மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

முதல்வர் எடப்பாடியை திக்குமுக்காட வைத்த வேலுமணி

முதல்வர் எடப்பாடியை திக்குமுக்காட வைத்த வேலுமணி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  ‘வெற்றி நடை போடும் தமிழகம்’  என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வகையில் கொங்கு மண்டலத்தில் தனது அடுத்த கட்ட பிரச்சாரத்தைத் துவக்குவதற்காக கோவையில் 23, 24 தேதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முதல்வர்,.

கோவையின் காவல் தெய்வம் என்று கருதப்படும் கோனியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு தனது பரப்புரையை பக்திமயமாகத் தொடங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒவ்வொரு முறை முதல்வர் கோவை வரும்போதும் உற்சாகமாக வரவேற்பு அளிப்பார் உள்ளாட்சித் துறை அமைச்சரும் கோவை மாவட்ட அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி. ஆனால் இம்முறை தேர்தல் பிரச்சாரத்துக்கென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதால் தன் வெயிட்டை காட்டும் வகையில் பிரம்மாண்டமாக முதல்வருக்கு  வேலுமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் நீந்திதான் முதல்வர் பிரச்சார ஸ்பாட்டான  வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு சென்று சேர்ந்தார்.

முன்னதாக கோவை தொழிலதிபர்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி குறிப்பிட்டுப் பேசினார்.

“கோவை மாவட்டத்துக்காக பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி மக்களின் அன்பைப் பெறுவதில் எஸ்.பி.வேலுமணி முதன்மையாக திகழ்கிறார். என்னை பார்க்கும் போதெல்லாம் மக்கள் நல திட்டங்களுக்கான கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருப்பார். அவர் கோரிக்கை வைக்காத நாட்களே இல்லை.நிதி இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றி எல்லாமல் கவலைப்படாமல் அதை செய்யுங்க, இதை செய்யுங்க என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  கோரிக்கை வைத்துக் கொண்டே இருப்பார்.  

மக்களுக்கான திட்டங்களை அடிக்கடி கேட்டு கேட்டு, அதனை பெறுவதில் மற்ற அமைச்சர்களுக்கெல்லாம். எஸ்.பி.வேலுமணி முன்மாதிரியாக திகழ்கிறார்”என்று பாராட்டிய எடப்பாடி பழனிசாமி, கோவைக்காக அதிமுக அரசு செய்துள்ள திட்டங்களைப் பட்டியலிட்டார்.

“ரூ. 1625 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவினாசி திட்டம்,ரூ. 172 கோடி மதிப்பில் வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். ரூ 39.17 கோடியில் உக்கடம் பெரியகுளம் குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகுபடுத்தப்படுகிறது. 624 ஏக்கர் பரப்பளவில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள். ரூ. 230 கோடி மதிப்பில் நொய்யல் நதி படுகையில் 18 அணைகள், 22 குளங்கள் புனரமைப்பு. ரூ. 1,620 கோடி மதிப்பில் 10.1 கி.மீ நீளம், 17.25 மீட்டர் அகலத்தில் 4 வழித்தடங்களுடன் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம். ரூ. 381 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதி நவீன உபகரணங்கள் மற்றும் புதிய கட்டிடங்கள்.

தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம் மற்றும் புளியகுளம் ஆகிய 5 பகுதிகளில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ரூ.500.25 கோடி மதிப்பில் ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலை. ரூ. 194 கோடி மதிப்பில் காந்திபுரத்தில் 2 அடுக்கு மேம்பாலம் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது”என்று மூச்சுவிடாமல் வாசித்தார் எடப்பாடி பழனிசாமி.

கோவை விசிட் முடித்துவிட்டுப் புறப்படும்போது வேலுமணியை தனியாக அழைத்த முதல்வர், “இதுவரை நமது பிரச்சாரப் பயணத்தில் நான் பார்க்காத கூட்டம் இது. சிறப்பான ஏற்பாடு செய்த நம் நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டு மட்டும் போதாது பரிசும் கொடுக்க வேண்டும்” என்று கூற, வேலுமணியோ, “கொங்கு மண்டலத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிதான் உங்களுக்கு நான் கொடுக்கும் பரிசு”என்று வேலுமணி பதிலளிக்க...நிறைவாகவே புறப்பட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

-வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 25 ஜன 2021