மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

கமலின் 2006 அரசியல் ஃப்ளாஷ்பேக்...! பிரச்சாரத்திற்கு அழைத்த ஜெயலலிதா: அமெரிக்காவுக்கு அனுப்பிய கலைஞர்!

கமலின் 2006 அரசியல் ஃப்ளாஷ்பேக்...! பிரச்சாரத்திற்கு அழைத்த ஜெயலலிதா: அமெரிக்காவுக்கு அனுப்பிய கலைஞர்!

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவமெய்தி - கொடும்

கூற்றுக் கிரையென பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

பாரதியாரின் கவிதைதான். ஆனால் ‘மகாநதி’யில் கமலின் குரலில் அதைக் கேட்ட பின்புதான், அந்தக் கவிதையின் கனத்தை பலராலும் உணர முடிந்தது. அந்தக் கவிதையை உதடுகளிலிருந்து இல்லை; உள்ளத்திலிருந்து கமல் பேசினார் என்பதுதான் கனத்திற்கான காரணம்.

அதையும் அவர் சினிமா அர்ப்பணிப்பில் பேசியிருக்கிறார் என்று நினைத்தவர்களுக்கு, அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்ததும் அந்த கவிதையை கமல் அன்று பேசியதன் அர்த்தம் புரிந்திருக்கும். கமலுக்குக் குவியும் இளைஞர் கூட்டம், தமிழகத்தின் பல அரசியல் தலைவர்களை விழிகள் விரிய வைக்கிறது. அவர் என்ன பேசுகிறார், ஒன்றும் புரியவில்லை என்று வெளியில் வீராப்புப் பேசினாலும் அவர் இளைஞர்களின் இதயமறிந்து பேசுகிறார் என்பது புரிய ஆரம்பித்திருக்கிறது.

கமலுக்குக் கூட்டம் கூடுகிறதுதான். ஆனால் எல்லாமே தானா சேர்ந்த கூட்டம் என்று சொல்வதற்கில்லை. அங்கேயும் கூட்டத்தைக் கூட்டுவதற்கான அத்தனை அரசியல் யுக்திகளும் கையாளப்படுகின்றன. அதற்கு பணமும் தண்ணீராய்ச் செலவழிந்து கொண்டிருக்கிறது. கமலிடம் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில், ‘‘கமலுக்குக் கட்சி நடத்த பணம் எங்கிருந்து வருகிறது?’’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கொஞ்சமும் யோசிக்காமல், தன் பாக்கெட்டைக் காட்டினார். அந்தப் பாக்கெட்டுக்குப் பின்னால்தான் அவர் இதயம் இருக்கிறது என்பதையும் மறைமுகமாக உணர்த்திய செயல் அது.

அந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில்...

‘‘என் பாக்கெட்டிலிருந்துதான் வருகிறது. என் கட்சியில் உள்ள பலரும் அவரவர் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துப் போட்டுத்தான் கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். ‘இங்கிருந்து வருகிறது... அங்கிருந்து வருகிறது’ எனப் புரளிகள் எல்லாம் கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் செய்திருக்கிற செலவுகள் தேர்தல் கமிஷனுக்குத் தெரியும். குறைந்த செலவில் நிறைய வெற்றியைப் பெற்றிருக்கிறோம். பணம் கொடுக்கமாட்டோம் எனச் சொல்லிட்டு, கைத்தட்டலுடன் திரும்பி வந்த காட்சிகளும் உண்டு.’’

பாராளுமன்றத் தேர்தலின்போது, கட்சியில் உள்ள பலரும் அவரவர் கைக்காசைப் போட்டுத்தான் கமலின் பொதுக்கூட்டம் மற்றும் பரப்புரைப் பயணங்களுக்குச் செலவு செய்தார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் இப்போது வரையிலும் அவர்களே செலவு செய்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான். இன்னும் சொல்லப் போனால், அன்றைக்குக் கமலுடன் இருந்து அவருக்காகச் செலவு செய்த பலரும் இப்போது அவரை விட்டு விலகி நிற்கிறார்கள். சிலர் இன்று வரை கோடிக்கணக்கில் செலவும் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே எத்தனை நாள்களுக்குக் கட்சியை நடத்த முடியுமென்ற கவலை கமலுக்கு வந்திருக்கிறது. திமுகவும் அதிமுகவும் கூட்டம் சேர்ப்பதற்காக காசை எப்படித் தண்ணீராய் வாரியிறைக்கின்றன என்பது அவருக்குத் தெரிந்தபோது, சற்று உடைந்து விட்டதாகவே சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமாய் இருப்பவர்கள். இப்படியே போனால் எவ்வளவு நாள்களுக்குக் காசின்றி கட்சியைக் கொண்டு செல்ல முடியுமென்ற கவலையும் அவருக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. திரைப்படங்களில் நடிப்பது, பிக்பாஸ் நடத்துவது என பல விதங்களிலும் அவருக்கு வருவாய் கோடிகளில் இருந்தாலும் அதெல்லாம் அரசியல் என்கிற யானைப்பசிக்கான சோளப்பொரிதான்.

மற்ற செலவுகளை விட, தன்னுடைய கூட்டத்துக்கு ஆள்களைக் கொண்டு வருவதற்குப் பணம் செலவிடுவதைத்தான் கமலால் ஜீரணிக்கவே முடியவில்லை என்கிறார்கள். முன்பெல்லாம் தன்னைப் பார்க்கவே பெரும் கூட்டம் கூடுமென்ற எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. அது கொஞ்ச நாளுக்கு நடந்தது. இப்போது அப்படி வரும் ஆள்களை மட்டும் வைத்துக்கொண்டு பேசினால், தொலைக்காட்சிகளில் அதைப் பார்க்கும் பலருக்கும் ‘அம்புட்டுத்தானா’ என்று கேட்க வைத்துவிடும். அது கமலின் அரசியல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல; சினிமா எதிர்காலத்துக்கும் வேட்டுவைத்துவிடும் அபாயம் நிறையவே இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில்தான், கமலின் இன்றைய பொருளாதார நிலையைப் பார்த்து, வருத்தப்படுகிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர். அவருடைய அரசியல் பிரவேசம் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். ஏனெனில் அப்போது கமலுக்கு நேர்ந்த ஓர் அசாதாரணச் சூழலை அவர்கள் மட்டுமே அறிவார்கள். தமிழக மக்களுக்கு மட்டுமல்ல. மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுக்கும் கூட அது ஆச்சரியத் தகவலாகத்தான் இருக்கும்.

கொசுவர்த்தியைச் சுற்றி அந்த ஃப்ளாஷ்பேக்கிற்குள் போவோம்....

அது 2006 ஆம் ஆண்டு. இப்போது போலவே சட்டமன்றத் தேர்தலுக்காகத் தமிழகமே பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தது. அதிமுக ஆட்சியின் முடிவுக்காலம். வழக்கமாக அரசின் மீதிருக்கும் அதிருப்தி அப்போதும் கொஞ்சமல்ல...சற்று அதிகமாகவே இருந்தது. தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது குறித்த உளவுத்துறையின் கணிப்பு அறிக்கைகளும் அதை உறுதி செய்தன.

அப்போதுதான் ஒரு நாள் சசிகலாவின் கணவர் நடராஜனிடமிருந்து கமலுக்கு அலைபேசி அழைப்பு வருகிறது. ‘மருதநாயகம் படத்தைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும். நாளை உங்கள் வீட்டிற்கு வரலாமா’ என்று கேட்கிறார் நடராஜன். கமல் ஒன்றும் புரியாமல், ‘நானே உங்களை வந்து பார்க்கிறேன்’ என்கிறார். ஆனால் அதை மறுத்துவிட்டு, கமலின் வீட்டிற்கே மறுநாள் போகிறார் நடராஜன். புன்னகையோடு வரவேற்றுப் பேசுகிறார் கமல். எடுத்த எடுப்பில் மேட்டரை உடைத்துப் பேசிய நடராஜன், ‘‘மருதநாயகம் எடுப்பதற்காக நீங்கள் நிறையவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அதனால் ரொம்பவே சிரமத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஜெயலலிதா மேடத்திடமும் இதுபற்றிப் பேசினேன். அவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு ஒரு விஷயத்தை உங்களிடம் கேட்கச் சொல்லியிருக்கிறார். இந்தத் தேர்தலில் அவருக்காக அதாவது அதிமுகவுக்காக நீங்கள் பரப்புரை மேற்கொள்ள வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். அதிக பாயிண்ட்கள் வேண்டாம். குறிப்பிட்ட சில நகரங்களில் திறந்த வேனில் நீங்கள் பேசினால் போதுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதற்கான பிரத்தியேக வாகனம், சிறப்பான பாதுகாப்பு எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக்கொள்வோம். நல்ல வாகனம், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று உங்களுக்கு எல்லாமே மிகச்சிறப்பாக செய்து கொடுத்து விடுகிறோம். மருதநாயகம் படம் எடுப்பதற்கு 500 கோடியை நீங்கள் எங்கே சொல்கிறீர்களோ அங்கே கொடுத்து விடுகிறோம். உங்களுடைய மற்ற கடன் பிரச்சினைகளையும் செட்டில் செய்து விடுகிறோம்’’ என்று விவரித்திருக்கிறார் நடராஜன்.

கமலுக்கு உடனடியாக என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எந்த உத்தரவாதத்தையும் அவர் தரவில்லை. பேச்சு போய்க்கொண்டே இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் நடராஜன், ‘‘வேணும்னா இன்னும் 200 கோடி ரூபாய் கூட தருகிறோம்!’’ என்று கமலிடம் அழுத்தம் கொடுக்கிறார். அப்போதும் உறுதியான எந்த பதிலையும் சொல்லாமல், ‘‘கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்; யோசித்துவிட்டுச் சொல்கிறேன்!’’ என்று சொல்லி அவரை வாசல் வரை சென்று வழியனுப்பிவிடுகிறார்.

திரும்ப வீட்டுக்குள் சென்றதும் அவர் உடனே அழைத்துப் பேசியது, நடிகர் நெப்போலியனை. அப்போது அவர் விருதுநகரில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்காக பரப்புரை செய்து கொண்டிருந்தார். கமலிடமிருந்து அவசர அழைப்பு என்றதும் வண்டியை ஓரம் கட்டிப் பேசியிருக்கிறார் நெப்ஸ். அவரிடம் நடராஜன் வந்ததையும் நடந்த பேச்சைப் பற்றியும் கமல் விளக்கியதோடு, ‘‘கலைஞர் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன். அவருக்கு எதிரா எப்படிங்க நான் பரப்புரை செய்ய முடியும்.’’ என்று கேட்கிறார். அவரை ஆசுவாசப்படுத்திய நெப்போலியன், ‘‘விடுங்கள்...நான் கலைஞரிடம் பேசிவிட்டு உங்களிடம் மறுபடியும் லைனுக்கு வருகிறேன்!’’ என்கிறார்.

கலைஞர் அப்போது தூத்துக்குடிக்குப் பரப்புரைக்குச் சென்று, ஸ்பிக் கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருந்திருக்கிறார். அவரிடம் தொலைபேசியில் பேசிய நெப்போலியன், கமல் சொன்ன விஷயத்தை அப்படியே சொல்லியிருக்கிறார். உடனே அதிர்ந்து போன

கலைஞர், ‘‘கமல் ஒரு அற்புதமான கலைஞன்யா...அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. இந்தம்மா அவரை ஏன் அரசியலுக்கு இழுக்குதுன்னே புரியலையே. ஒருவேளை அவுங்க சொல்றபடி பரப்புரை பண்றதுக்கு ஒத்துக்கலைன்னா சந்திரலேகாவுக்குச் செஞ்சது மாதிரி ஏதாவது செஞ்சிருவாங்கய்யா...நீ ஒண்ணு பண்ணு. அவரை உடனே அமெரிக்காவுக்குப் போகச் சொல்லிடு. சூழ்நிலை சரியான பிறகு வரச்சொல்லு!’’ என்று சொல்கிறார். சொன்னதை கமலிடம் பரிமாறுகிறார் நெப்போலியன்.

அடுத்த இரண்டு நாள்களில் அமெரிக்காவுக்குப் பறந்துவிட்டார் கமல். தேர்தல் முடிந்த பிறகுதான் கமல் சென்னைக்குத் திரும்ப வந்தார். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்க இருந்த கலைஞரையும் பார்த்து வாழ்த்துக் கூறினார்.

முடிந்தது ஃப்ளாஷ்பேக். சுழன்று ஓடிவிட்டது காலம். இப்போது கட்சியை நடத்துவதற்கு கமல் படும் சிரமங்களை அறிந்துள்ள அவருடைய நண்பர்கள் பலரும் ‘அன்று மட்டும் கமல் அரசியலுக்கு வந்திருந்து கலைஞருக்கு எதிராக பரப்புரை செய்திருந்தால், இன்றைக்கு அதிமுக தலைவர் அவர்தான். ஆனால் அரசியலுக்காக நட்பைத் துண்டிப்பவரில்லை கமல்!’ என்று சொல்லி புளகாகிதமடைகிறார்கள்.

கலைஞரை எதிர்த்து பரப்புரை செய்ய ஜெயலலிதா அழைத்ததை மட்டுமல்ல. ஒருேவேளை ஜெயலலிதாவுக்கு எதிராக பரப்புரை செய்ய கலைஞர் அழைத்திருந்தாலும் அவர் தவிர்த்திருப்பார்.

ஜெயலலிதாவும் இல்லை; கலைஞரும் இல்லை என்றான பின்புதான், கமல் அரசியலுக்கு வந்தார்.

அவர் இப்போது யாருக்கு எதிராகவும் பெரிதாக பரப்புரை செய்வதில்லை. ஏனெனில் இந்தத் தேர்தலில் கமலுக்குப் பிரதான எதிரியாக இருக்கப்போவது எடப்பாடியோ, ஸ்டாலினோ இல்லை. பணம்!

மகாநதியில் கமல் சொல்லும் டயலாக்தான் இது...

‘‘ஒரு நல்லவனுக்குக் கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைச்சிருதே...அது எப்படி?’’

அதே படத்தில் வரும் பாட்டுதான் இது...

‘‘எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தானா...யம்மாடி வந்ததென்ன என் வாழ்க்கை ஓடம்தானா?’’

கமலுக்கு காலம் சொல்லித்தரும் பாடம்...அரசியல் நீச்சல்குளமில்லை; சாக்கடைகள் கலந்த மகாநதி!

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 30 ஜன 2021