மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

மீண்டும் சீட்டு: அதிமுகவில் எத்தனை எம்.எல்.ஏ.க்களுக்கு வேட்டு?

மீண்டும் சீட்டு: அதிமுகவில் எத்தனை எம்.எல்.ஏ.க்களுக்கு வேட்டு?

ஒரு காலத்தில் அரசியல் அதகளம் என்றால் மதுரை அல்லது திருச்சிதான் அதன் துவக்கப்புள்ளியாக இருக்கும். சென்னை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் அரசியல் மாநாடு, தலைவர்கள் போட்டி, பிரமாண்ட பேரணி என்று அரசியல் அனல் தெறிக்கும். கோவையெல்லாம் எந்தக் காலத்திலும் அந்த லிஸ்ட்டிலேயே இருந்ததில்லை. கோவை என்றால் தொழிலுக்கும் உழைப்புக்கும் மட்டும்தான் பெயர் பெற்றது என்று பேசப்பட்ட காலம் ஒன்று இருந்தது. படித்தவர்களும், பணக்காரர்களும் அதிகமிருக்கும் ஊர் என்பதால் அரசியல் ஆர்வம் அதிகமிருக்காது என்றும் முத்திரை குத்தப்பட்ட ஊர் கோவை. அதெல்லாம் பத்தாண்டுக்கு முன்பு வரை.

புயல் ஓரிடத்தில் புறப்பட்டு, வெவ்வேறு இடங்களில் மையம் கொள்ளுவதைப் போல, தமிழக அரசியல் புயல் எங்கெங்கோ துவங்கி, இப்போது கொங்கு மண்டலத்தில் மையம் கொண்டிருக்கிறது. முதல் முறையாக கொங்கு மண்ணின் மைந்தன் தமிழக முதல்வராக இருப்பது மாத்திரமல்ல. இந்த அரசின் அதிமுக்கியத் துறைகளை, பணம் புழங்கும் பசையுள்ள பதவிகளை வைத்திருப்பதும் கொங்கு நாட்டுப் புள்ளிகள்தான்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதாவால் கோவையில் நடத்தப்பட்ட முதல் பொதுக்கூட்டம்தான் ஆட்சி மாற்றத்துக்கு அச்சாரம் போட்டது. அப்புறம் பத்தாண்டுகளாக தொடர்கிறது அதிமுக ஆட்சி. கடந்த தேர்தலிலும் திமுக தோற்கவும், அதிமுக மீண்டும் ஜெயிக்கவும் அடித்தளம் போட்டுக் கொடுத்தது இந்த கொங்கு மண்டலத்தில் அக்கட்சிக்குக் கிடைத்த அசாத்திய வெற்றிதான்.

அதனால் இந்த முறை இரண்டு கூட்டணிகளிலும் இரட்டிப்பு கவனம் பெற்றிருக்கிறது கொங்கு மண்டலம். கோவையில் 10, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தலா 8, சேலத்தில் 11, ஒரு ஓரமாய் இருக்கும் நீலகிரியில் 3 என 40 தொகுதிகள் இந்த மண்டலத்தில் இருக்கின்றன. இவற்றில் மலைமாவட்டமான நீலகிரியின் அரசியல் தனித்துவமானது. ஜெயலலிதா தன் சொந்த ஊராக அந்த மண்ணை நினைத்து அங்கேயே வாழ்வதற்கு ஆசைப்பட்டு அங்கே குடியேறிய பின்னும் அதிமுக அங்கே மண்ணைக் கவ்வியது வரலாறு. கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ள கிராம ஊராட்சியின் தலைவராக இருந்த பொன்தோஸ், தோடர் இன பழங்குடியினராக இருந்தாலும் தீவிர திமுக விசுவாசி. இப்போது மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்.

நீலகிரியை விட்டு விட்டு மற்ற மாவட்டங்களைப் பார்த்தால், கொங்கு மண்டலம் பெரும்பாலும் அதிமுகவின் கோட்டையாகத்தான் பெயர் பெற்றிருக்கிறது. இடையிடையே ஒன்றிரண்டு தேர்தல்களில் அத்தி பூத்தாற்போல் திமுக ஜெயித்ததும் ஏதோ ஓர் அலையிலாகத்தான் இருக்கும். இத்தனைக்கும் கோவைக்கும் கருணாநிதிக்கும் அப்படியொரு பந்தம் இருந்தது.

2011 தேர்தல் பிரசாரத்தின்போது, கருணாநிதி பேசுகையில், ‘‘இந்த மண்ணுக்கும் எனக்கும் உள்ள சொந்தம் சாதாரணமானதல்ல; இந்த பிணைப்பு, அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல. கோவை, நான் அரசியலுக்காக வந்து போகும் இடமில்லை; என் வாழ்வில் இடம் பெற்ற முக்கியமான இடம். கோவை கொள்கை வீரர்களின் கோட்டை என்னைத் தாலாட்டிய தொட்டில் நான் விளையாடிய தாழ்வாரம் என்னைப் படிக்க வைத்த, கலை உலகுக்கு அறிமுகம் செய்த மண், இந்த உணர்வோடுதான் நான் உங்களை சந்திக்கிறேன்.’’ என்று உருகினார்.

கடந்த 2010ம் ஆண்டில் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்க்கும் மேலாக செலவழித்து கோவையில் செம்மொழி மாநாட்டை கருணாநிதி நடத்திய பின்னும் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் பத்தையும் மொத்தமாக இழந்தது திமுக. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆறுதலாக ஒரு தொகுதியில் வென்றது. கருணாநிதி இறக்கும் வரையிலும், கோவையில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டுமென்று நினைத்த ஆசை நிறைவேறவேயில்லை.

பழங்கதை போதும்...2021 தேர்தலுக்கு வருவோம்...

பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் இங்கு பெற நினைக்கிறார் ஸ்டாலின். அதை முறியடித்து மீண்டும் மீண்டும் அதிமுக கோட்டையாக மாற்றப் போராடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கோவையில் இருவரும் மாறிமாறி பரப்புரை மேற்கொண்டு வசைமாரி பொழிந்து கொண்டதன் காரணமும் அதுதான்.

இப்போது இரண்டு கட்சிகளிலும் தேர்தலுக்கான ஆயத்த வேலைகள் அமர்க்களமாக நடந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியலையும் ஏறத்தாழ இரண்டு கட்சிகளிலுமே குத்துமதிப்பாகத் தயாரித்துவிட்டார்கள். இனி வேட்பாளர்களின் சொத்து மதிப்பைப் பொறுத்து, இந்தப் பட்டியல் இறுதியாவதற்கு வாய்ப்புண்டு.

முதலில் அதிமுகவை எடுத்துக் கொள்வோம்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள்கள் பரப்புரை மேற்கொண்டு திரும்பிய பின்பு, கோவை அதிமுகவினர் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவு, நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தோல்வி, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அ.தி.மு.க., நிர்வாகி கைது என பல காரணங்களால் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரிதும் நம்பிக்கை இழந்திருந்தனர். முதல்வர் வந்து சென்ற பின்பு, இந்த அவநம்பிக்கை குறைந்து அவர்களிடம் புதிய உற்சாகமும் எழுச்சியும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அடுத்தடுத்த தேர்தல் வேலைகளிலும் இறங்கிவிட்டதாக கோவை அதிமுக நிர்வாகிகள் தகவல் கூறுகின்றனர். இப்போதைக்கு எந்தெந்தத் தொகுதியில் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது பெரும் விவாதமாக எழுந்துள்ளது.

கோவையிலுள்ள 10 தொகுதிகளில் கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு ஆகிய 3 தொகுதிகளை பாரதிய ஜனதா குறி வைத்திருப்பது குறித்து, மின்னம்பலத்தில் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அதை சம்பந்தப்பட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகளே உறுதிப்படுத்தினர். ஆனால் முதல்வரின் வருகைக்குப் பின், வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை எதற்காக கூட்டணிக் கட்சிகளுக்குத் தர வேண்டுமென்கிற ரீதியில் அதிமுக நிர்வாகிகள் யோசிப்பதாகத் தெரிகிறது.

அதனால் கோவையில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே, பாரதிய ஜனதாவுக்குத் தரலாம் என்கிற மனநிலைக்கு அவர்கள் மாறியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. வானதி சீனிவாசன் அல்லது அண்ணாமலைக்கு கோவை தெற்கு அல்லது கிணத்துக்கடவு ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றுதான் தரப்படுமென்றும் பேசிக்கொள்கின்றனர். மற்ற தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஏற்கெனவே சீட் இல்லை என்பதும், திருப்பூர் வடக்குக்கு அவர் திருப்பப்படுகிறார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்கிறார்கள்.

அமைச்சர் வேலுமணி தொகுதி மாற வாய்ப்பில்லை என்றுதான் தெரிகிறது. கோடிகளைக் கொட்டி தொகுதியை தீயாய் வைத்திருக்கிறார். வளர்ச்சிப் பணிகளைத் தாண்டி, வீடுவீடாக கொரோனா நிவாரணப் பொருள்களை வாரிக்கொடுத்து, கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சம்பிரதாயம் ஒன்றும் விடாமல் அட்டெண்ட் செய்து செயல்புயலாக வலம் வருகிறார் வேலுமணி. அவரை எதிர்த்து யார் நின்றாலும் ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டாகத்தான் இருக்கும். அதனாலேயே ஜல்லிக்கட்டு புகழ் கார்த்திகேயன் சேனாதிபதியை அங்கே அவருக்கு எதிராக களம் இறக்குவார்கள் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

மற்ற எம்எல்ஏக்களில் கிணத்துக்கடவு சண்முகத்துக்கும், கவுண்டம்பாளையம் ஆறுக்குட்டிக்கும், வால்பாறை கஸ்துாரிக்கும் மறுபடியும் சீட் இல்லை என்பது ஏறத்தாழ முடிவாகிவிட்டது என்கிறார்கள். மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்ராஜ் மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்துவிட்டதால், மக்களுக்கே அவரைக் கண்டால் அலர்ஜியாக இருக்கிறது. அங்கேயும் வேட்பாளர் மாற்றப்படும் வாய்ப்பு அதிகம். வேலுமணியின் தீவிர ஆதரவாளரான நாசருக்கு வாய்ப்பு தரப்படும் என்று ஓர் ஆச்சரியத் தகவல் சொல்கிறார்கள். ஆனால் பிஜேபி கூட்டணி இருக்கும் வரை அது சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது. அதனால் அங்கே வேட்பாளர் தேர்வில் குழப்பம் இருக்கும்.

இப்போது கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பிஆர்ஜி அருண்குமார், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர். நம்பிக்கை தீர்மானம் நடந்த நாளில், கூவத்துாரிலிருந்து புறப்பட்டு சட்டசபைக்குப் போகாமல் கோவைக்கு வந்தவர். அவருடைய சொந்தத் தொகுதியான கவுண்டம்பாளையத்தில் அவருக்கு வாய்ப்புத் தர அதிமுக தலைமை விரும்புகிறது. ஆனால் அங்கே திமுகவில் நிறுத்தப்படவுள்ள கிருஷ்ணன் என்ற பையாக்கவுண்டர் மானாவாரியாகச் செலவழிப்பார் என்பதால் அவர் தற்போதுள்ள கோவை வடக்கிலேயே மீண்டும் நிற்க நினைக்கிறார். அந்தத் தொகுதியை வேலுமணியின் வலது கரமான வடவள்ளி சந்திரசேகர், தன் மனைவி ஷர்மிளாவுக்காகக் கேட்டுப் போராடி வருகிறார். இதற்காக அவர் அந்தப் பகுதியில் எக்கச்சக்கமாக வேலை செய்திருக்கிறார். வடவள்ளியில் முதல்வர் எடப்பாடிக்கு அவர் சார்பில் கொடுத்த வரவேற்பு, அமைச்சரையே ஒரு நிமிடம் ஆடவைத்துவிட்டது என்கிறார்கள். அதனால் இருவருக்கும் இல்லாமல் பாரதிய ஜனதாவுக்குக் கொடுத்து விடலாம் என்ற வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.

கோவை தெற்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் அமைச்சர் வேலுமணியின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படலாம். ஆனால் அந்தத் தொகுதிதான் வேண்டுமென்பதில் வானதி சீனிவாசன் திட்டவட்டமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கேயும் குழப்பம்தான். சிங்காநல்லுார் தொகுதிக்கு முன்னாள் மண்டலத் தலைவர் ஜெயராமனும், கட்சியின் சீனியர் சிங்கை பாலனின் மகனும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயராமனுக்கே ஜெயம் கிடைக்குமென்கிறார்கள். சூலுாரில் இடைத்தேர்தலில் ஜெயித்த எம்எல்ஏ கந்தசாமி, இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக பதவியில் இல்லாததால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தரப்படலாம்.

பாலியல் விவகாரம் காரணமாக, பொள்ளாச்சியில் யார் நிறுத்தப்பட்டாலும் தேறுவது கஷ்டமென்பதால், அந்தத் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்குத் தள்ளிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இப்போதைக்கு முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயணம் கோவையில் மட்டுமே முடிவடைந்திருப்பதால் அங்குள்ள நிலவரம் மட்டும்தான் தெரிந்திருக்கிறது. சேலத்தில் 11 தொகுதிகளில் எந்தெந்தக் கட்சி போட்டியிடுவது, யார் யாருக்கு சீட் என்பதையெல்லாம் முதல்வர் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் யாருக்கு சீட்டு யாருக்கு வேட்டு என்பதெல்லாம் இன்னும் தெளிவாகவில்லை. கூட்டணி முடிவாகும் வரை அதில் குழப்பம் தொடருமென்பது உறுதி.

கொங்கு திமுகவின் நிலை என்ன? அதை அடுத்த செய்தியில் பார்க்கலாம்

-பாலசிங்கம்

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

செவ்வாய் 26 ஜன 2021