மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

அன்புமணிக்கு வழிவிடும் ராமதாஸ்: டச்சில் சபரீசன்

அன்புமணிக்கு வழிவிடும்   ராமதாஸ்: டச்சில் சபரீசன்

இன்றைய கூட்டணி நிலவரம்

தற்போது வரை அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக, வன்னியர் உள் ஒதுக்கீடு கேட்டு அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அது தொடர்பாக 25 ஆம் தேதி நடந்திருக்க வேண்டிய பாமகவின் நிர்வாகக் குழுக்கூட்டம் 31 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சமுதாயங்களில் 80% வன்னியர்கள்தான் என்றும்,தமிழகத்தின் மக்கள் தொகையில் 24% வன்னியர்கள்தான் என்றும் அன்புமணி நேற்று (ஜனவரி 27) நடந்த கருத்தரங்கத்தில் கூறியிருக்கிறார். இதன் மூலம் எம்பிசிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டில் 16% வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதைத்தான் பாமக அதிமுக அரசிடம் கேட்கிறது. ஆனால் இந்த அளவுக்கு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பது நிர்வாக ரீதியாக இப்போது சாத்தியமா? இதனால் எம்பிசி பட்டியலில் இருக்கும் பிற சமூகங்கள், எம்பிசி பிரிவுக்கு வெளியே இருக்கும் சமூகங்களின் அதிருப்திக்கு தேர்தலின் போது ஆளாகிவிடுவோமா? என்றெல்லாம் யோசிக்கிறது அதிமுக அரசு.

அதனால்தான் முதல்வர் தரப்பில் இருந்து, ‘பொறுங்கள்’என்று ராமதாஸிடம் பேசியதை அடுத்து அவரும் அரசியல் முடிவெடுப்பதற்கான நிர்வாகக் குழுவை 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.

இதற்கிடையே ராமதாஸ் திமுகவை கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார். ‘20% இட ஒதுக்கீடு என்ற கனியை கொடுத்திருக்கிறேன்... அதை சுவைத்துப் பாருங்கள் என்று கலைஞர் கூறினார். அதுபற்றி உடனடியாக கருத்து தெரிவித்த நான் அதை அழுகிய கனி என்று விமர்சித்தேன். அப்போது அழுகிய கனி என்று விமர்சிக்கப்பட்ட இட ஒதுக்கீடு இப்போது மட்டும் இனிக்குமா? கலைஞர் உருவாக்கிக் கொடுத்த அழுகிய கனி இப்போது நாற்றமெடுத்த கனியாகி விட்டது. அதற்கு மாற்றாக சுவையான சமூகநீதிக் கனி வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. ’என்று திமுகவை கடுமையாகத் தாக்கினார்.

இதுகுறித்து அன்புமணி தனது அதிருப்தியை ராமதாஸிடம் தெரிவித்ததாகவும் திமுகவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது எதற்கு அவர்களை தாக்கி அறிக்கை விட வேண்டும் என்று ராமதாஸிடம் வருத்தப்பட்டதாகவும் மின்னம்பலத்தில் கூட்டணி:ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, டாக்டர் ராமதாஸ் அமைதியாகி அன்புமணிக்கு வழிவிட்டிருக்கிறார் என்கிறார்கள் பாமக வட்டாரத்தில்.

“அன்புமணி வருத்தப்பட்டதை அடுத்து ராமதாஸ், ‘சரி நீயே செய். நீ என்ன செய்கிறாய் என்பதை நானும் அக்கறையோடு விசாரித்துக் கொள்கிறேன். கட்சிக்கு நல்லதை செய்’என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து அன்புமணியும் ஏற்கனவே துரைமுருகன் உள்ளிட்ட பிரமுகர்கள் மூலம் திமுகவிடம் பேசிய நிலையில், இப்போது அவர்கள் இல்லாமல் பொதுவான ஒரு நபர் மூலம் திமுக தரப்பிடம் பேசிக் கொண்டிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலினின் மாப்பிள்ளையான சபரீசனுடன் தான் அன்புமணி தற்போது டச்சில் இருக்கிறார். வெளியே திமுகவும், பாமகவும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டாலும் உள்ளே இரு கட்சிகளுக்கும் இடையே அதிகாரபூர்வமற்ற முறையிலான பேச்சுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகளுக்கு மிகக் குறைந்த இடங்கள் என்று திமுக முடிவெடுத்திருப்பதற்கும், இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்று சொல்ல முடியாது. ஆனால் அன்புமணிக்கும் சபரீசனுக்கும் இடையே டச் இருக்கிறது என்பதே திமுக பாமக அரசியலின் இன்றைய நிலவரம்” என்கிறார்கள் இரு தரப்பில் இருந்தும்.

ராஜ்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 28 ஜன 2021