உங்கள் வாகனத்தை எத்தனை வருடம் ஓட்டலாம்? பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய நிதியமைச்சர் இந்த (2021-22) நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.
அதில் முக்கிய அம்சமாக “நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 11,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். ரூ.1.03 லட்சம் கோடியில் தமிழகத்தில் 35,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் வகையில் சாலை வசதிகளை ஏற்படுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வாகனங்களை இயக்குவதற்கான ஆண்டு வரம்பு புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“தனியார் வாகனம் 20 ஆண்டுகளும், வாடகைக்கு இயக்கப்படும் கமர்ஷியல் வாகனங்கள் 15 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.