மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 பிப் 2021

திமுக மாநாடு: பிரமாண்டத்துக்குத் தயாராகும் திருச்சி!

திமுக மாநாடு:  பிரமாண்டத்துக்குத் தயாராகும் திருச்சி!

‘எந்தவொரு இந்திய அரசியல் கட்சியும் இதுவரை இப்படியொரு மாநாட்டை நடத்தியதே இல்லை’ என்னும் அளவுக்கு பிரமாண்டத்துக்குத் தயாராகி வருகிறது திருச்சியில் நடக்கவிருக்கும் திமுக மாநாட்டுத் திடல்.

இம்மாதம் மூன்றாவது வாரம் நடக்கவிருக்கும் திமுக மாநில மாநாட்டுக்கு இன்னும் தேதி குறிக்கப்படவில்லை என்றாலும்கூட, அதில் நடக்கவிருக்கும் ஒவ்வொரு விஷயமும் படு துல்லிய திட்டத்தோடு தயாராகி வருகிறது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுகனூரில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் கலந்து கொள்ளவிருக்கும் அந்த மாநாட்டு திடலைச் சுத்தப்படுத்தும் பணிகளைக் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கிவைத்தார் திமுகவின் முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு.

‘சுமார் 350 ஏக்கர் பரப்பளவுள்ள கரடு முரடான அந்த இடத்தை சமப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட 10ஆவது நாளிலேயே 99 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டதற்கு காரணமும் நேருதான்’ என்கிறார்கள் திமுக திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள்.

தூய்மைப் படுத்தும் பணிகள் தொடங்கிய அதே நாளில் திடலைச் சுற்றிலும் உயரமான இரும்புக் குழாய்களில் திமுக கொடிகளைப் பறக்க விட்டு, மாநாட்டு ‘டெம்போ’வையும் அப்போதே துவக்கிவைத்து விட்டார் நேரு. தினமும் காலை 7 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வரும் நேரு, ஒவ்வொரு பகுதியாகச் சென்று சமப்படுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்து விட்டுத்தான் அங்கிருந்து கிளம்புகிறார். அதன் பிறகு பகல் 11 மணிக்கு மீண்டும் மாநாட்டுத் திடலுக்கு வரும் நேருவுக்கு, கடந்த 10 நாட்களாக மதிய உணவும் அங்கேதான்.

வெட்டவெளியில் நடக்கவிருக்கும் அந்த மாநாட்டுக்குத் தேவைப்படும் இருக்கைகள் தமிழகத்தில் உள்ள பந்தல் கான்ட்ராக்டர்களிடம் போதுமான அளவில் இல்லாத காரணத்தால், சுமார் 5 லட்சம் பிளாஸ்டிக் சேர்களை ஆந்திராவில் இருந்து கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளராம் கே.என்.நேரு.

மெகா சைஸ் எல்.சி.டி டிஜிட்டல் ஸ்கிரீன் பின்னணியில் எந்தப் பக்கமும் தடுப்புகள் இல்லாத அளவில் பிரமாண்டமான மேடை, ஆங்காங்கே ‘லைவ் ரிலே’ என ஹைடெக் மாநாடாக இருக்கும் இதில் கலந்து கொள்ள வரும் அனைவருக்கும் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் பக்காவாக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மொத்தம் உள்ள 77 திமுக மாவட்டங்களில் இருந்து வரும் அனைவரும் மேடைக்கு எதிரே மாவட்ட வாரியாக, பூத் வாரியாக தனித்தனியாக அமரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாம். அவர்களின் வசதிக்காக அந்தந்த இடங்களில் போர்வெல் அமைக்கப்பட இருப்பதாகவும், குடிநீருக்கு நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள், மின்சாரத்துக்கு சுமார் 100க்கும் மேற்பட்ட ஜெனரேட்டர்கள், வெளிச்சத்திற்கு 2 லட்சம் டியூப் லைட்டுகள், ஆங்காங்கே ‘பளீர்’ ஒளி விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக அனைத்து வசதிகளுடனும் கூடிய நவீன ‘கேரவன் வேன்’ ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவிர, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென மாநாட்டு வளாகத்தைச் சுற்றிலும் 200 சைவ, அசைவ உணவகங்கள் அமையவிருப்பதாகவும், இதற்காக திருச்சி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.

மாநாடு நடக்கும் இடம் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருப்பதால், மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் மூலமாக போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாத வைகையில், எந்தப் பக்கம் இருந்து வாகனம் வந்தாலும், எளிதாக நிறுத்தும் வகையில் திடலின் ஓரமாகவும், அருகே உள்ள கல்லூரிகள், பெரியார் திடல், லால்குடி ரோட்டில் உள்ள ஜி.கே.தொழிற்பூங்கா எனப் பல இடங்களிலும் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை நடந்துள்ள திமுக மாநாடுகள் அனைத்துமே 2 அல்லது 3 நாட்கள் நடந்துள்ள நிலையில், திமுகவின் இந்த 11ஆவது மாநில மாநாடு ஒரே ஒரு நாள் மட்டும் நடக்க இருக்கிறது. ஏற்கனவே காலை அமர்வில் திமுகவுக்காக தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடும் பூத் ஏஜெண்டுகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட திமுகவினருக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு, அதன்பின் மாலையில் தொண்டர்களுக்கான அரசியல் எழுச்சி மாநாடு என திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அந்தத் திட்டம் மாற்றப்பட்டு முழுக்க முழுக்க தொண்டர்களுக்காக திறந்த வெளி மாநாடாகவே பிற்பகலில் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

”இது வரை ஒவ்வொரு ஊராக தமிழகம் முழுக்க பயணம் செய்து அங்கிருக்கும் மக்களை நேரில் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து உற்சாகம் ஊட்டுவதற்காகத்தான் இந்த மாநாடு. மாநாட்டுக்கான அத்தனை பணிகளையும் திட்டம் போட்டுக் கொடுத்தது ‘ஐ பேக்’ டீம் எனவும், தூய்மைப் பணிகளை முடித்து பிப்ரவரி 2ஆம் தேதி (இன்று) மாநாட்டுத் திடலானது ஐபேக் டீமிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. மாநாடு முடியும் வரை அவர்கள் பொறுப்பிலேயே இருக்கும்” என்கிறார்கள் மாநாட்டு ஸ்பாட் பட்சிகள்.

-பாரதி

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 2 பிப் 2021