சவாலுக்கு சசிகலா தயார்: சந்திக்கப்போகும் அமைச்சர்கள் யார் யார்?

உலகச்சரித்திரத்தில் ஊழல் வழக்கில் சிறை சென்று திரும்பிய ஒருவருக்கு இப்படியொரு பிரமாண்டமான வரவேற்பு வேறு எங்காவது கிடைத்திருக்குமா... இணையத்தில் தேடினால் கூகுளே குழம்பிப்போய்விடும். இனி அந்தக் குழப்பமில்லை. வெற்றிநடைபோடும் தமிழகம், அந்தக் குறையையும் தீர்த்து வைத்து விட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைவாசத்தை முடித்து விட்டு, விடுதலையாகி தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு நேற்று தரப்பட்ட அதகள வரவேற்பு, தமிழர்களின் ‘பெருமையை’ தரணியெங்கும் பறைசாற்றியிருக்கும். சரியோ, தப்போ ஆனால் நேற்று சசிகலாவுக்குக் கொடுத்த அமர்க்கள வரவேற்பு, தமிழக அரசியல் களத்தையே தெறிக்கவிட்டதை எல்லோரும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
அவர் அமைதியாகிவிட்டார், ஒதுங்கிக்கொள்ளப் போகிறார், எதிர்ப்பு அரசியல் செய்வதற்கு அவருடைய உடல் ஒத்துழைக்காது என்று பத்து நாள்களுக்குள் பலவிதமான யூகங்கள், தகவல்கள் பரவி, அதிமுகவினரை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவர் களமிறங்கி அரசியல் ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடப்போகிறார் என்பது நேற்று தெள்ளத் தெளிவாகி விட்டது. ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர் இன்னும் தெளிவாக இருப்பதும் நேற்று தெரிந்துவிட்டது. திமுகவுக்கு எதிரான துருவ அரசியலையே அவரும் தொடரப் போகிறார்; அதிமுகவில் மீண்டும் இணைவது அல்லது அதிமுகவையே கைப்பற்றுவது என்பதுதான் அவரின் முதல் நகர்வாக இருக்கப் போகிறது. அதற்குப் பின் தீவிரமான திமுக எதிர்ப்பு அரசியல்தான் அவருக்கும் ஆயுதமாக இருக்கும். நேற்று அவர் பேசிய சில வார்த்தைகளிலிருந்து அதிமுக, அமமுக தொண்டர்கள் புரிந்து கொண்டது இதை மட்டும்தான்.
Took nearly 22hrs for Mrs.#Sasikala to reach chennai frm Blr
— Gomathi Sivam (@GomatiSivam) February 9, 2021
Close to 8million ppl said to have took part in the procession
Biggest Behemoth show of strength tat TN have ever witnessed recently🔥🔥#TNwelcomesசின்னம்மா #WelcomeRajamadha #ADMK #Chinnamma #tuesdaymotivations pic.twitter.com/qscwi83aBU
இந்த இலக்கை நோக்கிச் செல்வதற்கு அவர் வகுத்துள்ள திட்டங்கள் என்னென்ன... உண்மையைச் சொல்வதானால் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து சசிகலாவிடமே பெரிதாக எதுவும் திட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் துரோகிகளை ஒரு கை பார்ப்பது, அதற்குப் பின் எதிரியைப் பார்க்கலாம் என்ற மனநிலையில் இருப்பதாகத்தான் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
ஆனாலும் அடுத்த சில நாள்களில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து சசிகலாவுக்கு நெருக்கமான சிலர் நம்மிடம் அரிதான சில தகவல்களைப் பகிர்ந்தனர்...
‘‘சிறையிலிருந்து வெளியே வருவதற்கு முன்பு வரையிலும், முதல்வர் எடப்பாடியும், அமைச்சர்களும் இப்படி நடந்து கொள்வார்கள் என்று சின்னம்மா எதிர்பார்க்கவில்லை. சற்று நிதானமாக, பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில்தான் அவர் இருந்தார். ஆனால் கட்சிக்கொடி காரில் இருக்கக் கூடாது; பேரணி நடத்த அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் ரொம்பவே எதிர்ப்புக் காட்டிய பின்புதான் அவரும் ஆக்ரோஷமாகிவிட்டார். நான்காண்டுகளாக தனக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொல்லாமல் இணக்கமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் இப்போது திடீரென இவ்வளவு எதிர்ப்பு காட்டுவதற்குக் காரணமென்ன என்று அவர் விசாரித்துக்கொண்டே இருந்தார். அதில் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கமான சிலர், அமைச்சர்கள் சிலரைத் தூண்டிவிடுவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.
உடனே கோபமான சின்னம்மா, அந்த அமைச்சர்களையே போனில் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார். சிலரிடம் அம்மா இருந்தபோது அவர்களுக்கு சின்னம்மா செய்த உதவிகளைச் சுட்டிக்காட்டி உருக்கமாகப் பேசியிருக்கிறார். சிலரிடம் ஆவேசமாகவும் பேசி, ‘நாமெல்லாம் இணைந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும். இல்லாவிட்டால் திமுக ஜெயித்து விடும். நம் கட்சியை எளிதில் அழித்துவிடுவார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார். சின்னம்மாவைப் பொறுத்தவரை, தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அதிமுக–அமமுக இணைப்பு நடக்க வேண்டுமென்று நினைக்கிறார். அதற்கு டெல்லியும் உதவுமென்று, அங்கேயும் பேசிக் கொண்டிருக்கிறார். வருகிற 14 ஆம் தேதியன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவர் இங்கே வருவதற்கு முன்பாகவே பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரையும் தன்னை வந்து சந்திக்க வேண்டுமென்று சின்னம்மா நினைக்கிறார். அதற்காகவே அவரே ஒவ்வொருவரிடமும் போனில் பேசிக்கொண்டிருக்கிறார். அதில் சிலர் வருவதற்குத் தயாராகிவிட்டார்கள். மூன்று அமைச்சர்களும் அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. எம்எல்ஏக்கள் இல்லாத பலர் கண்டிப்பாக சந்திப்பார்கள். இன்று நடந்த வரவேற்பைப் பார்த்தே டெல்லி ஒரு முடிவை எடுத்திருக்குமென்று நம்புகிறோம்!’’ என்றார்கள்.
ஒருவேளை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் சசிகலாவை சந்திக்கச் சென்றால், கட்சிகளை இணைக்க வேண்டுமென்று பிரதமர் மோடியே முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீருக்கும் அழுத்தம் கொடுப்பார் என்று சசிகலா தரப்பு நம்புவது அப்பட்டமாகத் தெரிகிறது. அது நடக்காத பட்சத்தில், தேர்தலில் அதிமுக வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்கு சசிகலாவே தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்; அப்படி தோற்றுப்போனால், கடந்த 1989 ஆம் ஆண்டில் அதிமுக உடைந்ததில் திமுக வென்று ஆட்சியைப் பிடித்தபின், மீண்டும் கட்சி இணைந்ததைப் போல மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக சசிகலா நம்புவதாகவும் அமமுக நிர்வாகிகளும் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.
சசிகலா தரப்பின் இந்த நகர்வுகளை தமிழக உளவுத்துறை தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவிலிருந்து யார் யார் சசிகலாவைச் சந்திக்கத் தயாராகிவருகிறார்கள் என்பது பற்றி அவ்வப்போது முதல்வருக்கு தகவல்களும் அனுப்பப்படுகின்றன. அப்படி அவரைச் சந்திக்க நினைக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் பலரையும் சமாதானப்படுத்தித் தக்க வைப்பதற்கான முயற்சிகளையும் அதிமுக தலைமை எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இதுவரை கட்சியால் பெரிதும் பலன் பெறாத பலரும் போவதைத் தடுக்கவே முடியாது என்றே தெரிகிறது. அதனால் அதிமுக தலைமையின் முயற்சிகள் எந்தளவு பலன் தருமெனத்தெரியவில்லை.
சசிகலாவின் விடுதலை, பேட்டி, நடவடிக்கைகளுக்கு, அதிமுகவில் மட்டுமில்லை; திமுகவிலும், பாரதிய ஜனதாவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. திமுகவைப் பொருத்தவரை, சசிகலாவின் இப்போதைய நடவடிக்கை, திமுகவின் தேர்தல் வெற்றிக்குப் பெரிதும் உபயோகமாக இருக்கலாம் என்று ஸ்டாலின் நம்புவது தெரிகிறது. தமிழகம் நோக்கி சசிகலா வருவது பற்றி, நேற்று மேடையில் பேசிய ஸ்டாலின், ‘நடக்க வேண்டியது நடக்கும்’ என்று சொன்னதன் அர்த்தம் அதுவாகத்தான் இருக்க முடியும். அதேபோல தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக பலமாக வேண்டுமென்று நினைக்கும் பாரதிய ஜனதா தலைமை, அதற்குப் பின் அதிமுகவையும் பலவீனப்படுத்தவே முயற்சி செய்யுமென்றே அரசியல் விமர்சகர்கள் பலரும் வெவ்வேறு ஊடகங்களிலும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தமிழகம் வரும் முன் சசிகலாவை யார் யார் சந்திக்கப் போகிறார்கள் என்பது இன்னும் ஒரு வாரத்துக்குள் தெரிந்துவிடும். அதற்குள் முக்கியமானவர்கள் யாரும் சந்திக்காவிடில் அதற்குப் பின் யாரும் சந்திக்க மாட்டார்கள் என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் சசிகலா வெளியில் வந்துள்ள தற்போதைய காலகட்டம், அதிமுகவுக்கு ஒரு மாபெரும் சிக்கலான தருணமாகவுள்ளது.
ஒருவேளை ஆறு மாதங்களுக்கு முன்னால் சசிகலா வெளியில் வந்திருந்தால் ஆட்சி, அதிகாரத்தை வைத்து யாரும் கட்சியிலிருந்து நகராமல் பார்த்துக் கொண்டிருக்க வாய்ப்புண்டு. இப்போது தேர்தல் நெருங்கி விட்டதால் அதற்கான வாய்ப்பும் அதிமுகவுக்கு கைநழுவியிருக்கிறது.
சசிகலாவை யார் சந்திக்கிறார்களோ இல்லையோ...தேர்தலுக்கு முன் மாபெரும் சவாலை சந்திக்கப் போகிறது அதிமுக!
–பாலசிங்கம்