மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

ஏ1 க்கு அரசு மணிமண்டபம். ஏ2 வுக்கு கட்சியிலேயே இடமில்லையா? அதிமுகவுக்குள் தீப்பிடிக்கும் கேள்விகள்!

ஏ1 க்கு  அரசு  மணிமண்டபம். ஏ2 வுக்கு கட்சியிலேயே இடமில்லையா?  அதிமுகவுக்குள் தீப்பிடிக்கும் கேள்விகள்!

காலில் விழவும் வைக்கும், அதே காலை வாரியும் விடும். போற்றிய வாயே தூற்றும். குனிந்து கும்பிட்ட கரங்களே குழியும் பறித்து வீழ்த்தப்பார்க்கும். அத்தனைக்கும் ஒரே பெயர்தான் இருக்கிறது...அரசியல்! அந்த களத்தில் ஏமாற்றுவதற்குப் பெயர், சாதுர்யம்; துரோகத்துக்குப் பெயர் ராஜதந்திரம். அமெரிக்காவில் துவங்கி அதிமுக அரசியல்வரைக்கும் இதுதான் இன்றைய யதார்த்தம், நடைமுறை, அனுபவம் எல்லாமே.

இதில் ஏன் அதிமுக அரசியலை இப்போது பேச வேண்டும்...காரணமிருக்கிறது. தமிழக அரசியல் வரலாறு, நிறைய துரோகங்களையும், வ(எ)ண்ண மாற்றங்களையும் பார்த்திருக்கிறது. அதெல்லாம் கல்வியறிவும், தொழில் நுட்பமும் வளராத காலத்து நிகழ்வுகளின் தொகுப்பு. இப்போது வீட்டுக்கொரு பட்டதாரி; ஆளுக்கொரு ஆண்ட்ராய்டு; வீட்டுக்கொரு பத்திரிக்கையாளன். வீதிக்கு நான்கு யூடியூப் சேனல். இப்போதும் பழையவற்றை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து எதை வேண்டுமானாலும் செய்தால் அதை எப்படி மக்கள் ஏற்பார்கள்...இபிஎஸ்க்கும், ஓபிஎஸ்க்கும் இப்போது அதுதான் பிரச்சினை.

தரையில் ஒருவர் தவழ்ந்த வீடியோவும், கடற்கரையில் கண்மூடி ஒருவர் தர்மயுத்தம் செய்த வீடியோவும் இன்றைக்கும் பல ஆயிரம் பேர்களால் பார்க்கப்படுகின்றன, பகிரப்படுகின்றன. சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன்பு, அதிமுக தலைகள் அவருக்குக் காண்பித்த பவ்யமும் மரியாதையும், டெல்லியில் ‘சசிகலாவுக்கு கட்சியில் 100 சதவீதம் இடமில்லை’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லும் ஆவேச பேட்டிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு சமூக ஊடகங்களில் சராமாரியாக விவாதிக்கப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதானால் தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் சசிகலா சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடமும், மாற்று சமுதாயத்திலிருக்கும் அவருடைய ஆதரவாளர்களிடமும் இது குறித்து சமூக ஊடகங்களிலும், சமுதாயக்கூட்டங்களிலும் ஆவேச பட்டிமன்றமே நடக்கிறது.

இதுகுறித்து தென்மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்...

‘‘நாங்களும் சசிகலா ஆதரவாளர்களாகத்தான் அதிமுகவில் இருந்தோம். அவருடைய குடும்பத்தினரின் ஆதரவில்தான் பொறுப்புக்கு வந்தோம். சமூகத்தில் அங்கீகாரம் பெற்றோம். சம்பாதிக்கவும் செய்தோம். சசிகலா உள்ளே சென்ற பின்பு, நாங்கள் தினகரன் பக்கம் போய்விடவில்லை. இப்போதும் நாங்கள் அதிமுகவில்தான் இருக்கிறோம். இதுதான் எங்களை வளர்த்த இயக்கம். தினகரன் போன்றவர்கள் எங்களுக்கு அழைப்புவிடுத்தபோதும், நாங்கள் கட்சியை விட்டுப் போனதில்லை. எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா வளர்த்தெடுத்த இந்த இயக்கம் அழிந்து போய் விடக்கூடாது என்பதுதான் எங்களின் எண்ணம்.

இந்த ஒற்றுமை இருந்ததால்தான், இன்று வரைக்கும் கட்சியும் ஆட்சியும் நிலைத்து நிற்கின்றன. இப்போது ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. வரும் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரலாம்; வராமலும் போகலாம். ஆனால் கட்சி அதற்குப் பின்னும் இருக்க வேண்டும். அதற்கு வலுவான தலைமையும், இப்போதுள்ள ஒற்றுமையும் கண்டிப்பாக தொடர வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, ஆட்சிக்காலம் முடிந்தவுடன் பழனிசாமியும், பன்னீரும் இணைந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. அவருடன் இவர் கரம் கோர்த்தது முதல் இபிஎஸ்சை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டது வரையிலும் எல்லாமே இந்த ஆட்சியின் இறுதிநாள் வரையிலும் அதன் பலனை அனுபவிக்க வேண்டுமென்ற ஒரே காரணம்தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், சசிகலா வெளியே வருகிறார். அவர் சிறைக்குள் செல்வதற்கு முன், முதல்வர் நாற்காலியில் பழனிசாமியை அமர வைத்துவிட்டுப் போனது, அதிமுகவினருக்கு மட்டுமில்லை; அகில உலகத்திற்கும் தெரியும். தன்னுடைய பதவி பறிபோகிறது என்ற கோபத்தில்தான் சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அதே பன்னீர்தான், எஸ்ஐ ஆக இருந்தவர் ஏட்டையாவாக ஒப்புக்கொண்டது போல பதவியிறக்கம் செய்தாலும், கெளரவம் போனாலும் பரவாயில்லை என்று பதவிக்காக துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்டு பழனிசாமியுடன் கரம் கோர்த்தார். இருவருமே இந்த ஆட்சியால் பெரியளவில் பயன் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இப்போது திடீரென ‘சசிகலாவுக்கு கட்சியில் இடமே இல்லை’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம் காட்டுகிறார்.

பன்னீர் செல்வம் எந்தக்கருத்தும் சொல்லாமல் அமைதியாக ஒதுங்கி நிற்கிறார். சசிகலா வந்தால் மட்டுமே, இந்த ஆட்சிக்காலம் முடிந்த பின்னும் கட்சியை உடையாமல் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் பாமகவைப் போல அதிமுக கொங்கு மண்டலத்திற்கான ஒரு கட்சியாக சுருங்கிவிடுமென்பது நிச்சயம்!’’ என்றார்கள்.

சசிகலா சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர், இன்னும் கடுமையாக தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்...

“சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறையிலிருந்த ஊழல் குற்றவாளி சசிகலா விடுதலை என்று சில ஊடகங்கள் தொடர்ந்து விஷமத்துடன் குறிப்பிடுகின்றன. அமைச்சர்கள் சிலரும் தாங்களெல்லாம் நேர்மையாளர்கள் போலவும், ஊழல் வழக்கில் உள்ளே போன சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றும் கூறிவருகின்றனர். அவர் ஊழல் வழக்கில் உள்ளே போன குற்றவாளிதான். அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அப்படிப் பார்த்தாலும் அந்த ஊழல் வழக்கில் அவர் இரண்டாவது குற்றவாளிதானே...அதாவது A 2 தானே...வழக்கின் முதல் குற்றவாளி ஜெயலலிதாதானே...அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரும் இன்றுதானே சிறையிலிருந்து வெளியில் வந்திருப்பார். அப்படி வரும்போது ‘ஊழல் குற்றவாளி ஜெயலலிதா விடுதலை’ என்று இந்த அமைச்சர்களால் பேசியிருக்க முடியுமா...

சசிகலா அரசின் எந்தப் பொறுப்பிலும் இருந்ததில்லை. முதல்வராக இருந்தது ஜெயலலிதா மட்டும்தான். அவர் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுவதாகச் சொன்னதால்தான் இந்த சொத்துக்குவிப்பு வழக்கே அவர் மீது பாய்ந்தது. அரசின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதில்தான் அவருக்கும், கூட்டுச்சதிக்காக சசிகலாவுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த முதல் குற்றவாளிக்கு 80 கோடி ரூபாய் அரசுப் பணம் செலவிட்டு, 50 ஆயிரம் சதுரஅடி பரப்பில் நினைவிடம் எழுப்புகின்றனர். இரண்டாவது குற்றவாளியான சசிகலாவுக்கு கட்சியில் கூட இடமில்லை என்று சொல்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்.? எங்கள் சமுதாயத்தினர் அதிமுகவில் மீண்டும் தலைதுாக்கி விடக்கூடாது என்று திட்டமிட்டு நடக்கின்ற புறக்கணிப்பாகத்தான் இதை நாங்கள் பார்க்கிறோம். சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கவில்லை என்றால் அதிமுக உடைவது நிச்சயம். அந்த வகையில் நாங்கள் அவரின் பக்கம்தான் உறுதுணையாக நிற்போம். மற்ற சமுதாயத்தினரின் ஆதரவும் அவருக்குக் கிடைக்குமென்று நம்புகிறோம்!’’ என்றார்கள்.

சசிகலாவின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்குமென்று அறிந்து கொள்வதற்காக, அவருடைய குடும்பத்தினரிடம் பேசியபோது, ‘‘உண்மையிலேயே அவருடைய மனநிலை இப்போது எப்படியிருக்கிறது, அவர் வெளியில் வந்ததும் என்ன செய்யப்போகிறார் என்பது எங்களுக்கே தெரியாது. ஆனால் பலரும் நினைப்பதைப் போல அரசியலில் இருந்து முற்றிலுமாக அவர் ஒதுங்கிவிட வாய்ப்பேயில்லை.!’’ என்று கூறிவிட்டு, ‘‘பிப்.3க்கு மேல் உங்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும்’’ என்றும் ஒரு ‘க்’ வைத்தனர்.

சசிகலாவின் சிறை வாழ்க்கை முடிவு...அதிமுகவின் அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பம்!

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

வியாழன் 28 ஜன 2021