மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

சசிகலா வருகை: சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகிறதா?

சசிகலா வருகை: சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகிறதா?

ஜெயலலிதாவுடன் இணைந்து சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா தனது தண்டனை காலத்தை முடித்துவிட்டு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

2017 பிப்ரவரி 15ஆம் தேதி மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதா சமாதியின் முன் ஓங்கி அடித்து சபதம் செய்துவிட்டு சிறைக்கு போன சசிகலா இன்று மீண்டும் நான்கு ஆண்டுகள் கழித்து வரும் போது அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறார்.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வாசலிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா புறப்பட்டதை எதிர்த்து அதிமுகவின் அமைச்சர்களான ஜெயக்குமார் சி.வி. சண்முகம் தங்கமணி ,வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி ஆகியோர் பிப்ரவரி 4ஆம் தேதி டிஜிபி அலுவலகத்துக்கு சென்று சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்தனர்.

இந்நிலையில் ஒரே நாள் இடைவெளியில் இன்று (பிப்ரவரி 6) மீண்டும் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று அமைச்சர் ஜெயக்குமார், சி.வி சண்முகம், அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

சசிகலாவின் வருகையை ஒட்டி ஓசூரில் இருந்து சென்னை வரை அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னையிலும் வரவேற்பு பேரணி நடத்த சசிகலா தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் செந்தமிழன் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இதை அடுத்து தான் இன்று திடீரென மீண்டும் அமைச்சர்கள் டிஜிபி அலுவலகம் நோக்கி படையெடுத்து உள்ளனர்.

சசிகலாவை வரவேற்க ஏற்பாடுகள் எதையும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அவர்கள் டிஜிபிக்கு கொடுத்த மனுவின் சாராம்சம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா வருகையால் அமைச்சர்கள் பெரும் பதற்றத்தில் இருப்பதை அவர்களின் செய்தியாளர்கள் சந்திப்புகளே காட்டுகின்றன.

இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், "சசிகலா தினகரன் ஆதரவாளர்கள் மனித வெடிகுண்டாக மாறுவோம் என்று பேட்டி கொடுக்கிறார்கள். தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டு அந்தப் பழியை அதிமுக மீது போட துடிக்கிறார்கள்"என்று கூறியதோடு..."சசிகலா மக்கள் பணத்தை கொள்ளை அடித்து

சிறைக்குச் சென்றவர்"என்று கூற அருகே இருந்த ஜெயக்குமார், மதுசூதனன் ஆகியோர் அதிர்ச்சி ஆனார்கள்.

உடனடியாக செய்தியாளர் ஒருவர், "சசிகலாவுடன் சேர்த்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஏ1 ஆக இருந்த ஜெயலலிதாவுக்கும் இது பொருந்துமா?" என்று கேட்க சி.வி சண்முகம் பதிலேதும் சொல்லாமல் அப்படியே நகர்ந்து விட்டார்.

அங்கே நின்றிருந்த மதுசூதனன்..."செத்தவங்களை பத்தி ஏன்யா கேக்குற?" என்று அந்த பத்திரிக்கையாளரை கடிந்துகொண்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கும் இரண்டாவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசும் சி.வி சண்முகத்தை சட்ட அமைச்சராக வைத்திருக்கிறோம் என்று அதிமுகவினரே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு இடையில் அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

"சின்னம்மாவை வரவேற்க அம்மா மீது அன்பு கொண்ட தொண்டர்கள் பலரும் மகிழ்ச்சியாக தயாராகும் நிலையில் சில அமைச்சர்கள் ஏன் இவ்வாறு பதற்றம் அடைகிறார்கள் என தெரியவில்லை. நான் பேசியதை தங்கள் வசதிக்கு ஏற்ப திரித்து தங்கள் அமைச்சர் பதவியில் இருப்பதையும் மறந்து நிதானமின்றி பேசி வருகிறார்கள்.

அதிகாரத்தில் இருக்கும் இவர்கள் கட்டவிழ்த்துவிடும் கதைகளையும் மீண்டும் மீண்டும் டிஜிபி அலுவலகத்தில் இவர்கள் குவிவதையும் பார்த்தால் இவர்கள் ஏதாவது சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்து விட்டு பழியை அம்மாவின் உண்மை தொண்டர்கள் மீது போட சதி செய்கிறார்களோ என்று தோன்றுகிறது" என்று தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.

சசிகலா சென்னைக்குள் கால்பதிக்க இன்னும் இரு தினங்கள் இருக்கும் நிலையில் அரசியல் எதிர்பார்க்காத திசைகளிலிருந்து எல்லாம் பரபரப்பை அணிந்துகொண்டு அனல் கக்குகிறது.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 6 பிப் 2021