�நிறுத்தப்பட்ட சீர்மரபினர் கணக்கெடுப்பு… ஆணையத்தை அடக்கி வைத்த ராமதாஸ்!

politics

ஒரு சில நேரங்களில் புலனாய்வு நிருபர்களே புல்லரித்துப் போகிற அளவில்தான் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் அறிக்கைகள் புள்ளி விபரங்களுடன் இருக்கும்; உதாரணத்துக்கு, தமிழகத்தில் சென்னை உட்பட பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைத்து விளம்பரங்கள் வைப்பது தொடர்பாக 2018 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையைச் சொல்லலாம். பேருந்துக்கு நாம் நிழற்குடைகளில் காத்திருக்கும் நேரத்தில் நம் கண்களில் படும் விளம்பரங்களைக் குறித்த அறிக்கை அது…

அதில், ‘சென்னை நகரில் பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் விளம்பரங்கள் வைக்கும் உரிமம் முழுவதும் ஸ்கைராம் அட்வர்டைசிங், ஷைன் அட்வர்டைசிங், பைன் ஆர்ட்ஸ் கம்யூனிகேசன்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மட்டுமே செய்து வருகின்றன. இவை அனைத்தும் அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனங்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் தாமோதரன் சீனிவாசன் என்பவரே இயக்குனராக உள்ளார். இந்த 3 நிறுவனங்களும் 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் 10 நாட்கள் இடைவெளியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 2000 இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் கோரப்பட்டுள்ளது. ஆனால், 2016 செப்டம்பர் மாதம் முதல் 2017 செப்டம்பர் வரை 900 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டிருப்பதாக தகவல் உரிமைச் சட்டப்படி அளித்த பதிலில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் விளம்பரப் பலகை அமைக்க உரிமம் வழங்காத தமிழக அரசு மீது சில நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தன.

தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டால் சென்னையில் மட்டும் தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் ஆண்டுக்கு ரூ.250 கோடி வருமானம் கிடைக்கும். தமிழகம் முழுவதும் ரூ.1250 கோடி வருமானம் கிடைக்கும். கடந்த 3 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.3750 கோடி வருவாய் கிடைத்திருக்கும். மாறாக, அமைச்சருக்கு வேண்டிய நிறுவனங்கள் அமைத்துள்ள பேருந்து நிழற்குடை விளம்பரங்களால் தமிழக அரசுக்கு சில லட்சங்கள் கூட வருவாய் கிடைப்பதில்லை. அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3750 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.’ என்று புள்ளி விபரங்களுடன் அதிரவிட்டார் ராமதாஸ்.

ஏதோ பெரிய ஊழல் விவகாரம் வெடிக்கப்போகிறது என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் சில நாள்கள் கழித்து அந்த அறிக்கையில் சொன்ன குற்றச்சாட்டுகள் எங்கே போனதென்றே தெரியவில்லை. இது ஒரு சோறு பதம்தான். இப்படி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகளும் அதனால் உண்டான அதிர்வலைகளும் ஏராளம் ஏராளம்.

இப்படித்தான், கடந்த 2020 அக்டோபர் 12 ல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கேட்டுக் கொண்டவாறு தமிழ்நாட்டில் சீர்மரபினர், நாடோடிகள், அரை நாடோடிகள் கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநில அரசு ஒப்புக் கொண்டிருப்பதை எதிர்த்து அவர் எழுதிய கடிதம் அது. 2020 டிசம்பர் இறுதிக்குள் இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்த மத்திய அரசு, இதற்காக தமிழகத்துக்கு 3 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியிருந்தது. இந்த கணக்கெடுப்பை, தமிழக அரசின் பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையம்தான் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் நடத்தவில்லை. மாறாக அந்தக் கணக்கெடுப்புக்காக மத்திய அரசு தந்த நிதி, மீண்டும் அங்கேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.

இதையறிந்து சிலர் கேள்வி எழுப்பிய பின்புதான், தமிழக அரசும் இதுபற்றி ஆராய்ந்திருக்கிறது. அப்படி ஆய்வு செய்ததில், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராகவுள்ள தணிகாசலம்தான், ராமதாஸ் அறிவுறுத்தலின்பேரில் இந்த கணக்கெடுப்பை நடத்தாமல் நிதியைத் திருப்பி அனுப்பியது தெரியவந்திருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதியான அவர், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலும்தான் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று துறையின் பிற அலுவலர்கள் அரசிடம் புட்டுவைத்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பல்வேறு விஷயங்களையும் சுட்டிக்காட்டி, மிகமுக்கியமாக அதிலுள்ள ஒரு வார்த்தையைக் காண்பித்து, இதற்குக் காரணம் தணிகாசலம்தான் என்று அந்த அலுவலர்கள் விளக்கமும் அளித்திருக்கின்றனர்.

இதுகுறித்து இந்த ஆணையத்திலுள்ள சிலரிடம் விசாரணையை மேற்கொண்டோம். மிகுந்த அச்சத்துடன் பெயர் சொல்ல விரும்பாமல் சில விஷயங்களை அவர்கள் பகிர்ந்தனர்…

‘‘சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் அரை நாடோடிகள் நலனுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. ஆனால் அவை அவர்களுக்குச் சரியாகப் போய்ச்சேரவில்லை என்பதை அறிந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் இவர்களின் மக்கள்தொகையைக் கணக்கெடுக்க வேண்டுமென்று கூறி நிதியும் ஒதுக்கி இருக்கிறது. இதற்காக தமிழகத்துக்கு 3 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கி டிசம்பர் இறுதிக்குள் அந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று காலஅவகாசமும் தந்திருக்கிறது.

அப்போதுதான் ராமதாஸ் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில்தான், ‘இந்த கணக்கெடுப்பை நடத்தினால் சமூகப் பதற்றமும், சட்டம், ஒழுங்கு சிக்கலும் ஏற்படும்’ என்று எச்சரித்திருந்தார்.

மத்திய அரசு தயாரித்துள்ள சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் அரை நாடோடிகள் பட்டியலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு) சட்டம் – 1993-இன் (The Tamil Nadu Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes (Reservation of Seats in Educational Institution and of Appointments or Posts in the Services under the State) Act, 1993) 3 (ஏ) பிரிவின்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள சீர் மரபினர் பட்டியலும் பெருமளவில் மாறுபட்டவை என்று சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் நாடோடிகள் என எந்த சமுதாயமும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

தமிழகத்தில் சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் அரை நாடோடிகள் இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு சொன்னபோதே அதை நிராகரித்திருக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் அட்வைஸ் செய்திருந்தார். தமிழ்நாட்டில் சீர்மரபினர் கணக்கெடுப்பு நடத்துவதால் பொதுவாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், குறிப்பாக வன்னியர்களும் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு தரவுகளையும் குறிப்பிட்டு அவர் எழுதியிருந்த அந்தக் கடிதத்தில், ‘சீர்மரபினருக்கான கணக்கெடுப்பை தனித்து நடத்தக்கூடாது’ என்று வலியுறுத்தியதோடு, மத்திய அரசின் நிதியிலேயே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றும் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். சீர்மரபினரை தனிப்பிரிவாக அறிவித்து, அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.

ஆனால் மத்திய அரசின் உத்தரவை மீறி, ராமதாஸின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கணக்கெடுப்பை நடத்த வேண்டாமென்று ஆணையத்துக்கு எந்த உத்தரவையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. அந்த விஷயம் அப்போது எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்டது. கணக்கெடுப்புக்கான காலக்கெடு முடிந்தபின்பு, அதுபற்றி விசாரிக்கும்போதுதான், கணக்கெடுப்பே நடத்தவில்லை என்பதும், நிதி திருப்பி அனுப்பப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்தியது ராமதாஸ்தான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அதற்கு அவருடைய கடிதத்திலேயே ஓர் ஆதாரமும் இருக்கிறது.

அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், ‘இந்த உண்மையை தமிழக அரசுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் விரிவாக விளக்கியிருப்பதாக எனக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலமாக அறிகிறேன்.’ என்று ஒரு வார்த்தையும் இடம் பெற்றிருக்கும். ஆணையம் விளக்கியது என்பதும், எனக்கு நெருங்கிய வட்டாரங்கள் என்பதும் ஆணையத்தின் தலைவர் தணிகாசலத்தைத்தான் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாமலே, தன்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை வைத்து, அரசு நிர்வாகத்திலேயே ராமதாஸ் தலையிட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதேபோல்தான், பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் சிலரை வைத்து, அத்துறையில் நடக்கும் புள்ளி விபரங்களைப் பெற்றுக்கொண்டு, அரசையும் அமைச்சர்களையும் அலறவிடும் அறிக்கைகளை அவர் வெளியிட்டு வருகிறார். இந்தக் கணக்கெடுப்பு நடத்தினால் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படும் என்று ராமதாஸ் சொல்லியிருந்தார். உண்மையில் அவருடைய தலையீட்டால், சீர்மரபினர் மற்றும் நாடோடிகளுக்குக் கிடைக்க வேண்டிய பல்வேறு சலுகைகளும் தடுக்கப்பட்டிருக்கும் உண்மை வெளிவந்தால்தான் சட்டம்–ஒழுங்கும் சமூகப்பதற்றமும் ஏற்பட வாய்ப்புண்டு. இதை ஆட்சியாளர்கள் இப்போதாவது உணர்ந்தால் நல்லது!’’ என்றார்கள்.

தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் பிரமலைக் கள்ளர், ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர்கள், செம்பநாடு மறவர்கள், சி.கே.குறவர்கள், வதுவார்பட்டி குறவர்கள், செட்டிநாடு வலையர்கள், போயர்கள், கந்தர்வக்கோட்டை கள்ளர்கள், ஆத்தூர் கீழ்நாடு குறவர்கள், ஆத்தூர் மேல்நாடு குறவர்கள், வேட்டுவக் கவுண்டர்கள் என 68 வகுப்பினர், தமிழகத்திலுள்ள சீர்மரபினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல பூம்பூம் மாட்டுக்காரர், ஜாமங்கிகோடக்காரர், சாட்டையடிக்காரர், பகல்வேடக்காரர் என 30க்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்தின் நாடோடிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கெல்லாம் இப்படியொரு கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு, நிதி கொடுத்ததும், அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படாமலே திருப்பி அனுப்பப்பட்டதும் தெரிந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையில் ஏதாவது ஒரு கட்சி, இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து பரப்புரை மேற்கொண்டால் கண்டிப்பாக பரபரப்பு தொற்றிக்கொள்ளும் என்பது நிச்சயம்.

ஒரு வேளை ராமதாசும் அதைத்தான் எதிர்பார்க்கிறாரோ என்னவோ?

**–பாலசிங்கம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *