மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

சசிகலா-பன்னீர்-எடப்பாடி இன்றைய உள்விவகாரங்கள்!

சசிகலா-பன்னீர்-எடப்பாடி இன்றைய உள்விவகாரங்கள்!

அறுதப்பழசான வார்த்தைதான். ஆனாலும் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது.

‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை!’

காமெடியாக கவுண்டமணி மொழியில் சொன்னால்...‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!’

எதுக்கு இப்படி ஒரு ‘இன்ட்ரோ’ என்று யோசிக்கிறீர்களா...கட்டுரையைப் படித்த பின்பு நீங்களே ஒரு முடிவுக்கு வந்து இந்த இரண்டு வார்த்தைகளில் ஏதோ ஒன்றைச் சொல்வீர்கள் என்பது நிச்சயம்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நான்காண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்து, தற்போது கொரோனாவுக்காக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா, ஓரிரு நாட்களில் அங்கிருந்து வெளியில் வரவுள்ளார். மருத்துவமனை அறிக்கையின்படி, ஜனவரி 31 அல்லது பிப்ரவரி 1 அன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். அன்றைக்கே அவர் சென்னை திரும்புவதற்கும் ஏற்பாடு நடந்து வருவதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

சசிகலாவை அமர்க்களமாக வரவேற்பதற்கு, தினகரன் தீவிரமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.

சசிகலாவின் குடும்பத்தினரோ, அமமுகவினரோ அவரைச் சென்று வரவேற்பது பெரிய சேதியில்லை. இவர்களைத் தவிர்த்து, சசிகலாவை வரவேற்க யார் யார் வரப்போகிறார்கள், மறைமுகமாக யார் யார் வண்டி அனுப்பப்போகிறார்கள், ரகசியமாக அலைபேசியில் யார் யார் அன்பை வெளிப்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் எட்டுக்கோடி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சசிகலாவை வரவேற்பவர்கள், தொடர்பு கொள்பவர்கள், தூது அனுப்புபவர்கள் யார் யார் என்று தமிழக உளவுத்துறையை வைத்து அதிதீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு, தென்மாவட்டங்களில் தெருத்தெருவாய் உளவுத்துறை விசாரித்துக் கொண்டிருக்கையில் ஒரே பதிவில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் தன் பக்கம் திருப்பி பிரமிக்க வைத்திருக்கிறார் துணைமுதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப். இது அரசியல் பதிவில்லை; மனிதநேயப்பதிவு என்று அவர் சொல்லியிருப்பதுதான் ‘நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா!’ என்று எல்லோரையும் சொல்ல வைத்திருக்கிறது. அதாவது, சசிகலா விஷயத்தில் அதிமுகவில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள், ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்கள் பலருக்கும் நன்றியும் மனிதாபிமானமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவது போலிருக்கிறது அந்த வார்த்தை என்பதுதான் அதிமுக நிர்வாகிகள் பலருடைய அழுத்தம் திருத்தமான வாதமாக இருக்கிறது.

சசிகலா விடுதலையாவதற்கு முன்பே, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராதான் முதல்முறையாக லேசாக கொளுத்திப் போட்டார். அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை உதயநிதி அவதூறாகப் பேசியதைக் கண்டித்து அதில்தான், ‘அவர் எங்கிருந்தாலும் நாங்கள் போற்றக்கூடியவர். அம்மாவுக்கு துணையாக இருந்து தவவாழ்க்கை வாழ்ந்தவர்’ என்று சசிகலாவுக்கு சான்றிதழ் கொடுத்து, அதகளத்தை ஆரம்பித்து வைத்தார். அப்புறம் அவர் அதை மறுத்து ‘எனக்கு இபிஎஸ் அண்ணன் ஒரு கண்: ஓபிஎஸ் அண்ணன் ஒரு கண்!’ என்று சொன்னதெல்லாம் பெரிதாக எடுபடவில்லை.

அடுத்ததாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும், ‘‘சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவைப் பலப்படுத்தும் முடிவைத்தான் எடுப்பார்’’ என்றும் கூற, அதற்கும் ஜெயக்குமார் கடுமையான ரியாக் ஷனை வெளியிட்டார். இருவரும் சேர்ந்து பற்ற வைத்தது பற்றி எரியத் துவங்கியது. திருச்சியில் ‘தியாகத்தலைவி சின்னம்மா’ என்று போஸ்டர் ஒட்டினார் கட்சியின் மாவட்டப் பிரதிநிதி அண்ணாதுரை. அவரை கட்சியை விட்டு நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீரும், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் சேர்ந்து அறிக்கை வெளியிட்டனர். அத்துடன் விவகாரம் அணைந்து விட்டது என்று எல்லோரும் நினைத்திருந்த நேரத்தில்தான் பிரமாதமாக தீப்பந்தம் கொளுத்தியுள்ளார் ஜெயபிரதீப்.

ஏற்கெனவே சசிகலாவையும் தினகரனையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பேயில்லை என்று டெல்லியில் ‘டிக்ளர்’ செய்து விட்டுத்தான் சென்னை திரும்பினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நான்காண்டுகளாக சசிகலாவைப் பற்றி அவரிடமிருந்து பாசிட்டிவ் ஆகவோ, நெகட்டிவ் ஆகவோ பெரிதாக எந்த கமெண்ட்டும் வந்ததில்லை. ஆனால் முதல் முறையாக ஸ்டேட் விட்டு ஸ்டேட் சென்று டெல்லியில் இந்த ஸ்டேட்மென்ட்டை விட்டார் எடப்பாடி. சசிகலா விடுதலையாவார் என்று அறிவிக்கப்பட்ட ஜனவரி 27 ஆம் தேதியன்று ஜெயலலிதாவின் மணி மண்டபத்தைத் திறக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். அந்தத் தேதியைக் குறித்ததே, சசிகலாவின் விடுதலையை இருட்டடிப்பு செய்வதற்குதான் என்பது ஊரறிந்த ரகசியமாக இருந்தது. பின்பு அதுவும் தப்புக்கணக்காகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அடுத்தடுத்து பேட்டி, போஸ்டர், ட்விட்டர் என்று பலரும் ஏவுகணைகளை எடப்பாடியின் பக்கம் ஏவிக்கொண்டே இருக்கின்றனர்.

அதிமுகவுக்குள் ஏதோ நடக்கிறது என்பது எல்லோருக்கும் புரிந்துவிட்டது. ஆனால் என்ன நடக்கிறது என்பது யாருக்குமே புரியவில்லை. இவையனைத்துக்கும் பின்னால் இருக்கிற அரசியல் என்ன, அடுத்தடுத்து அரங்கேறப்போகும் நிகழ்வுகள் எப்படியிருக்கும் என்று அதிமுக சீனியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். பலரும் வாய் திறக்க மறுத்து விட்ட நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு தரப்பிலும் மையமாக நிற்கும் சில சீனியர்கள் உற்சாகமாகப் பேசினர்...

‘‘என்னதான் எடப்பாடி பழனிசாமி, முதல்வராக நான்காண்டுகளை நிறைவு செய்திருந்தாலும் அதற்கு அடித்தளம் போட்டுக்கொடுத்தது சசிகலாதான். அவர் சிறைக்குச் சென்று திரும்புவதற்கு நான்காண்டுகள் ஆகுமென்றதும் கட்சியில் கடைநிலையில் இருந்த பலரும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஆடித்தீர்த்துவிட்டனர். பன்னீர்செல்வத்தை தங்களுடைய கைப்பாவையாக வைத்துக்கொண்டு ஆட்சியை ஆட்டிப்படைக்கலாம் என்று பாரதிய ஜனதா திட்டமிட்டது. அது ஒர்க் அவுட் ஆகவில்லை. அப்புறம் அதே டெல்லிதான் பழனிசாமியையும் பன்னீரையும் கைகுலுக்க வைத்து கட்சியைச் சேர்த்து வைத்தது.

ஆனாலும் கடந்த நான்காண்டுகளாக தாமரை இலைத்தண்ணீர் போலத்தான் பழனிசாமியும் பன்னீரும் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த முறை எடப்பாடி ஆட்சியை முழுமையாக நிறைவு செய்துவிட்டதால், அடுத்த தேர்தலில் தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைப்பார்கள் என்றுதான் பன்னீர் செல்வம் காத்திருந்தார். ஆனால் பாரதிய ஜனதா அவருக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. ஏனென்றால் மத்திய அரசின் எல்லாத் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் ஆதரித்து தானும் நல்ல விசுவாசிதான் என்று பழனிசாமி பலமுறை நிரூபித்துவிட்டார். அதனால்தான் ஆட்சியை அவர்கள் தொடர அனுமதித்தனர்.

இப்போது தேர்தல் என்று வரும்போதுதான், மீண்டும் பிரச்சினை முளைக்கிறது. தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்த பன்னீர்செல்வத்தை, ஏதோ ஒரு வகையில் சரிக்கட்டி, அவருடைய வாயாலேயே ‘எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்’ என்று அறிவிக்க வைத்துவிட்டார்கள். ஆனால் பன்னீர் உள்ளுக்குள்ளே கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் செயற்குழுவில் அதை அறிவித்ததற்குப் பின், அவரிடமிருந்து ஒரு முறை கூட ‘பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்’ என்ற வார்த்தை வந்ததேயில்லை. தனக்கான சூழல் வரும்வரை காத்திருப்போம் என்று அவர் பொறுமைகாத்து வந்தார். இப்போது சசிகலா விடுதலையின் மூலமாக அவருக்குப் புதிய கதவு திறந்திருக்கிறது.

பன்னீர்செல்வம் மட்டுமின்றி, பாரதிய ஜனதா தலைவர்களும் கூட, ‘பழனிசாமிதான் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்’ என்று இதுவரை அறிவிக்கவே இல்லை. அதை அறிவிக்க வைக்கும் நோக்கில்தான் டெல்லிக்குப் போனார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவருடைய பயண நோக்கம் நிறைவேறவில்லை. இதுதான் பன்னீர் செல்வத்துக்கு பெரும் தெம்பைக் கொடுத்திருக்கிறது. டெல்லிக்கு எடப்பாடி போனபோது, இங்கே தனக்கு நெருக்கமான சிலரிடம் பன்னீர் சில விஷயங்களைப் பேசியுள்ளார்.

‘நமக்கு நல்ல குறியீடுகள் தெரிகின்றன. போகிற போக்கைப் பார்த்தால், என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது. டெல்லியில் பாரதிய ஜனதா தலைவர்கள் அந்த எண்ணத்தில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. சின்னம்மா வெளியே வந்ததும் அவரும் அதையே அறிவிப்பார் என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அதற்கும் டெல்லியில்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.

அதனால் சின்னம்மாவை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்வோம். ஆயிரம் வண்டிகளை அனுப்பி வைப்போம். ஆனால் நாம்தான் அனுப்பினோம் என்ற விஷயம் இப்போதைக்கு வெளியில் தெரிய வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. தற்போது அவர் போட்டுள்ள ட்விட்டர் பதிவு அதை உறுதி செய்திருக்கிறது. சசிகலாவும் தினகரனும் பன்னீரும் இணைவதற்கான வேலை நடக்கிறது என்பது முதல்வருக்கும் தெரிந்துவிட்டது. இதைத் தடுப்பதும் அவருடைய டெல்லி பயணத்தின் மறைமுக நோக்கமாக இருந்தது. ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமான ஆலோசனையில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி’’ என்று விரிவாக விளக்கினார்கள்.

பன்னீர்செல்வம் இப்படியொரு முடிவை எடுப்பதற்கு சமுதாயரீதியாக அவருக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தமும் ஒரு காரணமென்றும் சொல்கிறார்கள். பன்னீரின் சமுதாய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘கடந்த நான்காண்டுகளாக கொங்கு மண்டல அமைச்சர்கள்தான் முக்கியத் துறைகளில் கோலோச்சி இருக்கின்றனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அனைத்தும் மேற்கு மாவட்டங்களுக்கு மடை திருப்பி விடப்பட்டிருக்கின்றன. இதற்கு முழுமுதற்காரணம், பன்னீரின் இயலாமையும் சுயநலமும்தான் என்று எங்களுடைய சமுதாயத்தினருக்கிடையிலான சமூக ஊடகங்களிலேயே கடுமையான விமர்சனங்கள் பரப்பப்படுகின்றன. சமுதாயத்தினர் மாத்திரமின்றி, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் உள்ள மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுக்கும் இந்தக் குமுறல் இருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்தே இப்படியொரு முடிவை பன்னீர் எடுக்கிறார்!’’ என்கிறார்கள்.

சசிகலாவே மீண்டும் பன்னீரை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்பதுதான் இவர்கள் சொல்லும் பகீர் தகவலாக இருக்கிறது. அதற்கு முன்னோட்டம்தான், ஜெயபிரதீப்பின் ட்விட்டர் பதிவு என்பதும் சற்று ஒத்துப்போகிற நிகழ்வாகத்தான் தெரிகிறது.

பிப்ரவரியில் ... பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம்– பார்ட் 2 ரிலீஸ் ஆகலாம். எப்படியோ பிப்ரவரியில் இருந்து ‘பிரேக்கிங் நியூஸ்’ பின்னி பெடலெடுக்கப் போகிறது.

தகிக்கப் போகிறது தமிழக அரசியல். தலைகீழ் மாற்றங்கள் நிகழப் போகின்றன. தமிழக மக்களனைவரின் மைண்ட் வாய்ஸ்சும் ஒன்றாக ஒலிக்கப்போகிறது...

‘‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!’’

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 30 ஜன 2021