மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 ஜன 2021

ராமதாஸைச் சந்தித்த அமைச்சர்கள் குழு: நடந்தது என்ன?

ராமதாஸைச் சந்தித்த அமைச்சர்கள் குழு: நடந்தது என்ன?

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இருப்பதற்கு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பான நிபந்தனையைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு என்ற போராட்டம், பிறகு எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்று தளர்த்திக்கொள்ளப்பட்டுத் தொடர்கிறது.

இந்நிலையில்.... ராமதாஸுக்கு மூன்று நிபந்தனைகளை விதித்து அதிமுக சார்பில் தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பப்பட்ட தூதுவர் நேற்று காலை அந்தச் செய்தியை சேர்த்த நிலையில்... நேற்று மாலை 4.15 மணிக்கு ராமதாஸ் மீண்டும் ஒரு போராட்ட முழக்கத்தை எழுப்பினார்.

பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு ராமதாஸ் எழுதிய கடிதத்தில், “நாம் இதுவரை நடத்தியிருக்கும் ஆறு கட்ட போராட்டங்களும் நமது இயல்பான போராட்டங்கள் அல்ல. அவை மனு கொடுக்கும் நிகழ்ச்சிகள்தாம். தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்குங்கள் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோர் மூலமாக மனுக்களை அனுப்பி வைக்கும் பணியைத்தான் இதுவரை நாம் செய்திருக்கிறோம். அதிகாரபூர்வ போராட்டத்தை இன்னும் நாம் தொடங்கவில்லை. நாம் அளித்த லட்சக்கணக்கான மனுக்கள் மீது முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று நான் நம்புகிறேன்.

நாம் போராட்டக் களத்தில் இருக்கும்போதே பல முறை நமது இளைஞர்கள் என்னை தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டு பேசினர். ‘‘அய்யா... சத்திரியர்கள் குணத்திற்கு ஏற்றவாறு ஒரு போராட்டத்தை அறிவியுங்கள்’’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு கேட்கும் சத்திரிய சிங்கக் குட்டிகளுக்கு எல்லாம் நான் அளித்து வரும் பதில், ‘‘அத்தகைய போராட்டத்தை நடத்துவதற்கான நாள் வரும். அதற்காக காத்திருங்கள்’’ என்பது தான்.

ஆனால், நாம் நடத்திய ஆறு கட்ட போராட்டங்களும் நமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்கனவே அனைவருக்கும் உணர்த்திவிட்டன என்று நாம் உறுதியாக நம்புகிறேன். அதனால் தான் நேற்றைய போராட்டத்தில் எனது கோரிக்கையை ஏற்று மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சொந்தங்களும், சகோதர சமுதாயங்களும் அணி திரண்டு வந்திருக்கிறார்கள். ஆகவே, நமது கோரிக்கையை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும்; அதனால் சத்திரியப் போராட்டத்திற்கு தேவை இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன். அதையும் மீறி சத்திரியர்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அது சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். அந்தப் போராட்டத்தை நானே களமிறங்கி தலைமையேற்று நடத்துவேன். அதற்காக காத்திருங்கள்!” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் ராமதாஸ்.

இந்தக் கடிதத்துக்குப் பிறகுதான் நேற்று (ஜனவரி 30) இரவு அமைசர்கள் கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகிய நான்கு அமைச்சர்கள் தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்றனர். கடந்த இரு மாதங்களில் அமைச்சர்கள் மூன்றாவது முறையாக தைலாபுரத்துக்கு சென்றுள்ளனர்.

உள் ஒதுக்கீட்டில் அரசுக்கு இருக்கும் தயக்கம் தேவையில்லாதது என்றும், உள் ஒதுக்கீடு இல்லாமல் வன்னிய மக்களை இந்தத் தேர்தலில் எதிர்கொள்வது பாமகவுக்கு கடினமாக இருக்குமென்றும் அமைச்சர்களிடம் ராமதாஸ் எடுத்துரைத்திருக்கிறார். ஆனால் நான்கு அமைச்சர்களும் தமிழக அரசின் நிலையையும், கூட்டணியில் அதிமுகவின் நிலையையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதேநேரம் அன்புமணி தரப்பில் திமுகவுடனான தொடர்பும் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். டாக்டர் ராமதாஸின் அக்கா மகன் தன்ராஜுடைய மகன்தான் , சபரீசனுக்கும் அன்புமணிக்கும் இடையே பாலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பாமக வட்டாரங்களிலேயே சொல்கிறார்கள்.

இந்த சூழலில்தான் இன்று (ஜனவரி 31) பாமகவின் தலைமை நிர்வாகக் குழு கூடுகிறது. இதில் கூட்டணிக்கு சாதகமாக முடிவெடுப்பார் ராமதாஸ் என்று நம்பிக்கொண்டிருக்கிறது அதிமுக.

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

ஞாயிறு 31 ஜன 2021