மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்: மாசெக்கள் கூட்ட அறிவிப்பை உறுதி செய்த ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்: மாசெக்கள் கூட்ட அறிவிப்பை உறுதி செய்த ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 25) காலை 11 மணிக்கு சென்னை கோபாலபுரம் கலைஞர் இல்லத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக தகவல்கள் வந்தன. அதன்படி கோபாலபுரம் இல்லத்தின் முகப்பில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.நேற்றே ஐபேக் குழுவினர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு சில திருத்தங்களைச் செய்தனர்.

இன்று காலை 10.45 மணிக்கு கோபாலபுரம் இல்லம் வந்த திமுக தலைவர் ஸ்டாலின்... கலைஞரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் சிறிது நேரத்தில் கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,

“வரும் 29 ஆம் தேதி முதல் அடுத்த கட்ட பிரச்சாரத்தைத் தொடங்க இருக்கிறேன். தமிழக அரசின் கடன் தொகை 5 லட்சம் கோடியாக உயர்வு, விவசாயிகளை வஞ்சிப்பது, விலைவாசி உயர்வு என தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது அதிமுக அரசு. இந்த ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் நிம்மதி இல்லை. தொழிலாளர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை, குழந்தைகள் முதல் முதியவர் வரை யாருக்கும் நிம்மதியில்லை. எந்தத் தொகுதியிலும் புதிய திட்டங்கள் இல்லை. எதுவுமே நடக்கவே இல்லை.

கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் மக்களை அரசு முழுதாக கைவிட்டு விட்டது. மக்களுக்குத் தேவைப்படும்போது கொடுக்காமல் தனக்கு தேவைப்படும்போது தேர்தல் வருவதை வைத்து மக்களுக்கு நிதி கொடுக்கிறது அரசு. ஆனால் திமுக ஆட்சியில் இல்லாதபோதும் மக்களை கைவிடவில்லை. அதற்கு எடுத்துக் காட்டுதான் ஒன்றிணைவோம் வா.

அதையடுத்து ஸ்டாலினின் குரல், மக்கள் கிராம சபை ஆகிய பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். சுமார் ஒன்றே கால் கோடி மக்கள் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அடுத்த கட்டமாக மு.க.ஸ்டாலின் ஆகிய நான் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதே என் பணி என்ற வகையில் அடுத்த கட்ட பயணத்தைத் தொடங்குகிறேன். நாட்டு மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான மக்களை நோக்கிய எனது பயணத்தை 29 ஆம் தேதி தொடங்குகிறேன். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்பதுதான் இதன் பெயர். திருவண்ணாமலையில் தொடங்க இருக்கிறேன். நான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் அந்த தொகுதி மக்கள் என்னிடம் தங்களது தனிப்பட்ட குறைகளை மனுக்களாகத் தரலாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பதிவெண் கொண்ட ஃபார்ம் கொடுக்கப் போகிறோம்.

திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டு அவைத் தீர்த்து வைக்கப்படும். சொன்னதைச் செய்வார்...செய்வதைச் சொல்வார் கலைஞர். அதனால்தான் அவரது இல்லத்தில் இருந்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். இந்த புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கென்றே என் தலைமையில் தனித் துறை உருவாக்கப்படும்” என்று கூறினார் ஸ்டாலின்

கடந்த ஜனவரி 21 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதுபற்றி மாசெக்களிடம் தெரிவித்தார் ஸ்டாலின். மின்னம்பலம் ஊடகத்தில் மட்டுமே அது குறித்து முதல்வராகி 100 நாட்கள்: அறிவாலயத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதையே இப்போது ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் அறிவித்திருக்கிறார்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 25 ஜன 2021