மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 பிப் 2021

3 பேர் லிஸ்ட்: அதுல யார் பெஸ்ட்? திமுக வேட்பாளர் தேர்வு பற்றி ‘ரகசிய’ தகவல்!

3 பேர் லிஸ்ட்: அதுல யார் பெஸ்ட்? திமுக வேட்பாளர் தேர்வு பற்றி ‘ரகசிய’ தகவல்!

நாம் ஏற்கெனவே சொன்னதைப் போல, தமிழக அரசியல் புயல் இப்போது மையம் கொண்டிருப்பது கொங்கு மண்டலத்தில்தான். அதிமுகவைக் கடந்த முறை மீண்டும் ஆட்சியில் தொடர்வதற்கும், திமுகவுக்கு அந்த வாய்ப்பு கைநழுவிப் போனதற்கும் கொங்கு மண்டலத்தை உள்ளடக்கிய மேற்கு மாவட்டங்களில் அதிமுகவுக்குக் கிடைத்த அசாத்திய வெற்றியே காரணமென்பது எல்லோருக்கும் தெரிந்த சேதிதான்.

ஜெயலலிதா இல்லாத நிலையில், அந்த வெற்றியை இந்த முறை பெற முடியுமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், அந்த மண்டலத்தில் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வலுவான, பசையுள்ள துறைகளின் அமைச்சர்களாகவும் இருக்கும்பட்சத்தில் கொங்கு சமுதாயத்தின் வாக்குகளையாவது மொத்தமாக எடுத்து கொங்கு மண்டலத்தில் பழைய வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என்று அதிமுக பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.

அதைப் பிரதிபலிக்கும் வகையில்தான், கோவை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இரண்டு நாள் சுற்றுப்பயணத்துக்கு பிரமாண்டமாக ஏற்பாடுகள், வரவேற்புகள் செய்யப்பட்டிருந்தன. பெருமளவு கூட்டமும் சேர்க்கப்பட்டது. அதுவரையிலும் சற்று சோர்வுற்றிருந்த கோவை அதிமுகவினர், முதல்வரின் பயணத்துக்குப் பின் மீண்டும் உற்சாகமாகிவிட்டனர். அதனால் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கையில் அங்கு சீட்டுக்கும் போட்டி கிளம்பிவிட்டது. இதுபற்றி, ‘மீண்டும் சீட்டு: அதிமுகவில் எத்தனை எம்.எல்.ஏ.க்களுக்கு வேட்டு?’ என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் ஏற்கெனவே எழுதியிருந்தோம்.

இனி கொங்கு மண்டல திமுகவின் நிலையைப் பார்ப்போம்...

பட்டென்று உடைத்துச் சொல்வதானால், கொங்கு மண்டலத்தில் திமுக இன்றைக்கு வரையிலும் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது என்பதுதான் யதார்த்தம், உண்மை. ஆனால், திமுக நிர்வாகிகள் யாருக்கும் அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவமோ, தவற்றைச் சரி செய்ய வேண்டுமென்ற உத்வேகமோ துளியும் இருப்பதாகத் தெரியவில்லை. அதிமுகவினரைப் போலவே, நமக்கும் இந்த முறை சீட் கிடைத்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில்தான், கட்சி வேலையைக் கவனிப்பதைவிட சீட் பிடிப்பதற்கான காய் நகர்த்தல்களில்தான் திமுகவின் முக்கியப் புள்ளிகள் தீவிரமாக இருக்கின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் மாவட்டம்தோறும் மக்கள் கிராம சபையை நடத்துகிறார். ஆனால், கோவை மாவட்டத்தில் பல கிராமங்களில் மக்களிடம் சென்று திமுகவுக்கு வாக்குச் சேகரிக்கக்கூட ஆள் இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் இதே கட்டமைப்பை வைத்துத்தானே வெற்றியடைந்தோம் என்கிற அசால்ட் மனநிலையை திமுகவினர் பலரிடத்திலும் பார்க்க முடிகிறது. இது எந்தளவுக்கு ஆபத்தில் முடியுமென்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இப்போதைக்கு கொங்கு மண்டலத்தில் திமுக வேட்பாளர் தேர்வு எப்படியிருக்குமென்று சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதுபற்றி நாம் விசாரித்தபோது திமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பகிர்ந்தவை...

‘‘முன்பெல்லாம் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கு விண்ணப்பம் கேட்பார்கள். நேர்காணல் செய்வார்கள். மாவட்டச் செயலாளர் தரப்பில் ஒரு பட்டியல் வாங்குவார்கள். அதன்பிறகு செல்வம், செல்வாக்கு, சாதிப் பின்புலம், தொகுதிக்குள் இருக்கும் அறிமுகம் என எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து, ஒருவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தத் தேர்தல் திமுகவுக்கே புதிய வியூகம்தான். ஏனென்றால், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களாக நிறுத்துவதற்குத் தகுதியுள்ளவர்கள் யார், யார் என்று 3 பேர் கொண்ட பட்டியலை ‘ஐபேக்’ நிறுவனம் தயாரித்துக் கொடுத்து விட்டது.

அவர்கள் பொதுமக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் பல ரகசிய சர்வேக்களை நடத்தி, தொகுதிக்கு 3 பேர் கொண்ட லிஸ்ட் ஒன்றைக் கொடுக்கிறார்கள்; அவர்களில் பெஸ்ட் யார் என்று கட்சித்தலைமை முடிவெடுத்து , அவரை வேட்பாளராக அறிவிக்கப் போகிறது. ஐபேக் கொடுத்த பட்டியலை எந்த மாவட்டச் செயலாளரிடமும் கட்சித்தலைமை காட்டவே இல்லை. ஆனால் அவர்களிடமிருந்தும் ஒரு பட்டியலைக் கேட்டிருக்கிறது. அதேபோல ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு பொறுப்பாளரிடமும் ஒரு பட்டியலைக் கேட்டு வாங்குகிறது. அவற்றையெல்லாம் வைத்துத்தான் வேட்பாளரை இறுதி செய்வார்கள் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இது எந்தளவுக்கு வொர்க் அவுட் ஆகுமென்று எங்களுக்குத் தெரியவில்லை. நல்லது நடந்தால் சரிதான்!’’ என்றார்கள்.

திமுக நிர்வாகிகள் சொன்னதைப் போல, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரிடமும் ரகசியமாக ஒரு பட்டியலை திமுக தலைமை கேட்டிருக்கிறது. உதாரணமாக, கோவை மாவட்டத்துக்கான பொறுப்பாளராக ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ சக்கரபாணி இருக்கிறார். அவரிடம் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை திமுக தலைமை கேட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கட்சித் தலைமை நினைக்கும்படி அது ரகசியமாக நடப்பதாகத்தான் தெரியவில்லை.

இதுபற்றி திமுக மக்கள் பிரதிநிதி ஒருவர் நம்மிடம் ரகசியமாகச் சொன்ன தகவல் இதுதான்...

‘‘கோவை மாவட்டத்துக்கான வேட்பாளர் பட்டியலை ஐபேக் நிறுவனம், தலைவரிடம் கொடுத்துள்ளது. அவர் அதை சக்கரபாணிக்கு அனுப்பி வைத்து இந்தப் பட்டியலை ரகசியமாகப் பரிசீலித்து, நீங்கள் ஒரு பட்டியலை ரகசியமாக எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதைத்தெரிந்து கொண்ட எங்கள் கட்சியின் முக்கியப் புள்ளி ஒருவர், சக்கரபாணியைக் கூப்பிட்டு, ‘தலைவர் உங்களுக்கு ஒரு லிஸ்ட் அனுப்பிருக்காராமே. அந்த லிஸ்ட்டை எனக்கு ரகசியமாக அனுப்பி வையுங்க. நான் சொன்னதுபடி லிஸ்ட்டை ஃபைனல் பண்ணி அனுப்புங்க. இது நமக்குள்ளேயே ரகசியமாக இருக்கட்டும்!’ என்று சொல்லி இருக்கிறார். அந்த முக்கியப் புள்ளிக்கு கோவையில் பல பிசினஸ் தொடர்புகள் இருக்கின்றன. அவர் சிலருக்கு சீட் வாங்கித் தருவதாகவும் உறுதி சொல்லியிருக்கிறார். அதனால் அவர் இதில் தலையிட்டு இருக்கிறார். இப்படி ஆளுக்கு ஆள் தலையிட்டுதான், சென்ற தேர்தலிலேயே தகுதியான பலருக்கு சீட் கிடைக்காமல் போனது. இந்த முறையும் அப்படி நடந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை!’’ என்றார்.

அதிமுகவில் பூத் லெவலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்குத் தகுதியான நம்பிக்கைக்குரிய ஆட்கள் யார் யார் என்பது வரைக்கும் கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்டார்கள். ஆனால், இங்கே வேட்பாளரைத் தேர்வு செய்வதிலேயே இவ்வளவு அரசியல் நடக்கிறது என்று புலம்புகிறார்கள் கொங்கு மண்டலத்தின் சீனியர் உடன்பிறப்புகள் சிலர்.

திமுக மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமர்வதற்கு கொங்கு மண்டலமும் பங்கு தருமா, சங்கு ஊதுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்!

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வியாழன் 4 பிப் 2021