மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

ஸ்டாலின் வேல் எடுத்தால்....- விமர்சனங்களுக்கு ஆ.ராசா பதில்!

ஸ்டாலின் வேல் எடுத்தால்....- விமர்சனங்களுக்கு ஆ.ராசா பதில்!

திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் திருத்தணி அருகே அம்மையார் குப்பம் மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவருக்கு நினைவுப் பரிசாக வெள்ளி வேல் அளித்தனர்.

சமீபகாலமாக திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று பாஜக கடுமையாக விமர்சனம் செய்துவரும் நிலையில் திருத்தணி நிகழ்ச்சியில் ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசு வழங்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரம் குறித்து தனது பிரச்சாரத்தில் பேசினார். பாஜக மாநில தலைவர் முருகனும் ஸ்டாலின் வேலோடு காட்சியளிப்பதை விமர்சித்தார்.

இந்தப் பின்னணியில் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டம் திமுக சார்பில் ஆவடியில் நடந்தது.

இதில் உரையாற்றிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா ஸ்டாலின் கையில் வேல் இருக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.

"ஏன் வேல் உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? நாங்கள் பிடித்தால் முருகன் ஏற்றுக் கொள்ள மாட்டாரா?

தந்தை பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னவர். ஆனபோதும் ஆன்மிகத்தில் திளைத்த குன்றக்குடி அடிகளார் உடன் மிக நெருங்கிய நட்பு பாராட்டியவர். குன்றக்குடி அடிகளார் திருநீறு கொடுத்தால் அதை பெரியார் வாங்கிப் பூசிக் கொள்வார். மகாசந்நிதானம் என்று குன்றக்குடி அடிகளாரைப் பார்த்து வணங்குவார்.

இதேபோல சைவத்தில் ஊறிய திருவிகவும் பெரியாரும் நண்பர்கள். ஒரு முறை பெரியார் வீட்டுக்கு வந்த திருவிக அருகிலிருக்கும் ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். அவர் குளிக்கச் சென்ற பிறகு அவர் வைத்துவிட்டு போன விபூதிப் பொட்டலம் பெரியாரின் வீட்டிலே இருந்தது. குளித்து முடித்ததும் உடனடியாக நெற்றியில் திருநீறு அணிபவர் திருவிக. இதை உணர்ந்த பெரியார் அந்தத் திருநீறை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை நோக்கி வேகமாகச் சென்றார். இதைப் பார்த்து திருவிக ஆச்சரியப்பட்டார். அப்போது பெரியார், ‘நீ குளித்து முடித்ததும் திருநீறு பூசிக் கொள்வாயே? .. அதனால் தான் நானே எடுத்துக் கொண்டு வந்தேன்’ என்று கூறினார்.

சாய்பாபா உங்க ஆள்தானே... சாய்பாபாவை பார்க்கவேண்டுமென்று எத்தனையோ பேர் துடித்தார்கள். சாய்பாபா கலைஞரைப் பார்க்க கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். அப்போது நான் அங்கே இருந்தேன். துரைமுருகன் கூட காலைத் தொட்டுக் கும்பிட்டார். நான் கும்பிடவில்லை.,

கலைஞர் வீட்டில் இருந்து சாய்பாபா வெளியே வந்தபோது, ‘உங்களை தரிசிக்க ஏகப்பட்ட பேர் தவமாய் தவம் கிடக்கிறார்களே... நீங்கள் கலைஞரைத் தேடி வந்துள்ளீர்களே?’என்று கேட்டார்கள். அப்போது சாய்பாபா, ‘போன பிறவியில் கலைஞர் கரிகால் சோழனாக பிறந்தவர்.. கடவுள் என்னிடம் வந்து அவரைப் போய் பார்’ என்று சொன்னார். அதனால் பார்க்க வந்தேன்’ என்றார்.

வேலை நாங்கள் பிடித்தது தப்பு என்றால் கலைஞரை வந்து பார்த்த சாய்பாபாவை என்ன செய்வீர்கள்? ‘

நேற்று வரை சூப்பர் ஸ்டார் எங்கள் பக்கம் என்று சொன்னீர்களே... அவர் என்ன சொன்னார் என்றால்,‘நான் சாய்பாபாவை பார்க்க பல வருடம் காத்திருந்தேன். ஆனால் அவர் கலைஞரைத் தேடி வருகிறார். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்... கலைஞருக்கு கடவுளைப் பிடிக்கவில்லை. ஆனால், கடவுளுக்குக் கலைஞரைப் பிடிக்கிறது’ என்று ரஜினி சொன்னார்.

சாய்பாபாவும், ரஜினிகாந்தும் கலைஞரை கடவுளுக்குப் பிடிக்கிறது என்று சொல்லும்போது ஸ்டாலின் கையில் வேல் இருந்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை?

நான் எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜக முருகனுக்கும் மரியாதையோடு கேட்கிறேன்... இந்த வேலைத் தூக்கிக் கொண்டு அலகு குத்திக் கொண்டு அரை நிர்வாணமாக ஆவடி வீதிகளில் வரத் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், எல்லா முருகன் கோயில்களிலும் சமஸ்கிருத அர்ச்சனையை எடுத்துவிட்டு கந்த சஷ்டி கவசத்தை, தமிழ் மந்திரங்களை ஒலிக்கச் செய்ய வேண்டும். செய்வீர்களா?

முருகன் இருக்கிறாரோ இல்லையோ அப்படி இருந்தார் என்றால் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை சூரசம்ஹாரம் பண்ணிவிட்டு தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதுதான் அந்த முருகனின் முதல் வேலை” என்று பேசினார் ஆ. ராசா.

-வேந்தன்.

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

செவ்வாய் 26 ஜன 2021