மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

திமுகவை விமர்சித்தால்... ராமதாஸுக்கு ஸ்டாலின் மெசேஜ்!

திமுகவை விமர்சித்தால்... ராமதாஸுக்கு ஸ்டாலின் மெசேஜ்!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திமுகவை விமர்சிக்க விமர்சிக்க, அக்கட்சியில் இருந்து திமுகவுக்கு வருகிறவர்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று ( ஜனவரி 28), கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி தொ.மு.ச. அலுவலக வளாகத்தில் பாமக, தேமுதிக, நாம் தமிழர், ரஜினி மன்றம் ஆகியவற்றில் இருந்து விலகி பலர் திமுகவில் சேர்ந்தனர். திமுக மாவட்டச் செயலாளர் சி.வெ.கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த இணைப்பு விழாவில் சென்னையில் இருந்து காணொலி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று அவர்களை வரவேற்றார்.

கடந்த சில தினங்களாக பாமக தரப்பில் இருந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் திமுக தரப்பிலும் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இந்த இணைப்பு விழாவை -பாமகவை விமர்சிக்க பயன்படுத்திக் கொண்டார் ஸ்டாலின்,

“நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்தில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த இயக்கம்தான் சமூகநீதியைக் காப்பாற்றும். இந்த இயக்கம்தான் ஏழை, எளிய - பாட்டாளி மக்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்.

வன்னியர் சமுதாயம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 20 சதவீத இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு கேட்டுப் போராடி - உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், உதவித் தொகையைும் அளித்தது தி.மு.க. ஆட்சி. தமிழ்நாட்டில் முதன்முதலில் டி.ஜி.பி.யாக ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த கட்சி தி.மு.க. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க.

ஆனால், டாக்டர் ராமதாஸ் சொந்த ஆதாயத்திற்காக - சுய நலத்திற்காக, தி.மு.க., வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துதான் இன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீங்கள் எல்லாம் விலகி - இந்த மாபெரும் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறீர்கள். ஆகவே, டாக்டர் ராமதாஸ் தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்க விமர்சிக்க, அக்கட்சியில் உள்ள பாட்டாளிகள் தி.மு.க.வை நோக்கி இன்னும் அதிகமாக வரப் போகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை”என்று ராமதாஸை நேரடியாகவே சாடினார் ஸ்டாலின்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வியாழன் 28 ஜன 2021