மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

சத்திரியனாகும் ராமதாஸ்: சத்தியமாய் இலக்கு இடஒதுக்கீடுதானா?

சத்திரியனாகும் ராமதாஸ்: சத்தியமாய் இலக்கு இடஒதுக்கீடுதானா?

ஒன்று இரண்டு இல்லை; இரண்டு மாதங்களில் ஆறு கட்டப் போராட்டங்களை நடத்தி முடித்துவிட்டு ஆவேசத்தோடு காத்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். போராட்டங்களில் கூடியவர்கள் ஒரு லட்சம் இரண்டு லட்சமில்லை; பத்து லட்சம் பேர் என்று அவரே சொல்லியிருக்கிறார். அதெல்லாம் இப்போது முக்கிய விஷயமில்லை. இந்தப் போராட்டங்கள் எல்லாம் சத்திரிய மக்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தவில்லை என்று தன்னிடம் வருத்தப்பட்ட இளைஞர்களுக்கு அவர் சொன்ன பதில்தான் கவனிக்கத்தக்கது...‘‘அப்படியொரு போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை இருக்காது என்று நம்புகிறேன். ஒரு வேளை தேவை ஏற்பட்டால் அதற்கு நானே களமிறங்கி தலைமையேற்று நடத்துவேன். காத்திருங்கள்!’’

இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பு வந்து விடுமென்கிற சூழ்நிலையில் ராமதாஸ் அறிவித்துள்ள இந்த சத்திரியப் போராட்டம் எதற்காக, உண்மையிலேயே இது வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடுக்கான போராட்டம்தானா என்று தெருவுக்குத்தெரு தீயாய் நடக்கின்றன அரசியல் பட்டிமன்றங்கள். அரசியல்வாதிகள் ஐந்து பேர் கூடிப்பேசினாலும், பத்திரிக்கையாளர்கள் பத்துப் பேர் பார்த்துக்கொண்டாலும் அதிகமாக பகிரப்படுகிற விஷயம், ராமதாஸின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எப்படியிருக்கும் என்பதாகத்தான் இருக்கிறது. வெவ்வேறு கட்சிகள், களங்களில் இருப்பவர்கள் இந்த விவகாரத்தை அலசும்போதும் ஒருமித்ததாக ஒரேயொரு கருத்து மட்டும் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யப்படுகிறது. அதாவது, வெளியில் ஆவேசமாகப் போராடுவது போல் காட்டிக்கொண்டு, உள்ளுக்குள்ளே ‘வேறு’ விஷயங்களை ராமதாஸ் எதிர்பார்ப்பார் என்பதுதான் அந்த பொதுக்கணிப்பு. பரவலாக இதுபோன்று ஒரு கருத்துப் பரவுவதற்கு ராமதாஸின் முந்தைய கால அரசியல் நகர்வுகள்தான் அடித்தளம் போட்டுக்கொடுத்திருக்கின்றன. அதை அவர்களே மறுக்கமுடியாது.

ஜெயலலிதாவை சர்வாதிகார ராணி என்றார். ஊழலின் அடையாளமாகவுள்ள ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக்கூடாது என்றார். அமைச்சர்களை டயர் நக்கி என்று கேவலமான வார்த்தைகளில் புரட்டியெடுத்தார். எல்லாவற்றையும் அழித்துவிட்டு, 2019 பாராளுமன்றத் தேர்தலில் ‘அம்மா’ ஆட்சி நடத்தும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். இது சமீபத்திய சான்று மட்டுமே. 2001 ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும்போதே, மத்திய அமைச்சர்களாக இருந்த பாமக எம்பிக்கள் சண்முகம், பொன்னுசாமியை ராஜினாமா செய்ய வைத்து விட்டு, ‘அன்புச்சகோதரி’ என்று ஜெயலலிதாவிடம் பாசத்தைப் பொழிந்து பாதையை மாற்றி அதிமுக கூட்டணியில் இணைந்தார். அதற்கு முன் அவர் ஜெயலலிதாவைப் பேசியதெல்லாம் ‘வேற லெவல்’ விமர்சனங்கள்.

ரஜினியை ‘சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி’ என்று கடுமையாக விமர்சித்த ராமதாஸ், ஏதோ ஒரு காரணத்துக்காக, கடந்த 2019 ஆம் ஆண்டில், கோவாவில் அவருக்கு விருது கொடுக்கப்பட்டபோது வாழ்த்துச் சொல்லப்போக, சேறு அவருடைய முகத்தின் மீது தாறுமாறாக வந்து விழுந்தது. தோண்டியெடுத்துப் பார்த்தால், கடந்த 30 ஆண்டு காலத்தில் அவருடைய அரசியல் பயணம், கொல்லிமலைக்குப் போகும் மலைப்பாதை போல அதிகமான ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டிருக்கும். அவருடைய அரசியல் டிசைன் அப்படி!.

ராமதாஸின் அறிக்கைகளையும் போராட்டங்களையும் வைத்து மக்கள் மனம் போன போக்கில் பேசித் தீர்ப்பதற்கு காரணங்கள் இவைதான். ஆனால் இடையிடையே பாமக சுயபரிசோதனை செய்யாமலும் இல்லை. ராமதாஸ்க்கு இப்போது வயது 82. ஐந்தாண்டுகளுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தபோதே, தனித்துப்போட்டி என்று தைரியமாகத்தான் இருந்தார் ராமதாஸ். அது அவருடைய தனிப்பட்ட முடிவாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரும் ஏற்றுக்கொண்ட முடிவுதான் அது. அந்தத் தேர்தலில் பாமக படுதோல்வியைச் சந்தித்தாலும், வடக்கு மாவட்டங்களிலும் வன்னியர்களிடமும் மட்டுமே செல்வாக்குப் பெற்ற கட்சி என்பதைத் தாண்டி, பாமகவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடமும், மிகமுக்கியமாக படித்தவர்களிடமும் பரவலான ஓர் அறிமுகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது என்பது உண்மை. அதே பாதையில் பாமக பயணித்திருக்கலாம். திமுகவையும் அதிமுகவையும் அழுத்தமாகவும் ஆழமாகவும் புள்ளி விபரங்களுடனும் அரசியல்ரீதியாக விமர்சிப்பதற்கு ராமதாஸை விட்டால் இன்றைக்கு ஆளில்லை என்பதுதான் நிஜம். அதனால்தான் அவர் இப்போது சத்திரியனாக போராட்டத்தில் களமிறங்குகிறார் என்றால், சத்ரியன் விஜயகாந்த் போல, ‘பழைய பன்னீர்செல்வமாக’ அவர் மாறிவிட்டாரா என்ற கேள்விதான் அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது.

ராமதாஸின் மனநிலையையும் அவருடைய நகர்வுகளையும் நன்கறிந்த பாமக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்...

‘‘அய்யாவைப் பொருத்தவரை, இந்தத் தேர்தலை மிகமுக்கியமான தேர்தலாக அவர் கருதுகிறார். அதிலும் இதுதான் இடஒதுக்கீடு கோரிக்கையை வென்றெடுக்க சரியான தருணம் என்றும் நினைக்கிறார். ‘கட்சி நலன் என்று சொல்லியே, நாம் செய்யும் தேர்தல் கால அரசியல்தான் நமது மக்களுக்கு நம் மீதான நம்பிக்கையை இழக்க வைத்திருக்கிறது. மற்ற சமுதாயத்தினர் நம்மைப் பற்றிப் பேசுவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் நம் சமுதாய மக்களிடமும் நமக்கு ஆதரவு இல்லாமல் போகும்பட்சத்தில் இத்தனை காலமாக நாம் உருவாக்கிய சங்கம், கட்சி கட்டமைப்பு எல்லாமே உருக்குலைந்து விடும். பின்பு மீண்டும் அதைக் கட்டமைப்பது அத்தனை எளிதான விஷயமில்லை’ என்பதே அய்யாவின் நிலைப்பாடு. வேறு எந்தக் காரணத்துக்காகவும் அவர் இந்த முறை மசியமாட்டார்.

அதிமுக தலைமையின் அசைவுகளையும் அவர் கவனித்துக்கொண்டே இருக்கிறார். அவர்களைப் பொருத்தவரை, கூட்டணியிலிருந்து பாமக வெளியேறினால் வடமாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும். ஏற்கெனவே தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் அமமுக தனித்து நிற்பதால் அதிமுகவுக்கான தேவர் சமுதாய வாக்குவங்கியில் பாதிப்பு ஏற்படும். எனவே எந்த விலை கொடுத்தாவது பாமகவை வெளியே விடக்கூடாது என்றுதான் பழனிசாமியும் பன்னீரும் நினைக்கின்றனர். அதேநேரத்தில் ராமதாஸ் கேட்கிறபடி, வன்னியர்களுக்கு 20 சதவிகித உள் இடஒதுக்கீடு கொடுத்தால் மற்ற சமுதாயத்தினரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அது இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். சட்டரீதியாகவும் அது சாத்தியமில்லை என்று முதல்வருக்கு பலரும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் மராத்திய மக்களுக்கு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் 16 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முந்தைய பாரதிய ஜனதா தலைமையிலான மாநில அரசு, சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான சட்டம் 2018 என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் அரசியலமைப்பின் 102-வது திருத்தத்தின்படி, சில சமூகங்களுக்கு குடியரசுத் தலைவர் அனுமதியளித்தால் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அந்த சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துவிட்டது. இதையும் முதல்வரிடம் சொல்லி, ‘தேர்தலுக்குப் பின் பார்க்கலாம் என்று ராமதாஸிடம் பேசுங்கள்’ என்று ஆலோசனை தருகிறார்கள்.

அதுபற்றி அய்யாவிடம் அதிமுக தரப்பில் சொன்னபோது, ‘எனக்கும் சட்டச்சிக்கல்கள் தெரியும்; ஏற்கெனவே பல ஆணையங்கள் அமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உள் இடஒதுக்கீடு தரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். தர நினைத்தால் தரலாம். உங்களால் தர முடியுமா என்பதை உறுதிப்படுத்துங்கள். இல்லாவிட்டால் திமுகவுடன் போகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏற்கெனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்த உறுதியை ஸ்டாலின் தந்திருக்கிறார். அப்போது நாங்கள் எதிர்த்ததை இப்போது விமர்சிப்பார்கள். அதையெல்லாம் நாங்கள் சமாளித்துக் கொள்வோம்.’ என்றுதான் அவர்களுக்குப் பதில் கொடுத்திருக்கிறார்.

முன்னாள் எம்பியும் அய்யாவின் உறவினருமான தன்ராஜின் மகன் மூலமாக சபரீசனுடன் பேசும் தகவல் ஆளும்தரப்புக்குப் போவதற்கும் அவரே ஏற்பாடு செய்துவிட்டார். அதுபற்றியும் அவர்கள் விசாரித்து உண்மை என்று தெரிந்துகொண்டார்கள். ஆனால் திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு அவர்களும் தயாராக இல்லை; அய்யாவும் தயாராக இல்லை. எப்படியாவது அதிமுக கூட்டணியிலிருந்து பாமகவைக் கழற்றிக் கொண்டு வந்து தனியே நிறுத்திவிடுவதுதான் நல்லது என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதுவும் அய்யாவுக்குத் தெரியும். அதிமுகவிடம் பேசி, உள்இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஒரு யுக்தியாகவே அதை அவர் பயன்படுத்துகிறாரே தவிர, திமுகவுடன் போவதில்லை என்பதில் அவரும் உறுதியாக இருக்கிறார். எங்களுக்குத் தெரிய, உள்இடஒதுக்கீடு தர அதிமுக ஒப்புக்கொண்டால் அந்தக் கூட்டணியில் பாமக தொடரும். இல்லாவிட்டால் தனித்து நிற்கவே வாய்ப்பு அதிகம்!’’ என்றார்கள்.

ராமதாஸின் அரசியல் பயணத்தில் இது மிக முக்கியமான தேர்தல். அதனால் வடக்கு மாவட்டங்களில் மீண்டும் வலுவாகக் காலுான்றுவதற்கான தருணமாகவும், தேர்தலை போர்க்களமாகவும், உள்இடஒதுக்கீடு கோரிக்கையை அதற்கான ஆயுதமாகவும் பார்க்கிறார். இந்தத் தேர்தலில் ஒளிவு மறைவென்று எதுவுமின்றி அவர் செயல்படுவார் என்பதுதான் அவருடைய கட்சியினரின் கணிப்பாக இருக்கிறது. கட்சிக்காரர்கள் நலனுக்காகவோ, காசுக்காகவோ தேர்தலுக்குத் தேர்தல் பாதையை மாற்றும் கட்சி என்று எடுத்துள்ள அவப்பெயரைத் துடைத்தெறிவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அவர் இதை பயன்படுத்தப்போகிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அவருடைய தீர்க்கமான முடிவு தேர்தல் வரையிலும் நீடித்தால் ஆச்சரியம்தான்.

பாமக...பாதையை மறக்கும் கட்சியா...பார்வைக்கு மறைவான கட்சியா...பார்ப்போம் பொறுத்திருந்து!

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

ஞாயிறு 7 பிப் 2021