மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

மிரட்டல்- கெஞ்சல்: காங்கிரசுக்கு ஸ்டாலின் போட்டிருக்கும் புதுக் கணக்கு!

மிரட்டல்- கெஞ்சல்: காங்கிரசுக்கு ஸ்டாலின் போட்டிருக்கும்  புதுக் கணக்கு!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்று நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு... "அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு ? நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக தொடர்ந்தோம் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்ந்தோம்... "என்று இன்று (ஜனவரி 25) கூறியிருக்கிறார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்.

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்வதாக ஸ்டாலின் உறுதிப்படுத்தினாலும்... கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பதில் திமுக தெளிவாக இருக்கிறது. அதாவது இதற்கு முந்தைய 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கிய அதிக அளவு இடங்கள் இந்தத் தேர்தலில் கிடையாது என்பதில் திமுக தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது.

இதுகுறித்து ஸ்டாலினின் நலம் விரும்பிகள் அவரிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் கள். அந்த நலம் விரும்பிகளின் வட்டாரத்தில் நாம் பேசியபோது...

"2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 63 இடங்களை பெற்ற காங்கிரஸ் வெறும் 5 இடங்களில்தான் ஜெயித்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவியை சம்பந்தப்படுத்தி அதிலும் திமுக தலைவர் கலைஞரின் மனைவியான தயாளு அம்மாளை சிபிஐ விசாரணைக்கு அழைத்து... அந்த விசாரணையை கலைஞர் டிவி அலுவலகத்தில் வைத்து நடத்தி அதே நேரத்தில் கீழ்த்தளமான அறிவாலயத்தில் காங்கிரசுக்கான தொகுதி பேரத்தை அதிகாரத் திமிரோடு நடத்தி 63 தொகுதிகளை வலுக்கட்டாயமாக பெற்றது காங்கிரஸ்.

மத்தியில் ஆட்சியில் இருந்த போது இப்படி என்றால்... 2016 சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை.

2011 தேர்தலில் பெற்ற பாடத்தையடுத்து 2016 சட்டமன்றத் தேர்தலிலேயே காங்கிரசுக்கு அதிக பட்சம் 30 தொகுதிகள் தான் என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார். அப்போதைய திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளிடமும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் கலைஞர்.

அப்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்வதற்காக டெல்லியிலிருந்து குலாம் நபி ஆசாத் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்தார். கலைஞரின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவரது கையைப் பிடித்து நலம் விசாரித்தார். சோனியாவின் அன்பை தெரிவித்தார். அதன்பிறகு சீட்டுகளின் எண்ணிக்கை பற்றி பேச்சு வந்தபோது கலைஞர் 25 லிருந்து 30 என்று தெளிவாக கூறிவிட்டார்.

அதிர்ந்துபோன குலாம் நபி ஆசாத் எழுந்து நின்று உயரமான தன் உருவத்தை அமர்ந்திருந்த கலைஞருக்கு நிகராக வளைத்துக் கொண்டார். கலைஞரின் கையைப் பிடித்துக் கொண்டார். "ஐயா.. சோனியா காந்தி அம்மையார் உங்களை தன் தந்தையார் ஸ்தானத்தில் வைத்துள்ளார். நாங்களும் அவ்வாறே உங்களை பார்க்கிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் இருந்த போது உங்களுடைய வழிகாட்டுதலின்படி தான் நடக்கிறது என்று சோனியா காந்தி அம்மையார் வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.

நாங்கள் யாரிடம் கேட்க முடியும்? எங்கள் தந்தையிடம் தானே கேட்க முடியும்? கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட கொஞ்சமாக வேண்டுமானால் குறைத்துக் கொள்ளுங்கள். அதிகமாக குறைத்து விடாதீர்கள்.... என்ற குலாம்நபி ஆசாத் கலைஞரின் பக்கத்தில் நின்று கெஞ்ச... கலைஞர் சட்டென இரங்கிவிட்டார்.

’சரிய்யா... 40 தொகுதி வெச்சுக்கோங்க’ என்று சொல்ல... மீண்டும் கலைஞரின் கையை பிடித்துக் கொண்டு குலாம் நபி ஆசாத், ’40 என்று ரவுண்டாக வேண்டாம். ஒன்று கூடுதலாக 41 கொடுங்களேன்’ என்று கேட்டு மீண்டும் கலைஞரை புகழ்ந்து பேச வேறு வழியில்லாமல் 41 என கணக்கை முடித்தார் கலைஞர். ஆனால் அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் சரிவர திட்டமிடாமல் வேட்பாளர்களில் குழப்பத்தை ஏற்படுத்தி 8 இடங்களில்தான் ஜெயித்தது"என்று குறிப்பிட்டு இந்த 2 தேர்தல்களின் போதும் காங்கிரசின் அணுகுமுறையை சுட்டிக்காட்டிய ஸ்டாலினின் நலம் விரும்பிகள்...

"அதிகாரம் இருந்தால் மிரட்டுவார்கள் உருட்டுவார்கள். அதிகாரம் இல்லை என்றால் கொஞ்சுவார்கள் கெஞ்சுவார்கள் இதுதான் காங்கிரசின் பாணி பழக்கம். கலைஞரைப் போல இரக்கம் காட்டி விடாதீர்கள். அப்புறம் திமுகவுக்கு தான் அது தீமையாய் முடியும்"என்று ஸ்டாலினுக்கு அறிவுறுத்தி உள்ளார்கள்.

அதனால் இந்தமுறை காங்கிரசுக்கு 20 தொகுதி என்பதில் இறுதியாகவும் உறுதியாகவும் இருக்கிறார் ஸ்டாலின். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியதும் ஸ்டாலினின் இந்த கெடுபிடியை காங்கிரஸார் காண்பார்கள் என்கிறார்கள் ஸ்டாலினை சுற்றி உள்ளவர்கள்.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 25 ஜன 2021