மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

3 முக்கிய கட்சிகளின் பார்வையில்... சசிகலாவின் ரீஎன்ட்ரி!

3 முக்கிய கட்சிகளின் பார்வையில்... சசிகலாவின் ரீஎன்ட்ரி!

சென்னைக்கு நாளை சசிகலா வரும்போது வரவேற்பு எப்படியிருக்கும், வந்து அவர் என்ன பேசப்போகிறார் என்று தமிழகமே தடதடத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது, சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்கக்கூடாது என்று ஆளும்கட்சி தரப்பில் தமிழக காவல்துறை தலைமைக்கு மனுவுக்கு மேல் மனுக்கள் குவிக்கப்படுகின்றன. அதனால் பேரணி நடக்குமா, நடக்காதா, சசிகலாவின் எதிர்வினை எப்படியிருக்குமென்று யூகங்கள் றெக்கை கட்டுகின்றன. நாளை அவர் சென்னைக்கு வரும்போதே, அவருடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வு எந்த திசையிலிருக்கும் என்பது தெரிந்துவிடும்.

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்...

சசிகலா குறித்தும், அவருடைய வருகை ஏற்படுத்தும் அதிர்வுகள் குறித்தும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பு இருக்கும். அதுதான் அரசியல் பார்வை. அதன் அடிப்படையில்தான், அந்தக் கட்சிகளின் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் இருக்கும். அந்த வகையில், அதிமுகவிலும், திமுகவிலும், அதிமுகவை மறைமுகமாக இயக்குவதாக பலராலும் சுட்டிக்காட்டப்படும் பாரதிய ஜனதாவிலும் சசிகலாவைக் குறித்து நடக்கும் விவாதங்கள் எப்படியிருக்கின்றன என்பது பற்றி, இந்த மூன்று கட்சிகளிலும் உள்ள பல்வேறு சீனியர்கள், கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் என பலரிடமும் கருத்துகளைக் கேட்டோம். ஒரே கட்சியில் இருக்கும் பலர் கூறும் கருத்துக்களிலும் சின்னச்சின்ன முரண்பாடுகள் இருந்தாலும், அந்தக் கட்சியினரின் பொதுப்பார்வை இதுதான் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகத் தெரிய வந்திருக்கிறது.

முதலில் அதிமுகவில் என்ன நினைக்கிறார்கள்...

சசிகலா மீண்டும் வரும்போது, கட்சிக்குள் பெரும் முட்டல், மோதல் வெடிக்குமென்று வெளியில் இருக்கும் பலரும் நினைக்கிறார்கள். கட்சிக்குள் இப்போது வரை அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஏன் இல்லை என்பதற்கு கட்சி நிர்வாகிகள் சொல்லும் காரணமும் நம்பும்படியாகத்தான் இருக்கிறது.

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் இந்த நிலையை அடைவதற்கு சசிகலாவும் ஒரு முக்கியப் படியாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு முன்னும் அவர்கள் கட்சிக்காக அடிமட்டத்திலிருந்து உழைத்தவர்கள்தான். சசிகலா செய்த உதவிக்கு ஈடாக அவர்கள் ஏற்கெனவே நிறையச் செய்துவிட்டார்கள். இதை இரண்டு தரப்புமே மறுக்கமுடியாது. அம்மா இருக்கும்வரை, சீட் வாங்குவதில் இருந்து ஒவ்வொரு மாதமும் சசிகலாவின் குடும்பத்தினரான தினகரன், திவாகரன், வெங்கடேஷ், ராவணன் என பல்வேறு அதிகார மையங்களுக்கும் அவர்கள் கையும் கட்டி, கப்பமும் கட்டி பணிவிடை செய்தார்கள். எத்தனையோ தருணங்களில் மிகவும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் அன்பு காட்டியதும் அச்சப்பட்டதும் அம்மாவுக்குதான். ஆனால் அவரை திரை மறைவிலேயே வைத்திருந்து, அவருடைய அதிகாரத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு இவர்களே கட்சியையும் ஆட்சியையும் ஆக்கிரமித்தார்கள். ஆனால் கடந்த நான்காண்டுகளாக முதல்வர், அமைச்சர்கள் உட்பட அனைவரும் மிகப்பெரிய சுதந்திரத்துடன் வலம் வருகிறார்கள். சம்பாதிப்பதில் கட்சிக்கும் கொஞ்சம் கொடுக்கிறார்கள்; கெளரவமாக வலம் வருகிறார்கள். இப்போது அம்மாவே இல்லை என்ற நிலையில், இவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து சேர்ப்பது தேவையில்லாத வேலை; வம்பை விலை கொடுத்து வாங்குகிற விஷயம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்’’ என்றார்கள்.

இப்படிச் சொன்னவர்களிடம், சசிகலாவைப் புறக்கணிப்பது அவருடைய சமுதாயத்தைப் புறக்கணிப்பதாக ஆகிவிடாதா என்று கேட்டதற்கு, ‘‘இதற்குத்தான் ஓபிஎஸ் மிகவும் கோபப்படுகிறார். அவர்கள் மட்டும்தான் சமுதாயமா, நானில்லையா என்று கேட்கிறார். அவர்களால் நான் அவமானப்படுத்தப்பட்டபோது சமுதாயம் பார்த்தா அவமானப்படுத்தினார்கள் என்பதுதான் அவரின் கேள்வி’’ என்றார்கள். பழைய வீடியோக்களைப் போட்டு, ‘துரோகிகள், நன்றியில்லாதவர்கள்’ என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவது பற்றியும் நாம் கேட்கத் தவறவில்லை. அதற்கும் அவர்கள் பதில் சொல்கிறார்கள்...

‘‘அம்மாவுக்கு இவர்கள் செய்யாத துரோகமா, அந்தச் சம்பவங்களை இப்போது வெளியில் சொன்னாலும் அந்தக் குடும்பத்தினரால் பதிலே பேசமுடியாது’’ என்று நம்மையே அதிர வைக்கிறார்கள்.

அதிமுக தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு பத்திரிக்கையாளர், இந்த வாதங்களில் உண்மை இருப்பதை ஒப்புக்கொண்டதோடு, முத்தாய்ப்பாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.

‘‘இந்த நான்காண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு தலைவனாக உருவாக்கிக் கொள்ள நிறையவே உழைத்திருக்கிறார்; அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். இதற்கு மேல் ஆட்சியே போனாலும் அவரால் மற்றவர்களுக்கு அடிபணிந்து போவது என்பதை கற்பனை செய்யவே முடியாது. அதுதான் சசிகலாவுக்கு ரீஎன்ட்ரி கொடுக்கவே கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கக் காரணம். பன்னீரைப் பொருத்தவரை, சசிகலாவுக்கு மீண்டும் சேவகம் செய்வதை விட இப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற கெளரவத்தையே தக்க வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமியோடு ஒத்துப்போவதே தனக்கும் நல்லது என்று நினைக்கிறார்!’’ என்று புட்டு வைத்தார்.

ஆக, சசிகலா தரப்புடன் மறைமுகமான தொடர்பில் இருப்பதுபோலவும், சமுதாயரீதியாக பற்றுதலுடன் இருப்பது போலவும், அரசியல் அங்கீகாரம் கொடுத்ததற்காக நன்றியுடன் இருப்பது போலவும் சில அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் காட்டிக்கொள்வதில் உண்மை ஏதுமில்லை என்பது புரிகிறது. சசிகலாவை இப்போதல்ல; இனி எப்போதுமே அதிமுக தலைமை ஏற்குமா என்பது சந்தேகமே.

அடுத்து திமுகவைப் பார்ப்போம்...

நிச்சயம் முடிந்து திருமண நாளுக்குக் காத்திருக்கும் மணமக்களைப் போல, தேர்தல் முடிவு நாளுக்காக ஆவலோடு காத்திருக்கும் உடன்பிறப்புகளுக்கு, அதிமுகவில் நடக்கும் அத்தனை குழப்பங்களும் அல்வாதான். சசிகலாவை அதிமுக தலைமை ஏற்க மறுக்கிறது என்பது அவர்களுக்குள் இன்னும் உற்சாகத்தைத் தந்துள்ளது. தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அதிமுக வாக்குகளைப் பிரிப்பதற்கு சசிகலாவும், தினகரனும் நிச்சயம் உதவுவார்கள் என்பதுதான் இந்த உற்சாகத்திற்குக் காரணம்.

அதற்கேற்ப இப்போது சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் சென்னைக்குள் சசிகலா வந்ததும் பேரணியில் ஒரு கலவரம் வெடிக்கும். அப்படியே நடக்காவிட்டாலும், முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக சசிகலா ஏதாவது அதிரடியாகச் சொல்வார்; அதை வைத்து கட்சிக்குள் மிகப்பெரிய களேபரம் வெடிக்கும். மதுரையிலும், தஞ்சாவூரிலும் அதிமுகவினரால் ஓட்டுக்கேட்டுப்போகவே முடியாது. அது திமுக வெற்றிவாய்ப்பை இன்னும் பிரகாசமாக்கிவிடும்...இதுதான் திமுகவிற்குள் இருக்கும் எதிர்பார்ப்பு!

கேமராவை டெல்லிப்பக்கம் திருப்புவோம்....பாரதிய ஜனதா என்ன நினைக்கிறது...

இந்தத் தேர்தலில் அதிமுகவிடமிருந்து குறைந்தபட்சம் 60 சீட்டுகளையாவது வாங்கிவிட வேண்டுமென்று, ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்திருந்த பாரதிய ஜனதாவுக்கு, அதை அழுத்திக் கேட்பதில் சில நெருடல்கள் இருந்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீரும் பாரதிய ஜனதா தலைமைக்கு யார் அதிக நெருக்கம் என்பதைக் காட்டிக்கொள்வதற்கு ரொம்பவே மெனக்கெடுபவர்கள். மத்திய அரசின் எல்லாத் திட்டங்களையும் ஆதரித்தாலும் தேர்தல் என்று வரும்போது, 60 சீட்டுகளைக் கொடுப்பதற்கு ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தது பாஜக தலைமை. அவர்களுக்குக் கிடைத்த தகவலின்படி, அதிமுக கூட்டணியில் 40 சீட்கள் கிடைப்பதே கஷ்டம் என்ற நிலைமைதான் இருந்தது.

ஆனால் சசிகலா இப்போது வந்திருப்பதால், ‘கண்டிப்பாக 60 சீட்கள் வேண்டும். இல்லாவிட்டால் அமமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சசிகலாவை பரப்புரைக்குப் பயன்படுத்துவோம்’ என்று இப்போது மிரட்டியே 60 சீட்களைக் கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சசிகலாவுக்கு பழைய விவகாரங்கள் எல்லாம் தெரியும் என்பதால், அவரும், மத்திய அரசின் அதிகாரத்துறைகளும் சேரும்போது தங்களுக்கு பலவிதமான சிக்கல்கள் வருமென்று தெரிந்து கேட்கும் சீட்டுகளை அதிமுக தலைமையில் கொடுத்துவிடுவார்கள்...இப்படித்தான் பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைவர்கள் பலரும் தாறுமாறாக கணக்குப்போடுவதாகத் தகவல்கள் வருகின்றன. டெல்லியின் கண்ணசைவுகளும் இந்த கணக்கிற்குக் காரணமாயிருக்கலாம்.

இப்படியாக...சசிகலா வருகையை வைத்து, ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு விதமான கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களின் மனக்கணக்குதான் என்னவாயிருக்கப் போகிறதோ?

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 7 பிப் 2021