மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் அனுப்பிய ரகசிய கடிதம்! பாமகவில் யுத்தம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் அனுப்பிய ரகசிய கடிதம்! பாமகவில் யுத்தம்!

தேர்தல் நெருங்கும்போது, ஒவ்வொரு தலைவரின் பேச்சும், ஒவ்வொரு கட்சிக்குள் நடக்கும் நிகழ்வும் அரசியலில் பல அதிரடித் திருப்பங்களை ஏற்படுத்தும். தமிழக அரசியலில் மார்கழிப்பனி போல மூட்டம் போட்டிருந்த சில பல நகர்வுகள், தை பிறந்தவுடன் பனி விலகி வழிதெரிவதுபோல தெளிவாகத் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் வெயில் துவங்கிவிட்டால் அரசியலிலும் அனல் பறக்கத் துவங்கிவிடும். இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் புகை கிளம்பியிருக்கிறது. பற்ற வைக்கிறது பாமக.

பாமகவின் நிர்வாகக்குழுவின் அவசரக் கூட்டம், நாளை காலை 11 மணிக்கு இணைய வழியில் நடக்க உள்ளது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதித்து அரசியல் முடிவு எடுக்கப்படவுள்ளதாக நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு சென்றுள்ளது. ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி, வன்னியர் சங்கத்தலைவர் பு.தா.அருள்மொழி ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படியொரு அவசரக்கூட்டம் நடத்துவதற்கு என்ன காரணமென்று நாம் களமிறங்கி விசாரித்தபோது, ராமதாஸ் சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட ரகசிய கடிதம்தான் பின்னணி என்று தெரியவந்தது. ராமதாஸ் எழுதிய அந்தக் கடிதம், சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரும், ராமதாஸ்க்கு மிகவும் நம்பிக்கைக்குரியவருமான ஜெயராமன் மூலமாக முதல்வருக்கு நேரில் தரப்பட்டிருக்கிறது. முதல்வருக்கென்று சில பாதுகாப்பு நடைமுறைகள், புரொட்டோகால் இருப்பது தெரிந்தும், இந்தக் கடிதத்தை முதல்வரில் வீட்டில் தரமுடியாது என்றும், தலைமைச் செயலகத்தில் முதல்வரின் கையில் நேரடியாகத்தான் ஒப்படைக்கப்படும் என்றும் ராமதாஸ் தரப்பில் முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இடையில் பாதுகாப்பு என்ற பெயரில் எந்தக்கெடுபிடியும் அவருக்குத் தராமல் கடிதத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. எளிமைக்குப் பெயர்பெற்ற முதல்வர் பழனிசாமியும் அதை அந்த முறையிலேயே பெற்றுக்கொண்டிருக்கிறார்.

அந்த ரகசியக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது, அதைப் பார்த்துவிட்டு முதல்வரின் ரியாக்சன் என்ன என்பதெல்லாம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். ஆனால் நாளை நடக்கும் நிர்வாகக்குழு அவசரக்கூட்டத்தில் இந்த கட்டுச்சோற்றை அவிழ்த்துத்தான் ஆக வேண்டும். நாளைய நிர்வாகக்குழுவில் என்ன நடக்கும்...அவசரக்கூட்டம் நடத்தும் அளவிற்கு கட்சிக்கு உள்ளே என்னதான் நடக்கிறது... பாமகவின் மிக முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்...

‘‘அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது எங்களுக்கும் எதுவுமே தெரியாது. கடிதத்தைக் கொண்டு சென்ற ஜெயராமனுக்கும் கூட அது கண்டிப்பாகத் தெரிந்திருக்காது. ஒருவேளை அன்புமணிக்குத் தெரிந்திருக்கலாம். அவருக்கும் கூட தெரியாத சேதி அதில் இருந்திருக்கலாம். ஆனால் கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களை எங்களால் பகிர முடியும். கொரோனா காலத்தில், கட்சியின் நடவடிக்கைகள் பெரிதும் முடங்கி விட்டன. இதில்தான் ராமதாஸ் அய்யாவுக்கு பெரிய வருத்தம்...‘இந்த வயதிலும் ஸ்டாலின் எந்தவொரு அச்சமும் இன்றி மக்களிடம் சென்று பேசுகிறார்; களத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். முதல்வர் பழனிசாமியும் பம்பரமாகச் சுற்றுகிறார். எனக்குத்தான் வயதாகி விட்டது, ஆனால் மற்றவர்கள் என்ன களப்பணி செய்தீர்கள்’ என்று அவர் குமுறிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய வருத்தம், அவரின் மகன் மீதும்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், அன்புமணி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அதிமுகவுடன் சேர்ந்தால் நமக்கு தோல்விதான் கிடைக்கும்; திமுகவுடன் சேர்ந்தால்தான் சில எம்எல்ஏக்களைப் பெற முடியும். அப்போதுதான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று அவர் நினைக்கிறார். ராமதாஸின் எண்ணமும் இலக்கும் இதற்கு முற்றிலும் எதிராக இருக்கிறது.

‘திமுகவுடன் சேர்ந்து ஜெயித்தாலும், தேர்தலுக்குப் பின் நம் கட்சியை அவர்கள் அழித்துவிடுவார்கள். இந்தத் தேர்தலில் ஏற்படும் தோல்வியைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது. 1989ல் நான் வன்னியர் சங்கத்தைக் கையில் எடுத்துப் போராடி சில விஷயங்களில் வெற்றி அடைந்ததால்தான் நம்மால் கட்சி துவங்கி, அரசியலில் இவ்வளவு பெரிய அடையாளத்தைப் பெற முடிந்தது. இன்றும் நமக்கு வடமாவட்டங்களில் வாக்கு வங்கி பலமாக இருப்பதற்கு அதுதான் காரணம். எனக்குப் பிறகும் இந்தக் கட்சி தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், அதேபோல வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தைப் பெரிதாக எடுத்துச் செல்ல வேண்டும். அதைப் போராடி வாங்கித்தந்தால்தான் நம் கட்சியின் மீது வன்னியர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.’ என்பதுதான் அவருடைய கருத்தாக இருக்கிறது.

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தை அவர் மீண்டும் கையில் எடுக்க வேண்டுமென்று நினைப்பதற்கு ஒரே காரணம் இதுதான். உண்மையில் இதில் தனக்கு வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கையில் இந்த கோரிக்கையை அதிமுக அரசிடம் அவர் முன்வைக்கவில்லை. ஆனால் தேர்தல்நேரத்தில் இந்த விவகாரத்தில் அதிமுக அரசு ஒரு முடிவெடுத்து அரசாணை வெளியிட்டால்தான் வன்னியர் சமுதாய மக்களை தேர்தல் களத்தில் நெஞ்சை நிமிர்த்தி சந்திக்க முடியுமென்று நினைத்தார். அது நடக்கவில்லை.

இந்த விவகாரத்தைக் கையாள்வதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதில் தெளிவாகவுள்ளார். உண்மையைச் சொல்வதானால் இந்த விவகாரத்தில் அவர் பின்பற்றுவது கருணாநிதியின் வழிகாட்டுதலை. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று பல தரப்பிலும் அவரிடம் வலியுறுத்தப்பட்டபோது, அதிகாரிகளும் கூட ‘அதை நடத்துவதில் ஒரு பிரச்சினையுமில்லை; நடத்திவிடலாம்’ என்றுதான் ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அதை நடத்தவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் கருணாநிதி.

சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்துவது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகி விடும்; அது தேன்கூட்டில் கை வைப்பதற்குச் சமமானது என்று கருணாநிதி அதற்கு இசையவே இல்லை.

முதல்வர் பழனிசாமியும் அப்படித்தான் நினைக்கிறார். அதிலும் தேர்தல் நேரத்தில் இதைச் செய்வது இன்னும் அதிகமான பாதகத்தை ஏற்படுத்திவிடும் என்று நினைக்கிறார். இதைச் செய்யாமலே ராமதாஸை சமாளித்துவிடலாம், அவர் எப்படியும் நமது கூட்டணியை விட்டுப் போகமாட்டார் என்று அவர் நினைக்கிறார். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தை ராமதாஸ் மீண்டும் கையில் எடுப்பதற்கு முன், பாரதிய ஜனதாவின் ஒப்புதலை வாங்கியிருந்தார். இப்போதும் அதே பாரதிய ஜனதா தலைமை ‘நீங்கள் மீண்டும் இதே கூட்டணியில் இருக்க வேண்டும்’ என்று கூறினால் அவர் கூட்டணி மாறமாட்டார் என்பதுதான் முதல்வர் எடப்பாடியின் நம்பிக்கைக்கான ஒரே காரணம்.

ராமதாசுக்கு ஒரு பெரும் லட்சியம் இருக்கிறது. அவர் இருக்கும்போதே, கோட்டையில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அளவுக்கு தன் கட்சியை ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்பதுதான் அது. பலருக்கு அது பேராசையாகக் கூடத் தெரியலாம். ஆனால் அவர் போட்டிருந்த அரசியல் கணக்கு அப்படிப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது, மிகக்கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. தமிழக அமைச்சர்கள் ‘டயர் நக்கி’ என்றெல்லாம் மிகவும் மோசமாக வசைபாடிய பின்பு, அவர் இப்படிக் கூட்டணி வைத்ததுதான் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் மரியாதையின்றி மானாவாரியாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால் அதற்கும் ஒரு பின்புலத்தை அவர் சொன்னார்...இந்தத் தேர்தலில் இவ்வளவு இறங்கி வந்து சில எம்பி சீட்டுகளை வாங்கிவிட்டால், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று 20, 25 சீட்டுகள் வென்று விடலாம். அந்தத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை; அதனால் எந்தக் கட்சி ஜெயித்தாலும் நம்மிடம் ஆதரவு கேட்கவேண்டிய நிலை வரும். அப்போது நாம் சில நிபந்தனைகளைப் போட்டு, துணை முதல்வர், முக்கியத்துறைகளை கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்று அவர் பெரும் கனவோடு இருந்தார்.

இப்போதும் அவர் அதில் இம்மியளவும் பிறழவில்லை. அவருக்கு நெருக்கமானவர்கள் மிகச்சிலர்தான். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘திமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக அன்புமணி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஏதோ தீண்டத்தகாத கட்சியைப்போல, பாமகவுடன் கூட்டணி வேண்டாமென்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள். திமுகவுடன் கூட்டணி வேண்டாமென்றுதானே நானும் சொல்கிறேன். அதை ஏன் யாருமே புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்’ என்று சொல்லிவிட்டு, அப்படிச் சொல்வதற்கான காரணத்தையும் மிகவும் மன வருத்தத்தோடு அவர்களிடம் பகிர்ந்திருக்கிறார்.

‘கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம்கேட்டு திமுக வழக்குத் தொடுத்தபோது, வழக்கறிஞர் பாலு போட்ட வழக்கை வாபஸ் பெற வைத்தது நான்தான். ஆனால் ஸ்டாலின் அதற்கு நன்றி கூடத் தெரிவிக்க வில்லை. அதற்குப் பின்னும் அவர் என்னை மதிக்கவே இல்லை. கருணாநிதி வேறு. ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் பொதுவிஷயம் சமூகநலன் என்றால், அந்த விஷயத்தை அவர் வேறு கோணத்தில்தான் பார்ப்பார், முடிவெடுப்பார். ஸ்டாலின் எல்லாவற்றையும் பெர்சனலாகவே பார்க்கிறார். அவர்களிடம் பேசுவது அன்புமணிக்குத் தேவையில்லாத விஷயம்’ என்று அவர் குமுறியது அன்புமணியின் செவிகளையும் எட்டியிருக்கிறது. நாளை நிர்வாகக்குழுவில் ஒரு விடை தெரியுமென்று நாங்களும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்!’’ என்று தைலாபுரத்தின் ரகசியங்களை பகிர்ந்தனர்.

இன்று நடக்கும் பாமக நிர்வாகக்குழு அவசரக்கூட்டம், அதிமுக கூட்டணியில் நிச்சயமாக ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாகவுள்ளது. முதல்வர் பழனிசாமி நினைப்பதுபோல, பாரதிய ஜனதா தலைவர்கள் சொன்னால் அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. டெல்லிக்கு நேரடியாகப் போய்ப் பேசியும் கூட, எதிர்பார்த்த பதிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் பெறமுடியவில்லை. அப்படி இருக்கையில், பாமக விஷயத்தில் மட்டும் முதல்வர் எதிர்பார்ப்பதை அவர்கள் பேசுவார்களா என்பது கேள்விக்குறிதான்.

தனித்தா, பழைய கூட்டணியிலா, புதிய கூட்டணியிலா...பாமக முடிவுக்காக தமிழகமே வெயிட்டிங்!

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 24 ஜன 2021