மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

சசிகலாவை வரவேற்க வருவார் பன்னீர்: தினகரன் நம்பிக்கை!

சசிகலாவை வரவேற்க வருவார் பன்னீர்: தினகரன் நம்பிக்கை!

பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி, விக்டோரியா மருத்துவமனையில் இருந்தும் டிஸ்சார்ஜ் ஆகி தற்போது பெங்களூருவிலேயே ஒரு வாரம் ஓய்வெடுத்து வருகிறார் சசிகலா.

நேற்று (ஜனவரி 31) அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது அவரது காரில் அதிமுக கொடி கட்டியிருந்தது அதிமுகவுக்குள்ளும், தமிழக அரசியலிலும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

சசிகலா தன் காரில் அதிமுக கொடியை கட்டிவந்தது சட்ட மீறல் என்றும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாதவர் எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும்? அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது”என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு தினகரன் பதிலளிக்கையில், “அதிமுகவின் பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலா. கொடிகட்ட அவருக்கு அதிகாரம் உள்ளது” என்று கூறினார்.

இந்நிலையில் சசிகலா தனது ஓய்வெடுக்கும் இடத்தைச் சென்றடைந்த பின், அவர் தமிழகம் திரும்புகையில் செய்ய வேண்டிய வரவேற்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்டச் செயலாளர்களிடமும், அமமுக மூத்த நிர்வாகிகளிடமும் தினகரன் ஆலோசித்து வருகிறார்.

அப்போது, “அதிமுகவில் பலரும் சின்னம்மாவை வெளிப்படையாக வரவேற்பார்கள். ஏன் நமது பன்னீர் செல்வமே சென்னையின் எல்லையில் நின்று நமது சின்னம்மாவை வரவேற்பார் பாருங்கள்” என்று நம்பிக்கையோடு கூறி வருகிறார்.

ஏற்கனவே ஜனவரி 18 ஆம் தேதி டெல்லியில் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “சசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பே இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இதுபற்றி இன்னும் கருத்து சொல்லவில்லை.

அமமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில், “சசிகலாவை அதிமுகவில் சேர்க்கமாட்டோம் என்று இணை ஒருங்கிணைப்பாளர்தானே சொல்லுகிறார்? ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்” என்று கருத்துச் சித்திரம் வெளியிட்டிருந்தனர். அதற்கேற்றவாறு சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி பன்னீர் இன்னும் வெளிப்படையாக எந்த கருத்தும் சொல்லவில்லை. பன்னீரின் மகன் ஜெயபிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் சசிகலாவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியில், “ஏற்கனவே தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்தபோதே தினகரனை சந்தித்தவர்தான் ஓ.பன்னீர். இந்நிலையில் இப்போது தினகரன் சொல்வது போல் சென்னை எல்லையில் சசிகலாவை ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பாரோ”என்ற எதிர்பார்ப்பு அமமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

திங்கள் 1 பிப் 2021