மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 பிப் 2021

ஆளுனர் உரை:அதிருப்தியில் ராமதாஸ்

ஆளுனர் உரை:அதிருப்தியில் ராமதாஸ்

தமிழக சட்டமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் இன்று (பிப்ரவரி 2) தொடங்கிய நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். பொதுவாக இது ஆளுநர் உரை என்று அழைக்கப்பட்டாலும், ஆளுங்கட்சி அமைச்சரவையின் உரையையே ஆளுநர் வாசிக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய ஆளுநர் உரையை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ராமதாஸ்,

“ ஆளுனரின் சட்டப்பேரவை உரை நிதிநிலை அறிக்கைக்கு முன்னோட்டமாக இருக்கும்; அதில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது, மருத்துவப்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியது, சரக்கு மற்றும் சேவை வரியில் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றது, கொரோனா காலத்திலும் ரூ.60,674 கோடி முதலீட்டை ஈர்த்தது, இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கியது என தமிழக அரசை பாராட்டும் அறிவிப்புகள் தான் ஆளுனர் உரை முழுவதும் நிரம்பியிருக்கின்றன. அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுனர் உரையில் பாராட்டுகள் தெரிவிக்கப்படுவது வழக்கமானதே; தவறு இல்லை.

ஆனால், ஆளுனர் உரை என்பது பின்னால் வரப்போகும் யானையின் வருகையை உணர்த்துவதற்காக முன்னால் வரும் மணியோசை ஆகும். வரும் ஆண்டில் அரசு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தப் போகிறது என்பதற்கான முன்னோட்ட அறிவிப்புகளை வெளியிடுவதற்காக அரசுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு தான் ஆளுனர் உரை ஆகும். இது தேர்தல் ஆண்டு என்றாலும் கூட, இடைக்கால நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களை அறிவிப்பதற்கோ, அது குறித்த அறிவிப்புகளை ஆளுனர் உரையில் வெளியிடுவதற்கோ எந்தத் தடையும் இல்லை.

ஆனால், ஆளுனர் உரையில், ‘முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும்; அம்மையத்தை 1100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மக்கள் தெரிவிக்கும் குறைகள் அனைத்தும் களையப்படும் என்ற ஒற்றை அறிவிப்பைத் தவிர வேறு புதிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.

பொதுமக்கள் இலவச தொலைபேசி அழைப்பு மூலம் அரசை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கும் திட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருந்த திட்டம் தான். அந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி; இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.

ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசும் போது, புதிய திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதை பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மக்கள் நலத் திட்டங்களை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தமிழக அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ராமதாஸ்,அந்த அதிருப்தியையே ஆளுநர் உரை மீதான கருத்து மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்கின்றன பாமக வட்டாரங்கள்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 2 பிப் 2021