மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

இஸ்லாமியர்களின் 20 ஆண்டுக் கோரிக்கை: வேலுமணி வியூகத்தால் திகைக்கும் திமுக

இஸ்லாமியர்களின் 20 ஆண்டுக் கோரிக்கை:  வேலுமணி வியூகத்தால் திகைக்கும் திமுக

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லி பாஜக மேலிடத்துடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகிறார் என்ற விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும்... தனது கோவை மாவட்டத்திலும், தொண்டாமுத்தூர் தொகுதியிலும் அடர்த்தியாக இருக்கும் இஸ்லாமியர்கள் மீதான அணுகுமுறையிலும் தெளிவாக இருக்கிறார்.

அதிமுக பாஜக கூட்டணியால் தொண்டாமுத்தூர் தொகுதியில் இருக்கும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் வேலுமணிக்கு எதிராகத் திரும்புவார்கள் என்று திமுக எதிர்பார்த்திருக்க, வேலுமணியின் அடுத்தடுத்த வியூக நகர்வுகள் திமுகவை திணறடித்திருக்கின்றன.

கோவையில் இஸ்லாமிய சமுதாய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுகுனாபுரம் பகுதியில் 1.75 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.20 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இஸ்லாமிய மக்களின் மயானத்தை (கபர்ஸ்தான்) கோவை மாவட்ட இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகளிடம் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேற்று (பிப்ரவரி 6) ஒப்படைத்தார்.

இஸ்லாமியர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் வேலுமணி, “இஸ்லாமிய மக்களுக்கு இப்பகுதியில் கபர்ஸ்தான் அமைப்பது பற்றிய பிரச்சினை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தது. இந்த சூழலில் இஸ்லாமிய சகோதரர்கள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.

2014 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் அழைத்து சென்று கோரிக்கை மனுவை அளிக்க ஏற்பாடு செய்தேன். தற்பொழுது அது நிறைவேறியுள்ளது. என் வீட்டை சுற்றி ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளது. எங்களிடம் வேறுபாடுகள் எப்போதும் இல்லை. எல்லோரும் எங்களுக்கு சகோதரர்களே.

மயானத்தின் அனுமதிக்காக அரசிடம் அலுவலக உதவியாளரை போல் பலமுறை கோப்புகளை எடுத்து சென்று அனுமதி பெற்றுள்ளேன். மேலும் அந்த இடத்தை சீரமைக்க ஜமாத்தாரை நானே நேரில் அழைத்து கருத்துக்களை கேட்டு. அவர்களின் விருப்பப்படி மயானம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத விதத்தில் எல்லா வசதிகளுடனும் அமைத்து கொடுத்துள்ளோம். கூடுதலாக முன்புற நிழற்குடை, தொழுகை நடைபெறும் இடம், கழிப்பறை என அனைத்து வசதிகளுடனும் அமைத்துள்ளோம். இது போன்ற கோரிக்கையை நிறைவேற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன்”என்ற வேலுமணி.

தொடர்ந்து பேசுகையில், “இதற்கு முன் தமிழக முதல்வரிடம், நானும் தமீமுன் அன்சாரி எம்,எல், ஏ வும் சென்று, ஹஜ் பயணத்திற்க்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை ரத்து செய்த விவகாரத்தை பேசினோம். இதனைக் கேட்ட நமது முதல்வர், இதனால் என்ன நாம் நிதி ஒதுக்கி கொடுக்கலாம் என்று உடனடியாக ஆணைபிறப்பித்தார். மேலும், ஹஜ் செல்லும் பயணி களுக்கு ஹஜ் தங்கும் இடம் வழங்கியது நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்.

நாகூர் தர்காவிற்கு குளம் சீரமைக்க கோரிக்கை வைத்தவுடன் 5.37 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டு இரண்டு நாளில் அந்த நிதி ஒதுக்கி சீர் செய்ய உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி”என்று கூறினார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் வெளிப்படையாக பேசுகிறாரே என்று கூட்டத்தில் விவாதங்கள் எழுந்துகொண்டிருந்தபோதே.... “ அதிமுகவை பொறுத்தவரை, என்னைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு, கொள்கை என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்துக்கொடுத்தது. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

.மூன்று மேல் சபை எம் பி க்கான வாய்ப்பு வந்தவுடன் நமது சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் அந்த பதவியில் இருக்கவேண்டும் என்று முதல்வரிடம் கூறி , முகமது ஜான் அவர்களுக்கு வாய்ப்பளித்து எம்.பி ஆக்கியது நமது முதல்வர் தான். கோவில்களுக்கு நிதி ஒதுக்குவதுபோல் முதல் முறையாக இஸ்லாமியர்களின் பள்ளி வாசலுக்கு நிதி ஒதுக்கியது நமது அரசுதான்.

அதுமட்டுமில்லாமல் அதற்கு அவர்கள் கட்ட வேண்டிய பணத்தையும் அரசே ஏற்றுக்கொண்டு உதவி செய்துள்ளது. 10 வருடத்தில் நான் செய்த உதவிகள்போல் இஸ்லாமிய மக்களுக்கு வேறுயாரும் உதவி செய்திருக்க முடியாது.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நடைபெறும் திருமண விழாவிலும், இஸ்லாமிய மணமக்களுக்கு அவர்கள் முறைப்படி திருமணத்தை நடத்தி வைக்கின்றோம்.

அன்று சொன்னதை இன்று மீண்டும் சொல்கிறேன் இஸ்லாமிய மக்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், இஸ்லாமிய மக்களுக்காக குரல் கொடுக்க முதல் ஆளாக நிற்பேன். மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் .அது போன்ற சூழல் வராமல் தமிழக அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்கும் சி.ஏ.ஏ போராட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்வது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைப்பேன்

தேர்தல் வரும்போது வேல்பிடிக்கும் ஆள் நானில்லை. நான் மாலையிட்டு சபரிமலைக்கு போகிறேன். எல்லா கோவிலுக்கும் போகிறேன்.சில கல்லூரிகளிலும், பள்ளிகளில் இஸ்லாமியர்களுக்கு இடம் அளிக்க மறுப்பு தெரிவித்தார்கள். அதை அந்த நிர்வாகத்துடன் பேசி சரி செய்துள்ளேன்”என்று வேலுமணி பேசிய பேச்சு கோவை திமுகவுக்குள் அதிர்வுகளை உண்டாக்கியிருப்பது உண்மைதான்.

-வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 7 பிப் 2021