மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

எகிறிய கூட்டம் எடப்பாடி உற்சாகம்!

எகிறிய கூட்டம் எடப்பாடி உற்சாகம்!

கோவையில் முதல்வர் பழனிசாமியின் முதல் நாள் பரப்புரையிலேயே கோடிகள் தெருக்கோடியில் தண்ணீராய் வழிந்தோடுவதைப் பார்க்க முடிந்தது. இரண்டாம் நாள் பயணத்தில் அந்த ‘கிராப்’ இன்னும் எகிறியடித்தது. அதிகம் செலவழித்தது யார், அதிக கூட்டம் கூடியது எங்கே என்று அதிமுகவினரிடத்தில் அலைபேசி பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.

முதல் நாளில் கோனியம்மன் கோயிலில் தனது பரப்புரையைத் துவங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலையில் கோவை புலியகுளத்திலுள்ள ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கற்சிலையை வணங்கி, தனது இரண்டாம் நாள் பரப்புரையைத் துவக்கினார் முதல்வர். சாமியைக் கும்பிட்டு விட்டு அவர் வேனில் ஏறி பேச்சை ஆரம்பித்ததும், சூரியனின் கதிர்கள் அவருடைய கண்களைக் கூச வைத்தன. அதனால் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, வண்டியை நகர்த்தச் சொன்னார். வண்டி கிளம்பியதற்கான காரணம் புரியாமல் எல்லோரும் ஒரு நிமிடம் திகைத்தபோது, சில மீட்டர்கள் தள்ளி வண்டியை நிறுத்தச் சொல்லி அங்கே பேச்சைத் துவக்கினார். எடப்பாடியை அவர் இருந்த இடத்திலிருந்து சூரியன் நகர்த்திவிட்டதே என்று நிருபர்கள் சிலர் கமென்ட் அடித்து சிரித்துக்கொண்டனர்.

‘வெற்றிநடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில், தேர்தல் பரப்புரையைத் துவங்கிய நாளிலிருந்து, ஸ்டாலின், கமல், காங்கிரஸ் என்று பல கட்சிகளையும், தலைவர்களையும் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி, கோவையில் முதல் நாள் பரப்புரையில் ஸ்டாலினை மட்டுமே குறிவைத்துத் தாக்கிப் பேசினார். இரண்டாம் நாள் பரப்புரையிலும் அது தொடர்ந்தது. இதற்கேற்ப நேற்று காலையில், ஸ்டாலின் வேலுடன் நிற்கும் புகைப்படம், சமூக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியிருந்தது.

தன் பேச்சின் துவக்கத்திலேயே அதைக் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘ஸ்டாலின் தேர்தலுக்காக பக்தி வேஷம் போடுகிறார். பொட்டை அழித்தவர், திருநீறை கீழே போட்டவர், இப்போது நாடகமாடுகிறார். பக்தி என்பது இயற்கையாக வர வேண்டும். இது நாடகம் என்பது இறைவனுக்கும் தெரியும். அதற்கு அவர் தக்க தீர்ப்பு வழங்குவார். முருகனின் அருள் அதிமுகவுக்குதான். கடவுள் எங்களுக்குதான் வெற்றியைக் கொடுப்பார்’ என்று அதிரவிட்டார்.

தைப்பூசத்தை விடுமுறையாக அறிவித்ததையும் கூறி, தாங்கள்தான் உண்மையான ஆன்மிகவாதிகள் என்பதை மக்களிடம் அழுத்தமாகச் சொல்ல முயற்சி செய்தார். இதைச் சொல்லும்போது சப்தத்தை இன்னும் அதிகப்படுத்தி, கேள்விகளையும் மக்களிடம் கேட்க, அவர்களிடமிருந்து ‘ஹஸ்கி வாய்ஸ்’ பதில்தான் வந்தது. அந்த ஏரியா கிறிஸ்துவர்களும் அதிகம் வாழும் பகுதி என்பதை யாரும் சொன்னார்களோ என்னவோ, உடனே ‘‘எங்களுக்கு எல்லா மதமும் சமம்தான். அவரவருடைய கடவுள் அவரவருக்கு புனிதமானது. சிறுபான்மை மக்களின் நலனில் எங்களுடைய அரசு எப்போதுமே உறுதியாக இருக்கும்’’ என்றும் பேசிவைத்தார்.

அடுத்து சிங்காநல்லுார், பீளமேடு ஆகிய பகுதிகளில் பேசியபோதும் இதே பேச்சைத்தான் ‘ரிபீட்’ செய்தார். அங்கிருந்து சத்தியமங்கலம் சாலை வழியாக அன்னூருக்குப் பறந்தது கான்வாய். கரியாம்பாளையம் என்ற ஊரிலுள்ள பட்டத்தரசியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். அந்த ஊரிலுள்ள ஆதி திராவிடர் காலனிக்கு அவருடைய கார் திடீரென நுழைந்தது. அங்கே அருந்ததியர் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் சென்ற அவர், அங்கே குடியிருக்கும் மலரவன் என்ற அதிமுக தொண்டரின் வீட்டுக்குச் சென்றார். அவருடன் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் சென்றார்கள். அங்கே வீட்டிற்குள் உட்கார்ந்து அவர்கள் கொடுத்த தேநீரை அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்.

அதன்பின்பு அன்னூருக்குச் சென்று அங்கு பிரச்சாரம் செய்தார். ஏற்கெனவே பல இடங்களில் பேசிய விஷயங்களைப் பேசிய முதல்வர், ‘வீடில்லாத மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டத்தில், தமிழகத்தில்தான் அதிகமான வீடுகள் கட்டப்படுகின்றன என்பதால் எதிர்காலத்தில் ஏழை என்பவரே இங்கிருக்க மாட்டார்கள்’ என்று பேசி கைதட்டல் வாங்கினார். முதல் நாளில் சுந்தராபுரம் பகுதியில் அவர் பேசும்போது, அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு கூறினார். அதேபோல அங்கும் ஒரு ஆம்புலன்ஸ் வர, அதற்கும் வழி விடுமாறு அவர் கூற, தொண்டர்கள் வழிவிட்டனர்; ஆம்புலன்ஸ் சென்றது.

கடந்த மாதத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற சுற்றுப்பயண நிகழ்ச்சிக்காக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வந்திருந்தபோது பாப்பநாயக்கன்புதூர் என்ற பகுதியில், அவர் பேசிக்கொண்டிருந்தபோது அதே சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அவர் வழிவிடக்கூறியும் தொண்டர்கள் நகர மறுத்ததால், எதிரேயுள்ள ஒரு வழிச்சாலையில் ஆம்புலன்ஸ் திருப்பிவிடப்பட்டது. அது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் எதிரெதிர் விவாதங்களைக் கிளப்பியிருந்தது. அதை நினைவூட்டும் விதமாகவே இரண்டு நாட்களிலும் ஆம்புலன்ஸுக்கு முதல்வர் வழிவிடச்சொன்ன சம்பவங்கள் நிகழ்ந்தன

மேட்டுப்பாளையத்தில் பேசியபோது, ‘வாழை நாரிலிருந்து துணி, பிஸ்கட், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை 400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கவிருப்பதால் வாழை விவசாயிகள் பயன் பெறுவர்’ என்றார். மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதி மக்களையும், விவசாயிகளையும் கடுமையாக பாதித்து வரும் யானை – மனித மோதல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றி முதல்வரின் பேச்சில் எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படாதது மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அதேபோல, ஊட்டிக்குச் செல்வோர், மேட்டுப்பாளையத்தைக் கடந்துதான் செல்ல வேண்டுமென்பதால் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு தேர்தலிலும் மேட்டுப்பாளையத்துக்கு புறவழிச் சாலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி தரப்படும். அது நிறைவேற்றப்படாது. இத்தனைக்கும் இந்தத் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து அதிமுக தான் வென்றுள்ளது. அந்த மூன்று முறையும் ஓ.கே.சின்ராஜ் என்பவர்தான் எம்.எல்.ஏ.வாகியுள்ளார். இப்போது அதைப் பற்றி பேசினாலும் மக்கள் ஏற்பார்களா என்ற குழப்பத்திலேயே அதைப்பற்றி எந்தத் தெளிவான உறுதியும் முதல்வர் தரவில்லை.

பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சாய்பாபா கோயில் எனப் பல இடங்களிலும், திரும்பத் திரும்ப ஒரே பேச்சைத்தான் அவர் மாறிமாறிப் பேசிக்கொண்டிருந்ததால், அவருக்கே ஒரு கட்டத்தில் அதைப் பேசுவதில் ஏற்பட்ட அலுப்பும் சலிப்பும் வார்த்தைகளில் வெளிப்பட்டது. அத்துடன் பேசிப்பேசி தொண்டையும் கட்டி விட்டதால் சப்தம் அதிகமாக வரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு பேச வேண்டியதாயிற்று. அதனால் மாலையில் சற்று சோர்வோடு காணப்பட்ட அவர், சுரத்தின்றிப் பேசியதையும் உணர முடிந்தது.

ஆனால் வடவள்ளியில் மிகப் பிரமாண்டமான கூட்டம் கூட்டப்பட்டிருந்ததைப் பார்த்ததும் மீண்டும் உற்சாகமான முதல்வர் பழனிசாமி, மீண்டும் ஸ்டாலினைப் பிடித்து வாங்க ஆரம்பித்து விட்டார். நீ, போ, வா, சொல்லு என்று பேசிக்கொண்டிருந்தவர், ஒரு லெவலுக்கு மேல் அவன் இவன் என்று மதிப்புக் கூடுதல் வார்த்தைகளைப் பிரயோகிக்கத் துவங்கினார்.

இறுதியாக வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் நகரத்தில் அவருடைய பிரச்சாரத்தை முடித்தார். அங்கே செல்லும்போதே லேசாக இருட்டத் துவங்கிவிட்டது. முதல்நாளை விட அங்கே கூடுதல் கூட்டத்தைத் திரட்டுவதற்கு எஸ்.பி.வேலுமணி டீம் என்ற பெயரில் ஏராளமான தொண்டர்கள் களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் வடவள்ளியில் கூடிய அளவுக்கு அங்கு கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை. அங்கும் அமர்க்களமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் வேலுமணி.

அங்கே பேசும்போது, முதல்வருக்கு நன்றாகவே தொண்டை கமறத் துவங்கிவிட்டது. ரொம்பவே கஷ்டப்பட்டு பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் வேலுமணியைப் புகழ்வதிலும், ஸ்டாலினை வசை பாடுவதிலும் அவர் குறை வைக்கவே இல்லை. வேறெங்குமே பேசாத ஒரு விஷயத்தை அங்கே அவர் பேசினார்.

‘‘அம்மாவின் (ஜெயலலிதா) மரணத்தைப் பற்றி விசாரிப்போம் என்று ஸ்டாலின் புதிதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அம்மாவின் மரணத்துக்கு கருணாநிதியும் ஸ்டாலினும் தவறான வழக்குகள் போட்டதுதான் காரணம். அவர் விடுதலையான பின்னும் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள்தான் முறையிட்டார்கள். அம்மாவை சிறைக்கு அனுப்பியதால் அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டுதான் அவர் மரணமடைந்தார். அதனால் அம்மாவின் மரணத்துக்கு கருணாநிதியும் ஸ்டாலினும்தான் காரணம்!’’ என்று பேசி தொண்டர்களை ‘மெர்சல்’ ஆகவிட்டார்.

இந்தப் பேச்சுக்கு தொண்டர்களிடமும் மக்களிடமும் எந்த ரியாக்சனும் தெரியாததால் அவரிடம் ஒரு ஏமாற்றம் ஏற்பட்டதையும் பார்க்க முடிந்தது. ஜெயலலிதா மரணத்துக்கு மட்டுமின்றி, கருணாநிதி பேசாமல் போனதற்கும் ஸ்டாலின்தான் காரணமென்றும் ஒரு குண்டைப் போட்டார் முதல்வர் பழனிசாமி. ‘‘இரண்டு ஆண்டுகளாக என் அப்பாவைப் பார்க்க முடியவில்லை என்று அழகிரி இப்போது சொல்கிறார். அப்படிப் பார்க்க விடாமல் தடுத்தது ஸ்டாலின்தான். கருணாநிதியை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை கொடுத்திருந்தால் அவர் பேசியிருப்பார். ஆனால் அவர் பேசியிருந்தால் ஸ்டாலினுக்குத் தலைவர் பதவியைத் தந்திருக்க மாட்டார். அதனால்தான் ஸ்டாலின் அதைச் செய்யவில்லை. தந்தையே தலைவராக அங்கீகரிக்காத மகனை எப்படி மக்கள் முதல்வராக ஏற்றுக்கொள்வார்கள்?’’ என்று காட்டமாகக் கேட்டார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுகவுக்கு ஏற்பட்ட அவப்பெயருக்குப் பதிலடி தர வேண்டும் என்பதற்காகவோ என்னவோ, ‘தொண்டாமுத்தூரில் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்ணை அவருடைய கட்சியினர் கடுமையாகத் தாக்கினர். அதை அவர் தடுக்கவில்லை’ என்றும், ‘கோவையிலிருந்து சென்னைக்குப் போன கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறாக நடக்கமுயன்ற திமுக ஒன்றியச் செயலாளர் ஜெயிலுக்குப் போய் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்’ என்றும் பல இடங்களில் பேசினார் முதல்வர் பழனிசாமி. பெரம்பலூர் முன்னாள் திமுக கவுன்சிலர், அழகு நிலையப் பெண்ணைத் தாக்கியது, 1989இல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவை சட்டசபையில் தாக்கியது போன்றவற்றையும் தொகுத்துச் சொல்லி, ‘திமுகவினரால்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்றும் குற்றம்சாட்டினார்.

கோவையில் இரண்டு நாள் பரப்புரையிலும் கூடிய கூட்டத்தையும், கிடைத்த வரவேற்பையும் பார்த்துவிட்டு படு உற்சாகமாக இருந்தார் முதல்வர் பழனிசாமி. அது அவருடைய முகத்திலேயே புன்னகையாகவும் பூரிப்பாகவும் வெளிப்பட்டது. வேறு எங்கு ஜெயிக்காவிட்டாலும் கோவை மாவட்டத்தில் பல தொகுதிகளை ஜெயிப்போம் என்ற நம்பிக்கை அவருக்குள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. தேர்தல் அறிவிப்புக்குப் பின் அவர் இங்கே வரும்போது இந்தச் சூழ்நிலை எப்படியிருக்குமென்பதை யூகிக்க முடியவில்லை. கோவையில் இவ்வளவு கூட்டம் குவிவதற்குக் காரணமென்ன என்பதும் அவர் அறியாத விஷயமில்லை. இதே கூட்டத்தையும் வரவேற்பையும் வேறு மாவட்டங்களில் அவர் எதிர்பார்த்தால் ஏமாற்றமே கிடைக்கும்.

கோவை அதிமுகவின் கோட்டைதான்... கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதில்தானே விழுந்தது ஓட்டை!

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 25 ஜன 2021