அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகள் :பிரேமலதா


தேமுதிக பொருளாளர் பிரேமலதா அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே அவ்வப்போது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் கருத்துகளை கூறி வருகிறார்.
அந்த வகையில் இன்று (ஜனவரி 27) தர்மபுரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்த பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். பெண் என்ற முறையில் சசிகலாவை ஆதரிப்பதாக கூறிய அவர், அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைகளை விரைவில் துவக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.,
சசிகலா விடுதலை பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, “சசிகலா விடுதலையாகி பூரண உடல் நலத்தோடு வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஒரு பெண்ணாக என்றைக்கும் அவருக்கு என் ஆதரவு உண்டு. மற்றபடி அதிமுகவில் அவரது விடுதலை தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதெல்லாம் அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். அதில் நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது.
சசிகலா ஒரு முதல்வருக்கு துணையாக இருந்து எல்லாவற்றையும் செய்தவர். அவருக்கு இப்போது வயதாகிவிட்டது ஹெல்த் இஷ்யூக்களும் வந்திருக்கின்றன. இது எல்லாவற்றையும் கடந்து அவரும் அரசியலுக்கு வரட்டுமே. வந்தால் என்ன?” என்று கருத்து தெரிவித்தார் பிரேமலதா.
மேலும், “தான் சசிகலாவால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி சொல்லியிருக்கிறாரே?”என்ற கேள்விக்கு,
“ அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிறகு ஏன் அப்படி சொன்னார் என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று பதிலளித்தார் பிரேமலதா.
அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள் என்று கேட்டதற்கு,
“அதிமுக கூட்டணியில் நாங்கள் ஏற்கனவே 41 தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறோம்.எனவே அதைத்தான் நாங்கள் கேட்டிருக்கிறோம்.பார்க்கலாம்”என்று பதில் அளித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் பரப்புரைக்கு வருவாரா எனக் கேட்டதற்கு,
“அவர் நன்றாக இருக்கிறார். ஏஜ் ஃபேக்டர் உள்ளிட்ட சில விஷயங்கள் இருக்கின்றன. முதல் ரவுண்டு, இரண்டாவது ரவுண்டு, மூன்றாவது ரவுண்டுகளை நாங்கள் பார்த்துக்கொள்வோம். கேப்டன் க்ளைமாக்ஸ் பிரச்சாரத்துக்கு வருவார்”என்று பதிலளித்தார் பிரேமலதா.