மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

அதிமுக கோஷ்டிப் பூசல்: அம்பலமாக்கிய மொழிப் போர் தினம்!

அதிமுக கோஷ்டிப் பூசல்: அம்பலமாக்கிய மொழிப் போர் தினம்!

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25ஆம் தேதியன்று அனைத்துக் கட்சியினராலும் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.

திருச்சி அதிமுக சார்பில் இன்று காலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அதன் பிறகு அங்கிருந்து ஊர்வலமாக கிளம்பி அண்ணாநகரில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட மிகவும் குறைவாக இருந்தது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெருத்த ஆதங்கத்தை கிளறி விட்டிருக்கிறது.

இது பற்றி எம்.ஜி.ஆர் காலத்து மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசும் போது, “முன்னையெல்லாம் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வே தொண்டர்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியை ஊட்டும் அளவிற்கு இருக்கும். ஆனால் வர வர, ‘கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன கதை’ என்ற பழமொழிக்கு உதாரணமாக மாறி விட்டது. திருச்சி அதிமுகவில் இருக்கும்‘கோஷ்டி பூசல்தான் இதற்கு காரணம்”என்கிறார்.

அதாவது, மாநகர் மாவட்ட செயலாளரின் பேரில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டாலும், மொழிப்போர் தியாகிகள் அஞ்சலியை பொறுத்த வரை அதை எப்போதுமே முன்னின்று நடத்துவது கட்சியின் மாணவரணிதான். தற்போது, திருச்சி மாநகர் மாணவரணி செயலாளராக இருக்கும் ஆவின் சேர்மன் கார்த்திகேயனுக்கும், மாநகர மாவட்ட செயலாளரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.

தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அவர்கள் இருவருமே திருச்சி கிழக்கு அல்லது மேற்கு தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில், ‘இந்த மொழிப்போர் தியாகிகள் அஞ்சலிக்கு சேரும் கூட்டம் கார்த்திகேயனுக்கு சாதகமாகி விடக்கூடாது’ என கருதிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதற்கேற்றபடி, மாநகர புள்ளிகளுக்கு ‘சிக்னல்’ கொடுத்ததாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த ஆவின் கார்த்திகேயன் பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வரும் ‘அதே பாணியை’ பின்பற்றி சுமார் 200 பேரை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரம், அதற்கு ஒரு மணி நேரம் கழித்து டி.டி.வி. தினகரனின் அமமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் தொழிற்சங்கங்கள், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் பேரவை, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, விவசாயப்பிரிவு, இளைஞரணி என பலரும் அதிமுகவினரை விட அதிக எண்ணிக்கையில் உழவர் சந்தை மைதானத்தில் ஒன்றாகக் கூடி ஊர்வலமாக சென்று மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அமமுகவினரின் எழுச்சிக்கு சசிகலாவின் வரவு காரணமாக கூறப்பட்டாலும், திருச்சி அதிமுக முக்கியப்புள்ளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரிசல்களை இந்த மொழிப்போர் தியாகிகள் அஞ்சலி ஊர்வலம் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

-பாரதி

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 25 ஜன 2021