�சிறப்புக் கட்டுரை: முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் வரலாற்று நாயகர்கள்!

politics

ராஜன் குறை

மக்களாட்சி முறையில் முதலமைச்சராகப் பதவியேற்க ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்: 1) அவர் இந்திய குடிநபராக இருக்க வேண்டும்; 2) அவருக்கு 25 வயதாகி இருக்க வேண்டும்; 3) அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் உறுப்பினராகி விடவேண்டும். இந்த தகுதிகள் உள்ள யாரும் பெரும்பான்மை சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் முதல்வராகிவிடலாம். அவர் மக்கள் பணி, கட்சிப்பணி ஆற்றியிருக்க வேண்டும் என்றோ, தலைவராக மக்களால் அங்கீகரிப்பட்டிருக்க வேண்டும் என்றோ அவசியம் எதுவும் கிடையாது.

உதாரணமாக l997ஆம் ஆண்டு பிகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டபோது, அவர் யாரும் எதிர்பாராதபடி அதுவரை அரசியல் பக்கமே வராத குடும்பத் தலைவியான தன் மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதை ஆதரித்ததால் ராப்ரி தேவி முதல்வராகப் பணிபுரியத் தொடங்கினார். அதன் பிறகு நடந்த 2000ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அவர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியதால் மேலும் ஐந்து ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அடுப்படியிலிருந்த பெண் ஆட்சி செய்ய முடியுமா என முதலில் அனைவரும் கேட்டார்கள். ஆனால் பிரச்சினை எதுவும் எழவில்லை. ஆலோசனை கூற சகோதரர்கள்; ஆட்சி செய்ய அமைச்சர் குழு; நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ள அதிகாரிகள்; அரசியலை வழிநடத்த கணவர் லாலு பிரசாத் யாதவ் என அவர் முதல்வர் பதவியை அலங்கரித்தார். வீட்டை நிர்வாகம் செய்பவரால், நாட்டை நிர்வாகம் செய்ய முடியாதா என்று கேட்டார்.

ராப்ரி தேவி முதலமைச்சர் ஆனாரே தவிர, அவரை ஓர் அரசியல் தலைவர் என்று கூற முடியாது. அவரது கணவர் லாலு பிரசாத் யாதவ், ஜெயபிரகாஷ் நாராயணனுடைய இயக்கத்தில் மாணவர் தலைவராக இணைந்தவர். நெருக்கடி நிலைக்குப் பிறகு 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக 29 வயதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஜனதா கட்சி பிளவுண்டபோது ஜனதா தளம் என்ற கட்சியின் தலைவரானவர். அந்தக் கட்சி ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம் என்று பிளவுபட்டபோது ராஷ்டிரீய ஜனதா தளத்தின் தலைவராகி அந்தக் கட்சியை பிகார் மாநிலத்தின் முக்கிய கட்சியாக வேர் மட்டத்தில் நிறுவியவர். இன்றும் அவர் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இயங்கும் அந்தக் கட்சியே அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கிறது. அதற்கு எதிராக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாரதீய ஜனதா கட்சியும் இணைந்துதான் கூட்டணி அரசு கண்டுள்ளன. நிச்சயம் லாலு பிரசாத் யாதவ் அரசியல் தலைவர் என்ற ஆகிருதி கொண்டவர் என்பதை அவர் பிகார் அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியதிலிருந்து கூற முடியும்.

லாலு பிரசாத் யாதவ் பிகார் அரசியலில், சமூகத்தில் மேலோங்கியிருந்த ஆதிக்க சாதியினரின் செல்வாக்கைப் பெருமளவு தகர்த்து, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நலனை, அவர்களது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தியவர். 1990ஆம் ஆண்டு அயோத்திக்கு ரத யாத்திரை சென்ற அத்வானியை கைது செய்து தன் அரசியல் ஆளுமையை நிறுவியவர். அதிலிருந்து சிறுபான்மையினர் நலனை பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றியவர். மத்திய அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது நட்டத்தில் இருந்த இந்திய ரயில் துறையை, லாபம் ஈட்டும் துறையாக மாற்றிக் காட்டியதில் உலக அளவில் வர்த்தக நிர்வாகக் கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்தவர். அவருக்கு எதிரான பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு அவர் சிறையில் இருந்தாலும், எதிர்காலத்தில் பிகார் மாநிலம் அவரை வரலாற்று நாயகர் என்று கூறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது; இப்போதே பலர் கூறத்தான் செய்கிறார்கள். ஏனெனில் சமூகத்திலிருந்த ஏற்றத்தாழ்வை, அதிகாரக் கட்டமைப்பை சமூக நீதி அரசியலால் மாற்றியமைத்தார் என்பது அவரது புகழுக்குக் காரணம். எழுபத்திரண்டு வயதாகும் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை தற்போது சீர்கெட்டுள்ளது. இன்றைய தினம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிகார் உதாரணத்திலிருந்து நாம் என்ன கூற முடியும் என்றால் ராப்ரி தேவி எட்டாண்டுகள் பிகார் முதல்வராக இருந்தாலும் அவர் கட்சி அமைப்பைக் கட்டி எழுப்பியவர் என்றோ, கட்சியை வழிநடத்தியவர் என்றோ, அரசியலைத் தீர்மானித்தவர் என்றோ கூற முடியாது. அதனால் அவரை ஓர் அரசியல் தலைவராகவும் கருத முடியாது. லாலு யாதவுக்குப் பிறகு ராஷ்டிரீய ஜனதா தளத்தின் அரசியல் தலைவராகப் பொறுப்பேற்று இருப்பவர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் என்பதை கடந்த தேர்தல் நிரூபித்துள்ளது. அறுபத்தைந்து வயதான ராப்ரி தேவி தன் மகனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை நியமித்த பல தலையாட்டி பொம்மைகள் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள் (பொம்மை என்ற பெயரிலேயே ஒரு முதல்வர் கர்நாடக மாநிலத்தில் இருந்தார்; ஆனால் அவர் மத்திய அரசின் அதிகாரத்தை கேள்வி கேட்டவர்). முதல்வர் பதவியை வகித்ததைத் தவிர பலருக்கு அரசியல் வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் இருந்ததில்லை. மாநில அரசின் நிர்வாக இயந்திரத்தை தலைமைச் செயலர் வழிநடத்துவது போல, அரசியல் மேற்பார்வையாளர்களாக காங்கிரஸ் மேலிடத்தின் பிரதிநிதிகளாக பலர் ஆட்சி செய்தார்கள். எனவே முதலமைச்சர் பதவி என்பதே யார் ஒருவருக்கும் அரசியல் தலைவர் என்ற அங்கீகாரத்தையோ, வரலாற்று முக்கியத்துவத்தையோ வழங்கி விடாது. தாடிகளெல்லாம் தாகூரா என்ற பாடலைப்போல முதல்வர்கள் எல்லாம் தலைவர்களா என்றும் கேட்கலாம்.

**தமிழகத்தின் அரசியல் வரலாறு: நிஜங்களும், நிழல்களும்**

தமிழக வரலாற்றில் காற்றில் பறந்த சருகு கோபுரத்தின் மேல் ஒட்டிக்கொண்டதைப் போல முதலமைச்சர் பதவிக்கு வந்தவர் தற்போதைய முதல்வர் பழனிசாமி. கூவாத்தூர் என்ற இடத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இவர் பெயர் முதல்வராக அறிவிக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்ட மனிதர் தவழ்ந்தே சென்று சசிகலா தாள் பணிந்து ஏற்றுக்கொண்டது காணொலியாகப் பதிவாகி சமூக ஊடகங்களில் பரவிவிட்டது. பின்னர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இவருக்கு வாக்களித்தார்கள் என்றாலும், அந்த நம்பிக்கை இவராக ஈட்டியது அல்ல. இவர் தாள் பணிந்த அன்றைய கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அம்மையார் ‘வாங்கி’ தந்த நம்பிக்கை என்பது நாடே அறிந்தது. சசிகலாவின் பினாமியாகப் பதவியேற்றவர், அவருக்குத் துரோகமிழைத்து, மத்திய பாஜக அரசின் பினாமியாக நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்துவிட்டார்.

பழனிசாமிக்கு இந்தப் பதவியை வழங்கிய சசிகலாவும் ஓர் அரசியல் தலைவர் அல்லர். அவர் செல்வி ஜெயலலிதாவின் நிழல் போல அவருடன் வாழ்ந்தவர்; உடன்பிறவா சகோதரி என்று ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவர். இருவரும் சேர்ந்து முறையற்று ஊழல் சொத்துகளை குவித்த வழக்கில்கூட ஜெயலலிதாதான் முதல் குற்றவாளி; சசிகலா இரண்டாம் குற்றவாளி. முதல் குற்றவாளி இறந்துவிட்டதால் தண்டனையிலிருந்து தப்பிவிட, இரண்டாம் குற்றவாளி சிறை சென்றார். அப்போதுதான் பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சென்றார். அதாவது பழனிசாமி தன் பதவியை தாள் பணிந்து பெற்றதே ஓர் அரசியல் தலைவரிடமிருந்து கிடையாது. அவருடைய நிழலிடமிருந்து; பின்கட்டு அரசியல் (Backroom Politics) செய்த ஒட்டுண்ணியிடமிருந்து. அடுத்த வாரம் சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவை அரசியலில் எதிர்த்து நிற்கும் வலிமை எடப்பாடிக்கு உண்டா என்பதே இனிமேல்தான் தெளிவாகும். ஏனெனில் இருவருமே அரசியல் தலைவர்களாக மக்களால் ஏற்கப்பட்டவர்கள் கிடையாது. ஒருவர் நிழல் அரசியல் செய்தவர்; இன்னொருவர் அந்த நிழலின் பாதை மாறிய பினாமி.

சசிகலாவுக்கு இந்தச் செல்வாக்கை ஏற்படுத்திய செல்வி ஜெயலலிதாவும் கட்சிப் பணியோ, மக்கள் பணியோ செய்து உருவானவர் கிடையாது. அவரும் ஒரு நிழல்தான். திரையில் தோன்றிய நிழல். நிழல் நிஜமாகிறது என்ற பட தலைப்புக்கேற்ப நிஜமாக மாறிய நிழல். எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற நடிகருடன் கதாநாயகியாக நடித்தவர்; அவரால் கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டவர். அவரை புரட்சி தலைவி என்று அழைப்பார்கள். அவர் எந்த கொள்கையைப் பரப்பினார், என்ன புரட்சி செய்தார் என்பதை கூறுவது கடினம். ஆனால் எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே இருந்த செல்வாக்குக்கு அவரால் வாரிசாக முடிந்தது. காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியின் ஆதரவு உதவியது என்றால், தேர்தல் களத்தில் ராஜீவின் அகால மரணம் ஆட்சி அதிகாரத்தை பெற்றுத் தந்தது. அவரும் தி.மு.க எதிர்ப்பு என்ற எதிர்ப்புரட்சி அரசியலுக்கு வடிவம் கொடுத்து மேலும் மூன்று முறை தேர்தல்களில் வென்றார். ஆனால் தன்னுடைய கட்சியை சசிகலா துணையுடன் சர்வாதிகாரியாக இருந்து நடத்தியதிலும், அகில இந்திய அரசியலிலும் பேரங்களை நிகழ்த்தியதிலும் ஒரு கட்சித் தலைவராக தன்னை நிறுவிக்கொண்டார். ஆனால் அடிப்படையில் அவர் கட்டிய வீட்டில் குடியேறியவர்தான். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் என்பதே அவர் அரசியல் வாழ்வின் நிழல் மூலாதாரம்.

அப்படி செல்வி ஜெயலலிதாவுக்கு அரசியலில் இடம் பெற்றுத் தந்த எம்.ஜி.ராமச்சந்திரனும் திரையில் தோன்றிய நிழல்தான். அரசியலில் நிழல் நிஜமான கதைதான். தமிழக வரலாற்றை நிர்ணயித்த மாமனிதர் பெரியாரிடமிருந்து பிரிந்து 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றத்தைக் கழகத்தைக் தொடங்கினார் மற்றொரு வரலாற்று நாயகரான அறிஞர் அண்ணா. அந்தக் கட்சியில் சில ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை இணைத்துக்கொண்ட எம்.ஜி.ஆர், கட்சியின் வளர்ச்சியை தன்னுடைய திரையுலக வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகம் எங்கும் கிளைகளை அமைத்து, படிப்பகங்களை உருவாக்கி, பார்ப்பனரல்லாதோரான சாமானியர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழர்களின் உரிமைகளுக்காக, இந்தி ஆதிக்கத்துக்கு, வடவர் ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் புரிதலை வளர்த்தெடுத்து, பல போராட்டக் களங்கள் கண்டு, தொண்டர்கள் அளப்பரிய தியாகங்கள் செய்து, தன்னை பெரும் வரலாற்று சக்தியாக மாற்றிக்கொண்டது. அந்த இயக்கத்தின் மக்களாட்சி விழுமியங்களை, சமத்துவ சிந்தனைகளை தன் திரைப்படக் கதைகளில் வசனங்களாகவும், பாடல்களாகவும் மாற்றிக்கொண்டு கட்சி வளர்ந்தபோது தானும் வளர்ந்தார் எம்.ஜி.ஆர். அதன் காரணமாக புரட்சி நடிகர் என்று அழைக்கப்பட்ட அவர் பின்னாளில் தி.மு.கவைப் பிளந்து அதன் வெகுஜன ஆதரவு தளத்தில் பாதியை தன் வசமாக்கிக் கொண்டபோது புரட்சி தலைவர் என்று அழைக்கப்பட்டார். அவர் நிஜத்தில் செய்தது மாநில சுயாட்சி கோரிக்கையை மழுங்கடித்த எதிர்ப்புரட்சிதான். கட்சியின் பெயரிலேயே திராவிடத்தை, அகில இந்தியத்திடம் அடகு வைத்தார்.

அப்படிப்பட்ட எம். ஜி. ராமச்சந்திரன் என்ற நிழலுக்கு வரலாற்று தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது திராவிட இயக்கத்தின் மூன்றாவது வரலாற்று நாயகரான கலைஞர் கருணாநிதி. பெரியாரும் அண்ணாவும் உருவாக்கிய திராவிட கருத்தியலை பள்ளி வயதிலிருந்தே தன் கடும் உழைப்பாலும், அரசியல் ஆற்றலாலும் வளர்த்தெடுத்து சுதந்திர இந்திய வரலாற்றில் மாநில சுயாட்சிக் குரலை அழுத்தமாகப் பதிவு செய்த அந்த வரலாற்று நாயகரின் வசனங்களைப் பேசித்தான் கதாநாயக நடிகராக வெற்றி கண்டார் எம்.ஜி.ஆர். உதாரணமாக 1950ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த மந்திரி குமாரி திரைப்படம் வெற்றியடைய காரணம் கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனம். அந்தத் திரைப்படத்தை நீங்கள் யூடியூபில் பார்த்தால் ஒன்றைக் கவனிக்கலாம். படத்தின் தொடக்கத்தில் டைட்டில் கார்டுகளை போடும்போது நடிகர்கள் என்ற தலைப்பில் எட்டு பேர்களில் ஒன்றாக எம்.ஜி.ராமசந்தர் என்ற பெயரும் இருக்கும். ஆனால் இறுதியாக கதை,வசனம் என்ற தலைப்பில் பெரிய எழுத்துகளில் மு.கருணாநிதி என்ற பெயர் இருக்கும். அந்தப் படத்தின் கதையை மட்டுமல்ல; தமிழக வரலாறு என்ற கதையை எழுதியவரும் கலைஞர் கருணாநிதி என்பதை தி.மு.க என்ற கட்சியின் எழுபத்திரண்டு ஆண்டுக்கால வரலாற்றை ஆழமாகப் படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். கட்சி பிறந்ததிலிருந்து அதன் வளர்ச்சியின் அனைத்து கூறுகளிலும் கலைஞரின் முதன்மை பங்களிப்பு நீக்கமற நிறைந்திருப்பதைக் காண்பார்கள். எம்.ஜி.ஆர் கதாநாயக நடிகர்தான்; கலைஞர் அவரை உருவாக்கிய வரலாற்று நாயகர்.

இன்றைய தமிழக தேர்தல் களத்தை வரலாற்று நிஜங்களும், அதன் நிழல்கள் உருவாக்கிய நிழல்களும் மோதும் களம் என கூறினால் மிகையாகாது

**கட்டுரையாளர் குறிப்பு:**

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *