மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

3 நிபந்தனைகள்: தைலாபுரம் தோட்டத்தில் எடப்பாடியின் தூதர்!

3 நிபந்தனைகள்:  தைலாபுரம் தோட்டத்தில் எடப்பாடியின் தூதர்!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் நாளை ஜனவரி 31ஆம் தேதி நடக்க இருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டத்தை தீவிரமாக்கியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

கிராம நிர்வாக அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முற்றுகை, தாலுகா அலுவலகங்கள் முன் போராட்டம் என்ற பல்வேறு போராட்டங்களை கடந்து ஜனவரி 29ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தி கலெக்டர்களிடம் மனு வழங்கியிருக்கிறார்கள் பாமகவினர்.

இதற்கிடையே அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், வேலுமணி,தங்கமணி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று ராமதாசை சந்தித்து இருமுறை பேசியிருக்கிறார்கள். ஜனவரி 11 ஆம் தேதி அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசிய நிலையில அந்த சந்திப்பை அடுத்து அதிமுக எந்த அதிகாரபூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால்...அன்றே ட்விட்டரில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட ராமதாஸ்,

“தமிழக அமைச்சர்கள் திரு. பி.தங்கமணி, திரு.எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர். அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று அறிவித்தார்.

ஆனால் பொங்கலுக்குப் பிறகு அமைச்சர்கள்- ராமதாஸ் சந்திப்பு இதுவரை நடக்கவில்லை. மேலும் வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்து தமிழக அரசிடம் இருந்து சாதகமான பதில் எதுவும் வராத நிலையில்... ஜனவரி 25 ஆம் தேதி தலைமை நிர்வாகக் குழுவைக் கூட்டி, ‘அரசியல் முடிவு’ எடுக்க இருப்பதாக ராமதாஸ் அறிவித்தார்.

இதையடுத்து முதல்வர் தரப்பில் சிலர் ராமதாஸிடம் பேச அந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தை ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் ராமதாஸ்.

இடையில் ஜனவரி 28 ஆம் தேதி இணையக் கருத்தரங்கம் நடத்தி, “ எம்பிசி பட்டியலில் 80% வன்னியர்கள்தான் இருக்கிறார்கள். மற்ற சாதிகள் எல்லாம் சிறு சிறு அளவில்தான் இருக்கிறார்கள். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 24% வன்னியர்கள் இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு ஏற்ற இட ஒதுக்கீடு கேட்பதில் என்ன தவறு? இது சாதிப் பிரச்சினை அல்ல. தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான வளர்ச்சி ரீதியான பிரச்சினை” என்றெல்லாம் அன்புமணி பேசினார்.

இது ஒருபக்கம் என்றால்... பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி திமுக தரப்பினருடன் பேசிவருவதாக அதிமுக மேலிடத்துக்கு தகவல்கள் சென்றுள்ள்ளன. அதற்கேற்ற மாதிரி ‘விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுக கூட்டணியில் இரு சீட்டுகள்தான்’ என்று சபரீசன் மூலம் ஸ்டாலின் உறுதிபடச் சொல்லிவிட்டார் என்றும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்று (ஜனவரி30) ஆம் தேதி சேலத்தில் இருந்து முதல்வரின் தூதர் ஒருவர் தைலாபுரம் தோட்டத்துக்குச் செல்கிறார். அவரிடம் சில தகவல்கள் சொல்லி அனுப்பப்பட்டிருக்கின்றன என்று அதிமுகவின் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

“தேர்தலுக்கு முன் வன்னியர் இட ஒதுக்கீடு என்பது அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் சாத்தியமில்லை. இது நீண்ட நிர்வாக நடைமுறைகளை உள்ளடக்கியது என்பது டாக்டருக்கும் தெரியும். எனவே இதுபற்றி வாக்குறுதி கொடுக்கிறோம். புதிய அரசு அமைந்ததும், அதை செயல்படுத்துவோம்.

இதற்கு ஓப்புக் கொண்டால் பாமகவுக்கு 27 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும். அதிலும் ஒரு நிபந்தனை.

நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கொடுத்த மாதிரி தேர்தல் செலவுக்கான தொகையை அந்தந்த கட்சிகளிடம் இம்முறை அதிமுக ஒப்படைக்கப் போவதில்லை. கடந்த எம்பி தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்குக் கொடுக்கப்பட்ட தொகை முறையாக செலவழிக்கப்படவில்லை என்று அதிமுக தலைமைக்கு தகவல்கள் கிடைத்தன.

இது சட்டமன்றத் தேர்தல். எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டிய தேர்தல். எனவே கூட்டணிக் கட்சிகளுக்கான தேர்தல் செலவை அதிமுகவே ஏற்றுக் கொள்வதோடு செலவு நிர்வாகத்தையும் அதிமுகவே கவனிக்கும்.

அதேநேரம் கட்சிகளுக்கான தேர்தல் நிதி தனியாகக் கொடுக்கப்படும். இந்த அம்சங்களுக்கு ஒப்புதல் என்றால் தெரிவிக்கவும்” என்று அந்த தூதரிடம் சொல்லி அனுப்பப்பட்டுள்ளது.

இன்று (ஜனவரி 30) காலை அந்தத் தூதர் சேலத்தில் இருந்து தைலாபுரம் தோட்டத்தைச் சென்றடைகிறார். இந்த தகவல்கள் ராமதாஸிடம் தெரிவிக்கப்படுகின்றன. ராமதாஸ் 16% வரை உள் ஒதுக்கீடு கேட்கிறார். அதிமுகவோ அதில் தயக்கம் காட்டுகிறது. இந்த நிலையில்தான் தைலாபுரம் தோட்டத்துக்கு சேலத்து தூதர் செல்கிறார்.

இன்றைய நிலவரப்படி இதுதான் நிலைமை. இதன் எதிரொலி நாளை பாமகவின் நிர்வாகக் குழுவில் எதிரொலிக்கக் கூடும்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

சனி 30 ஜன 2021