மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

டிஜிட்டல் திண்ணை: கமல் வாக்கு வங்கி: ஸ்டாலின் கையில் பிகே சர்வே!

டிஜிட்டல் திண்ணை:  கமல் வாக்கு வங்கி: ஸ்டாலின் கையில் பிகே சர்வே!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

"சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பல கட்சிகளிலும் சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றது. தலைவர்களின் மேடைப் பேச்சுகளும் பேட்டிகளும் கூட்டணி பற்றிய அவர்களின் மன ஓட்டத்தையும் குறித்துக் காட்டுகின்றன.

இந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மதச்சார்பற்ற அரசியல் பேசும் கமல்ஹாசன் காங்கிரஸிற்கு வரவேண்டும். காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன் காங்கிரஸின் அன்பை மதிக்கிறேன். கூட்டணி பற்றி கூற இன்னும் நேரம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே நேரம் காங்கிரசை உள்ளடக்கிய கூட்டணியின் தலைவரான திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்... "காங்கிரஸ் கமல்ஹாசனை அழைப்பது அவர்களின் தனிப்பட்ட கருத்து"என்று கூறியுள்ளார்.

ஒருவேளை சீட் பிரச்சினைகளின் காரணமாக திமுகவுடனான உறவு முறியும் பட்சத்தில் கமல்ஹாசன் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்பது அழகிரியின் எண்ணமாக இருந்தது. எல்லாக் கதவுகளையும் திறந்து வைப்பது தானே தேர்தல் நேரத்தில் கட்சிகளின் வழக்கம் என்று அழகிரிக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது காங்கிரசின் சொந்த கருத்து என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதற்கு பின்னால் ஒரு கணக்கு இருக்கிறது என்கிறார்கள் ஐபேக் வட்டாரத்தில்.

தற்போது திமுகவுக்காக பணியாற்றிவரும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு கமல்ஹாசனுடன் சில காலங்கள் பணியாற்றியது. அதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கட்டமைப்பு, தொண்டர் பலம் உள்ளிட்ட பலவற்றை பற்றிய புள்ளி விவரங்கள் ஐபேக்கிடம் உள்ளன. மேலும் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு பணியாற்ற ஆரம்பித்ததும்... கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் இருக்கும் பல கட்சிகளின் பலம் பலவீனங்களை சர்வே மூலமாக ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆய்வுக்கு உட்பட்ட கட்சிகளில் மக்கள் நீதி மய்யமும் ஒன்று.

கடந்த சில வாரங்களாக கமல்ஹாசன் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறார். அவரது பரப்புரைக்கு பெரும் திரளான கூட்டம் கூடுகிறது. இது பற்றி கமல்ஹாசனே வியந்து குறிப்பிட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணையக் கூடும் என்று கூட ஒரு பேச்சு கிளம்பியது. உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து கமலுடன் பேசுவதாகக் கூட ஹேஸ்யங்கள் வந்தன. நகர்ப்புறப் பகுதிகளில் கமல்ஹாசனுக்கு ஓரளவு செல்வாக்கு இருப்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கூறியதன் அடிப்படையில்.. ஆட்சிக்கு எதிராக கமலஹாசன் தரப்போகும் வாக்குகளை திமுக கூட்டணியில் கொண்டுவந்தால் என்ன என்றும் கூட திமுகவுக்குள் விவாதங்கள் நடந்தன.

அதேநேரம் பிரசாந்த் கிஷோரின் சர்வே படி தொடர்ந்து சில மாதங்களாகவே கமல்ஹாசன் 2 சதவீத மக்கள் ஆதரவை தான் பெற்றிருக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புள்ளிவிவரங்கள் தரப்பட்டிருக்கின்றன. பிரசாந்த் கிஷோர் அளித்த புள்ளி விவரங்களுக்கு பிறகு ஸ்டாலின் கட்சிக்குள் கமல் கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. இந்தப் பின்னணியில்தான் கமல்ஹாசனை காங்கிரசார் அழைப்பது அவர்களின் சொந்தக் கருத்து என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்" என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

செவ்வாய் 26 ஜன 2021