சேர்த்து நான்கு தொகுதிகளைக் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பாரதிய ஜனதா மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்...

‘‘நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மைதான். மற்ற மூன்று தொகுதிகளும் ஏற்கெனவே கேட்டுக் கொண்டிருந்ததுதான். இப்போது சூலுாரையும் கேட்கிறோம். முன்பு மூன்று தொகுதிகளைக் கேட்டபோது, கோவை தெற்கு ஒரு தொகுதியை மட்டுமே வானதி சீனிவாசனுக்காகத் தருவதாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகத் தகவல் கிடைத்தது. மொத்தம் மூன்று கேட்டால் ஒன்றுதான் கிடைக்கும் என்று தெரிவதால், கோவையில் மட்டும் நான்கு தொகுதிகளைக் கேட்க முடிவு செய்திருக்கிறோம். அதனால் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். அநேகமாக கோவை தெற்கும், கிணத்துக்கடவும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது!’’ என்றார்.

இந்தத் தகவலை கோவை அதிமுகவின் மிக முக்கியமான நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, பலத்த சிரிப்புடன் மறுத்த அவர் நம்மிடம் மேலும் சில விஷயங்களையும் கூடுதலாகத் தெரிவித்தார்...

‘‘அவர்கள் எத்தனை சீட்டுகள் வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள கோவையில் பாரதிய ஜனதாவுக்கு சீட்டுகளை அதிகம் ஒதுக்குவது எங்களுடைய கட்சிக்குத் தேவையில்லாத சுமையையும் இழப்பையுமே ஏற்படுத்தும். பெரிய இடத்திலிருந்து பலமான ஆதரவுடன் சீட் கேட்பதால், வானதி சீனிவாசனுக்குக் கட்டாயம் ஒரு தொகுதி கொடுத்தே ஆக வேண்டியுள்ளது. அவரை கவுண்டம்பாளையம் அல்லது கிணத்துக்கடவில் நிற்கச் சொல்கிறோம். ஆனால், அவர் கோவை தெற்கில்தான் நிற்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். அங்கு சிறுபான்மையினரும், பட்டியலின மக்களும், அரசு ஊழியர்களும் கணிசமாக இருப்பதால் பாரதிய ஜனதா வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அங்கு வெல்வது மிகவும் கஷ்டமென்று எடுத்துக் கூறியும் அவர் கேட்பதாக இல்லை. அதனால் அவருக்கு கோவை தெற்கு தொகுதியை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அங்கே தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் அம்மன் அர்ஜுனன், கோவை மாநகர மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால் அவருக்கு சீட் ஒதுக்காமல் இருக்க முடியாது. அதனால் அவருக்கு கோவை வடக்கு தொகுதியை ஒதுக்க வேண்டியுள்ளது. அங்கு சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் பிஆர்ஜி அருண்குமார், கவுண்டம்பாளையம் தொகுதிக்குப் போக விருப்பமில்லை என்று கூறிவந்தார். இப்போது போவதற்குத் தயாராகிவிட்டார். ஆனால் அமைச்சரின் வலதுகரமாகவுள்ள இன்ஜினீயர் சந்திரசேகர் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்காக பகீரத முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார். ஏற்கெனவே அவர் வசிக்கும் பகுதியிலும், தொகுதிக்குட்பட்ட வேறு சில பகுதிகளிலும் ஏராளமான பணிகளைச் செய்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, தொகுதியைத் தயார்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தராமல் அம்மன் அர்ஜுனனை அங்கே நிறுத்தினால் மக்களும் வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. அதனால் அந்தத் தொகுதியும் கைநழுவிவிடும் ஆபத்து இருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் பாரதிய ஜனதா தமிழகத் தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்கிறோம். நாலு தொகுதிகளைக் கேட்டாலும் அங்கேயெல்லாம் நிறுத்துவதற்கு ஆள் இருக்கிறதா என்று எங்கள் தொண்டர்களே கிண்டலடிக்கிறார்கள். அதனால் கோவையில் பாரதிய ஜனதாவுக்கு ஒரேயொரு தொகுதிதான் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது’’ என்று தெளிவுபடுத்தினார்.

தமிழகத்திற்கு வரும் 14ஆம் தேதியன்று பிரதமர் மோடி வரும்போது, அவரை கோவைக்கும் அழைத்துச் செல்ல வேண்டுமென்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக நிர்வாகிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். கோவையில் அதிகமான சீட்களை வாங்குவதற்கான ஒரு யுக்தியாக இது இருக்கலாம் என்று அதிமுகவினர் நினைக்கின்றனர். பிரதமரே இதுபற்றி அதிமுக தலைமையிடம் ஏதாவது சொல்வார் என்று பாரதிய ஜனதா கட்சியினர் நம்பிக்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. அப்படி ஒருவேளை ஏதாவது க்ளிக் ஆகி, கோவையில் பாரதிய ஜனதாவுக்குக் கூடுதலாக சீட் தரப்பட்டால், அது ஜாக்பாட்தான். ஆனால் அது யாருக்கான ஜாக்பாட் என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில்தான் தெரியவரும்.

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வியாழன் 11 பிப் 2021