மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

1971 ஐ வெல்லும் 2021- ஸ்டாலின் நம்பிக்கை!

1971 ஐ வெல்லும் 2021- ஸ்டாலின் நம்பிக்கை!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத் திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் ஜனவரி 29 ஆம் தேதி முதல் திருவண்ணாமலையில் இருந்து தொடங்கியுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிய குறைகளை மனுக்களாகப் பெற்று, அந்த மனுக்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது. அந்த மனுக்கள் ஸ்டாலின் முன்னிலையில் சீல் வைக்கப்படுகின்றன.

”தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முதல்வராகப் பதவியேற்பேன்... அதன் பின் முதல் வேளையாக முதல் நூறு நாட்களுக்குள் உங்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். இதற்காக தனி துறையே உருவாக்குவேன்” என்று நம்பிக்கையாக மக்களிடம் உரையாற்றுகிறார் ஸ்டாலின். அதன்படியே நேற்று காலை திருவண்ணாமலையிலும், மாலை ஆரணியிலும் ஏராளமானோர் திமுக தலைவர் ஸ்டாலினிடம் மனுக்களைக் கொடுத்து ரசீது பெற்றுச் சென்றனர்.

நேற்று மாலை ஆரணியில் பேசிய மு.க.ஸ்டாலின்,

“வெளியில் நியமிக்கப்பட்டிருந்த நம்முடைய தோழர்களிடம் உங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் சொன்னீர்களா? உங்கள் மனுக்களைக் கொடுத்தீர்களா? கொடுத்ததற்கான ரசீது பெற்று விட்டீர்களா? யாராவது ரசீது வாங்காமல் இருந்திருந்தால் தயவுசெய்து செல்லும்போது உங்கள் ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் என்னிடத்தில் கேள்வி கேட்க முடியும். இது ஏதோ கூட்ட வேண்டும் என்று கூட்டிய கூட்டமல்ல; இது கலைஞர் கூட்டம். தளபதி கூட்டம் இது. அதனால் யாராவது ரசீது வாங்காமல் இருந்தால் தயவுசெய்து செல்லும்போது ரசீதை வாங்கிக் கொள்ளுங்கள்.

நாம் எதிர்பார்த்ததை விட இங்கு பல்லாயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்த மனுக்கள் இந்தப் பெட்டியில் போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் பேசுகிறபோது சொன்னேன். இந்த மாவட்ட அமைச்சரை யாருக்கும் தெரியாது. ஏனென்றால் அவருக்கு எந்தப் பணியும் இல்லை. கலெக்சன் - கரப்சன் - கமிஷன் தான் அவருடைய பணியாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த அமைச்சர் தான் இந்த ஆரணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். இப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர்.

இந்த அ.தி.மு.க. ஆட்சியில் சிலைக் கடத்தல் மிகவும் அதிகமாக நடந்திருக்கிறது. அது பற்றி விசாரிப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, காவல்துறை உயர் அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவிற்கு இந்த ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் - அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை. இந்த விசாரணைக்கு தடையாக இருந்தவர் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் - அமைச்சராகவும் இருக்கும் சேவூர் ராமச்சந்திரன் தான்.

தனக்கு ஏற்பட்ட தடைகளை பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். இந்த ஆரணிக்கு அவப்பெயர் இருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் அமைச்சராக இருக்கும் சேவூர் ராமச்சந்திரன் தான்.

அதுமட்டுமல்லாமல், வந்தவாசியில் உள்ள தவளகிரி நாதர் கோயிலைச் சுற்றி கிரிவல பாதை அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்துகொண்டிருக்கிறது. அரோமலை கோயில் அதிகாரிகள், கொரோனாவின்போது 6 மாதங்களாக மூடப்பட்ட 150 கடைகளுக்கு வரி கேட்டு இன்றைக்கு வரைக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பகுதியில் செய்யாறு தொகுதியில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிப்காட் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. அதேபோல அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது தொழில் , தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதா? இல்லை.

இன்னும் வந்தவாசி 3வது குடிநீர் திட்டத்தை அ.தி.மு.க. அரசால் முடிக்க முடியவில்லை. அதனால் குடிநீர் பற்றாக்குறை இருந்துகொண்டிருக்கிறது. வந்தவாசி மற்றும் ஆரணி அரசு மருத்துவமனைகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. செண்பகத்தோப்பு அணையின் கட்டுமானப் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை”என்று ஆரணியின் அடிப்படைப் பிரச்சினைகளையும் ஆன்மீகப் பிரச்சினைகளையும் தொட்டுப் பேசிய ஸ்டாலின்,

“ உங்களது நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு என்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். அடுத்தவர் நம்பிக்கையைப் பெறுவது தான் ஒரு மனிதனின் மாபெரும் சொத்து. இவர் நல்லவர், நம்பிக்கையானவர், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார், இவரை நம்பி நம்முடைய கோரிக்கையை வைக்கலாம் - என்று உங்களிடம் நான் நம்பிக்கையைப் பெற்றதைத் தான் என்னுடைய சொத்தாகக் கருதுகிறேன். அதற்கு அடையாளம் தான் இந்த மாபெரும் கூட்டம். இத்தகைய நம்பிக்கையைப் பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல!

நீங்கள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்! உங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியை இந்த ஆரணியில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

உங்கள் கவலைகளை, உங்களது கோரிக்கைகளை, உங்களது எதிர்பார்ப்புகளை, என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். இவற்றுக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்.

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு 1971-இல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதுவரையில் தமிழக வரலாற்றில் யாரும் சாதிக்காத மிகப்பெரிய வெற்றி. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. தான். அதை வெல்லப் போகிற தேர்தல் தான் 2021. தி.மு.க.வைத் தி.மு.க.வால் தான் வெல்ல முடியும்.

பேரறிஞர் அண்ணா மறைந்து அதற்குப்பிறகு நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, அதன் பின் காஞ்சிபுரத்தில் மாநாடு. கலைஞர் முன் நின்று அந்த மாநாட்டை நடத்துகிறார். அப்போது இளைஞர் தி.மு.க.வின் சார்பில் கோபாலபுரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு தொடர் ஓட்டம். அண்ணா ஜோதியை காஞ்சிபுரம் எல்லையில் இருந்து, கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் நானே ஓடிச் சென்று, மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞரிடம் ஒப்படைத்த கை, இந்த கை”என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 30 ஜன 2021