xஆளுநர் உரையில் பிடித்த ஒன்றே ஒன்று: ஸ்டாலின்

politics

இன்று (பிப்ரவரி 2) சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சியான திமுக அறிவித்துள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “அதிமுக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் ஆளுநரிடம் புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை என்பது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. இதனால் தான் ஆளுநர் உரையை புறக்கணித்தோம். கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

மேலும், “ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்னால் நான் எழுந்து பேச முயற்சித்தேன். அதற்கு என்னை அவர் அனுமதிக்கவில்லை அதைவிட , ‘உட்காருங்க. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.அதனால் தமிழகம் வளம்பெற்றிருக்கிறது’ என்று ஆளுநர் கூறினார். ஆனால் மத்திய பட்ஜெட்டில் நான் திமுக சார்பில் கருத்து தெரிவித்தபோது இது தமிழக மக்களுக்கு லாலி பாப் என்று விமர்சனம் செய்திருந்தேன்.

2015 ஆம் ஆண்டில் இதே மத்திய அரசு பட்ஜெட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு மோடி மதுரைக்கே வந்து அடிக்கல் நாட்டு விழா நடத்தினார். ஆனால், இன்று வரை எய்ம்ஸுக்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. இதுதான் மத்திய அரசின் லட்சணம்.

ஆளுநர் பேசியபோது, ‘உட்காருங்க. இதுதான் ஆட்சியின் கடைசி பட்ஜெட்’என்று சொன்னார். அது ஒன்றே ஒன்றை மட்டும் நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறினார் ஸ்டாலின்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *