மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

விடுதலைக்குப் பின் சசிகலா அரசியலுக்கு வருவாரா?

விடுதலைக்குப் பின் சசிகலா அரசியலுக்கு வருவாரா?

பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் அதிமுகவின் முன்னாள் இடைக்காலப் பொதுச் செயலாளர் சசிகலா, தற்போது மெல்ல மெல்ல உடல் நலம் தேறி வருகிறார் என்று மருத்துவமனை செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி அவர் திட்டமிட்டபடி விடுதலை ஆவாரா அல்லது மருத்துவமனயில் தொடர்ந்து இருக்க அறிவுறுத்தப்படுவாரா என்றும் கேள்விகள் எழுந்து நிற்கின்றன.

இதையும் தாண்டி சசிகலா சிறையில் இருந்தும் கொரோனாவில் இருந்தும் முழுதாய் விடுதலையாகி வெளியே வந்ததும் அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும் ஈடுபட வேண்டும் என்றும் இருவேறு முயற்சிகள் இன்னும் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.

“அதிமுகவையும், அமமுகவையும் இணைக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் சசிகலா விடுதலையின் மூலமாகவே அது சாத்தியப்படும் என்று கருதுகிறார்கள். சிறைக்கு செல்லும் முன் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓங்கியடித்து சசிகலா சபதம் செய்தாரே... அந்த சபதத்தை நிறைவேற்ற அவர் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டுமென்பதே அவர்களின் விருப்பம். அமமுக பொதுச் செயலாளர் தினகரனும், விடுதலைக்குப் பிறகு சசிகலாவை ராஜமாதாவாக முன்னிறுத்தி அரசியல் செய்வதைதான் தன் வருங்கால ஒரு திட்டமாக வைத்திருக்கிறார்.

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலோ விடுதலை பெற்று வெளியே வந்த பிறகு சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடக் கூடாது என்று முன்கூட்டியே ஒரு திட்டத்தோடு சில காய்களை நகர்த்திவருகிறார். சசிகலாவின் சகோதரர் திவாகரனுடன் சமீபகாலமாகவே மென்மைப் போக்கைக் கடைபிடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அண்மையில் முதல்வரின் தாயார் மறைந்தபோது திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் முதல்வரின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போதே அதிமுகவில் இதுகுறித்த விவாதங்கள் எழுந்தன. ’சசிகலா குடும்பத்தினருடன் தொடர்பே இல்லையென்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு இன்னொருபுறம் திவாகரன் மகன் ஜெய் ஆனந்தை எடப்பாடி பழனிசாமி உட்கார வைத்து பேசிக் கொண்டிருப்பது சரியா? அப்படியென்றால் தினகரன் வீட்டு நல்லது கெட்டதுகளில் நாமும் கலந்துகொள்ளலாமா?’ என்றெல்லாம் அதிமுகவினர் பேசிக்கொண்டனர்.

ஆனால் திவாகரன் குடும்பத்தினருடன் எடப்பாடி காட்டிய தனிப்பட்ட இந்த புரிந்துணர்வின் நோக்கமே வேறு... ‘சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அரசியலில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’என்பதுதான் திவாகரனுக்கு எடப்பாடி விதித்த நிபந்தனை. தேசபந்து என்பவர் மூலம் பரஸ்பரம் திவாகரனும், எடப்பாடியும் தகவல் பரிமாற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதன்படி, ‘சசிகலா விடுதலைக்குப் பிறகு அரசியலுக்கு வரமாட்டார். அவர் ஏற்கனவே வாழ்க்கையில் நிம்மதியை எல்லாம் இழந்துவிட்டார். இனியாவது அவர் குடும்பத்தினரோடு சின்ன சின்ன சந்தோஷங்களை நிம்மதியாக அனுபவிக்க வேண்டும். எனவே அவர் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டார்’ என்று எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள் திவாகரன் தரப்பினர். மேலும் சசிகலா அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டால் தினகரனுக்குதான் அது லாபமாகும் என்பதால்தான் எடப்பாடி இந்த திசையில் காய் நகர்த்துகிறார்” என்கிறார்கள் அதிமுக-அமமுக வட்டாரத்தில்.

ஆனால் இந்த எதிர்பார்ப்பை எல்லாம் சில மாதங்கள் முன்பே உடைத்துவிட்டார் சசிகலா. தனது உடல் நிலை பற்றிய செய்திக்கு விளக்கம் அளித்து அவர் தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மூலம் அக்டோபர் 19ஆம் தேதி மின்னம்பலத்துக்கு எழுதிய கடிதத்தில், “நான் வணங்கும் இறைவன் ஆசியோடும்.என் உடன் பிறவா அக்காவின் ஆசியோடும் அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன்” என்று குறிப்பிட்டிருந்தார் சசிகலா. அதாவது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளோடு நலமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டதே மீண்டும் தான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்பதை சூசகமாகக் குறிப்பிட்டுத்தான்.

இந்நிலையில் தினகரன் தரப்பினரும், “சசிகலா விடுதலையாகி வந்த பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள் நடக்கும் என்பதை அறிந்துதான் அவரை தீவிர அரசியலுக்கு வரவேண்டாம் என்று எடப்பாடி தரப்பில் காய் நகர்த்துகிறார்கள். ஆனால் சசிகலாவின் ஜாதகப்படி அவருக்கு நீண்ட ஆயுள் யோகம் இருக்கிறது. அவரது தனிப்பட்ட குணநலன்களை அறிந்தவர்களுக்கு அவர் இனி தீவிர அரசியலில் ஈடுபடுவது உறுதி என்பது நன்றாகவே தெரியும்” என்கிறார்கள்.

சசிகலா விடுதலையாகி வெளியே வந்ததும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... ஜனவரி 27ஆம் தேதியே ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைப்பது உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாகியிருக்கிறார்.

-வேந்தன்

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

ஞாயிறு 24 ஜன 2021