மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 ஜன 2021

தனித்துப் போட்டி: ராமதாஸ் ‘தில்’...பாமக நிர்வாகிகள் ‘திகில்!’

தனித்துப் போட்டி: ராமதாஸ் ‘தில்’...பாமக நிர்வாகிகள் ‘திகில்!’

தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறாத கட்சியுமில்லை; அப்படி மாறுவது ஒன்றும் தமிழக அரசியலுக்கு புதிதான காட்சியுமில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கும் நிலையில், இப்போது வரையிலும் இரண்டு பிரதானக் கூட்டணிகளிலும் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்பது போன்ற தோற்றம்தான் தெரிகிறது. ஆனால் திரைமறைவில் நடக்கும் பல பேச்சுவார்த்தைகளும், நகர்வுகளும் இப்போதுள்ள கூட்டணிகளில் நிச்சயமாக பல மாற்றங்கள் நடக்குமென்பதை அறுதியிட்டுச் சொல்கின்றன.

கூட்டணி மாறுவதற்குக் காரணம் சொல்வதில் போட்டி வைத்தால், தமிழக அரசியல்வாதிகளை மிஞ்ச அகில இந்திய அளவில் ஆளே கிடையாது. அதில் ராமதாசும், வைகோவும் வாய் தேர்ந்தவர்கள். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தன்னுடைய வாக்குவங்கியை தெரிந்து கொள்ளும் பொருட்டு, துணிச்சலுடன் பாமக தேர்தல் களத்தில் இறங்கியது. தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிட்டபோதும், வடக்கு மாவட்டங்களைத் தவிர வேறு எங்கும் அந்தக் கட்சியால் டெபாசிட் வாங்கமுடியவில்லை.

அதேநேரத்தில் வடக்கு மாவட்டங்களில் கடந்த தேர்தலில் வெற்றியின் திசையை மாற்றிவிட பிரதானக் காரணமாயிருந்த மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளை விட, பாமக வேட்பாளர்கள் அதிக வாக்குகளை வாங்கி, வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் தங்களுக்கு இருக்கும் வாக்குவங்கியை நிரூபித்துக் காட்டினர். உண்மையில் அப்போது வாங்கிய வாக்கு சதவிகிதத்தைக் காண்பித்தே, நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான சீட்டுகளையும் அதிமுகவிடம் வாங்கினார் ராமதாஸ்.

அதன்பின்பு இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே நல்லுறவு தொடர்வதாகத்தான் தோன்றியது. வன்னியர் சமுதாயத்தின் மிகமுக்கியமான தலைவரான ராமசாமி படையாட்சியின் படம் சட்டசபையில் திறக்கப்பட்டதும் இந்த நல்லுறவின் அடிப்படையில்தான். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி ஒப்பந்தத்தில் பேசியபடி, அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகவும் அதிமுக உதவியதால் இரண்டு கட்சியின் கூட்டணியும் வரும் தேர்தலிலும் தொடருமென்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்தச் சூழலில்தான் வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன் வைத்து, மீண்டும் அதிரடி அரசியலை பாமக துவக்கியது. அதற்கு அதிமுக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று நெருக்கடி கொடுத்தது. ஆனால் எடப்பாடி அதற்கான உத்தரவாதத்தைத் தருவதற்குத் தயாராகயில்லை. அதனால் மற்ற சமுதாயத்தினரின் எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டுமென்பதால் அதுபற்றி யோசிக்கவே இயலாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இப்படியொரு கோரிக்கையை எந்த அரசும் நிறைவேற்றித்தராது என்பது தெரிந்தே, ராமதாஸ் இந்த கோரிக்கையை வைத்திருப்பதாகவும், இந்தக் கோரிக்கையை முன் வைத்து பின்னணியில் வேறு விதமான பேரங்களை பாமக நடத்தும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதற்கேற்ப அடுத்த அதிரடி அஸ்திரத்தை வீசியிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

தன் கட்சியின் துணைச்செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பலருடனும் ‘ஜூம் கால்’ மீட்டிங்கில் ராமதாஸ் நேற்று பேசியிருக்கிறார். அப்போது ‘‘இடஒதுக்கீடு விஷயத்தில் அதிமுக சொன்னதுபடி நடக்கவில்லை. அதுதொடர்பான ஆணையைப் பிறப்பிக்க எந்த உத்தரவாதமும் தர மறுக்கிறார்கள். இதனால் நமது சமுதாய மக்களை அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திப்பது மிகவும் சிரமம். அதனால் நமது சமுதாய மக்கள் அதிகமாக வசிக்கும் 100 தொகுதிகளின் பட்டியலை நாங்கள் எடுத்துள்ளோம். அவற்றில் 60 இடங்களில் நாம் தனித்துப் போட்டியிடுவோம். கண்டிப்பாக 10 முதல் 12 இடங்களில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே நீங்கள் அனைவரும் இதே நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளில் இறங்கவேண்டும்’’ என்று பேசியிருக்கிறார்.

மருத்துவரின் இந்தப் பேச்சு, பாமக நிர்வாகிகளிடையே பயத்தையும் ஒரு விதமான பதற்றத்தையும் உண்டாக்கியிருக்கிறது. ஒருபுறத்தில் திமுகவுடன் அன்புமணி ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் ராமதாஸ் இப்படிப் பேசியிருக்கிறாரே என்று நிர்வாகிகள் ஆதங்கப்படுகின்றனர். இதுபற்றி தமக்கு நெருக்கமானவர்களிடம் ராமதாஸ் பேசுகையில், ‘திமுகவுடன் கூட்டணி வைத்தால் வடக்கு மாவட்டங்களில் நிச்சயமாக பல தொகுதிகளை நம்மால் வெல்லமுடியும். ஆனால் வரும் ஐந்தாண்டுகளில் நமது கட்சியை ஒன்றுமில்லாமல் செய்து விடுவதற்கான வேலைகளை திமுகவினர் கண்டிப்பாகச் செய்து விடுவார்கள். அதனால் அவர்களுடன் கூட்டணி வைப்பது ஆபத்து!’ என்று சொல்லியிருக்கிறார். இதுதான் பாமகவினரிடம் ஒரு விதமான குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில், சேலத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த பாமக தலைவர் கோ.க. மணி, ‘‘வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு தருவது குறித்து திமுக தரப்பில் உறுதியளித்தால் அவர்களுடன் கூட்டணி பற்றிப் பேசுவோம்’’ என்று கூறியிருக்கிறார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று பேசிய அக்கட்சியின் தலைவர், ‘‘இன்னும் சில கட்சிகள் கூட நம்மோடு கூட்டணி வைத்துக்கொள்வதற்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று ஒரு ‘பிட்’டைப் போட்டிருக்கிறார். அந்த சில கட்சிகளில் பாமகவும் ஒன்று என்றும் திமுக நிர்வாகிகள் தரப்பில் தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.

இதை மறுக்கும் திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர் செல்வம், ‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தருவோம் என்று எங்களுடைய தலைவர் சொன்ன வாக்குறுதியை ராமதாசும், அவருடைய மகன் அன்புமணியும் கிண்டல் அடித்தார்கள். இப்போது திமுக உறுதி தந்தால் கூட்டணிக்குப் பேசத்தயார் என்று கோ.க.மணியைப் பேசவைத்திருக்கிறார்கள். இது அதிமுகவுடன் பேரத்தை அதிகப்படுத்திக்கொள்வதற்கான ஒரு யுக்திதான்!’’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற கோஷத்துடன், தேர்தலை ‘தில்’ ஆக தனித்து சந்தித்தது பாமக. அந்தத் தேர்தல் பரப்புரையில் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற பாடல் வடக்கு மாவட்டங்களில் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தது. அதில் ‘விழித்துக் கொள்ளாவிட்டால் விற்றுவிடுவார்கள் தம்பி’ என்று ஒரு வரி வரும்.

அந்த வரிகளைத்தான் பாமக தொண்டர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறது காலம்!

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

சனி 23 ஜன 2021