மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

கொங்கு கோட்டை... வேலைகளில் வேகம்... திமுகவின் புதிய வியூகம்!

கொங்கு கோட்டை... வேலைகளில் வேகம்... திமுகவின் புதிய வியூகம்!

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பார்கள். அதுபோல கொங்கு வெற்றி என்றால் எங்கும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரலாம் என்பது கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. 2011, 2016 இரண்டு சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் அதிமுகவை மாபெரும் வெற்றி பெறச்செய்து அதை உறுதி செய்தனர் கொங்கு மக்கள்.

கோவையில் கலைஞரும், எம்.ஜி.ஆரும் ஒரே அறையில் தங்கியிருந்து கலைத் துறையில் கால் பதித்த ஒரு காலம் உண்டு. இருவரும் தங்களின் இறுதிக்காலம் வரும்வரை, கோவைக்கு வரும்போதெல்லாம் அதை நினைவுபடுத்திப் பேசிக்கொண்டே இருந்தார்கள். அதையும் தாண்டி, கோவையைச் சேர்ந்த சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த பல படங்களிலும் எம்.ஜி.ஆர் நடித்ததால் அவருக்கு கொங்கு மக்களின் மீது இன்னும் பற்றும் பாசமும் அதிகம். அப்போது தொடங்கிய இரட்டை இலைப்பாசம், கொங்கு மக்களுக்கு இன்று வரையிலும் நீடிக்கிறது.

கொங்கு மக்களின் இரட்டைஇலைப்பாசத்துக்கு ஒரு வரலாற்றுச்சான்று உண்டு. 1977ஆம் ஆண்டு தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்படவில்லை. வேறு ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது. அதிமுக வேட்பாளருக்கு சிங்கம் சின்னம் வழங்கப்பட்டது. அவருக்காக எம்.ஜி.ஆர் நேரில் வந்து பரப்புரை செய்தார். ஆனால் வென்றது இரட்டை இலையில் நின்ற சுயேச்சை வேட்பாளர். அந்த இரட்டை இலைப்பாசம் கொங்கு கிராமங்களில் இன்றளவும் குறையவில்லை.

மொத்தம் 54 தொகுதிகளை உள்ளடக்கிய கொங்கு சட்டப்பேரவை தொகுதிகளில், 2016ஆம் ஆண்டு தேர்தலில் 44 தொகுதிகளில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்றது. திமுக 10 தொகுதிகளில் மட்டுமே கூட்டணி கட்சிகளோடு வெற்றி பெற்றது. ஆட்சியமைக்கும் வாய்ப்பு திமுகவுக்கு கை கழுவிப்போனது

கொங்கு மண்டலத்தால்தான். தன்னை மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமரவைத்த கொங்கு மக்களுக்கு நன்றி செலுத்தும்விதமாகவே மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு முக்கியத் துறைகள் அனைத்தையும் வாரி வழங்கினார் ஜெயலலிதா.

அவர் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக முதலமைச்சர் நாற்காலியில், முழுமையான ஆட்சிக்காலத்தையும் முடிக்கவிருக்கிறார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி. அது அவரது தனிப்பட்ட செல்வாக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் இது நிகழ்ந்திருப்பது, ஏற்கெனவே இப்பகுதியில் பலவீனமாகவுள்ள திமுகவுக்கு கூடுதல் பலவீனம்தான்.

2006 தேர்தலில் திமுகவைப் பெரும்பான்மை இழக்கச் செய்த கொங்கு தொகுதிகள், 2011ஆம் ஆண்டு மிகக்குறைந்த வாக்குகளையே தந்தன. 2016 தேர்தலில் கட்சியின் வாக்கு வங்கியிலேயே 3 சதவிகிதம் குறைந்த அதிசயமும் நடந்தது. அதற்கு, திமுகவில் இருந்த கொங்கு சமுதாயத்தினரும் அதிமுக நிர்வாகிகளுடன் ரகசியக் கூட்டணி அமைத்ததே காரணமென்ற புகார் அப்போதே கிளம்பியது. இந்த ரகசியக் கூட்டணி இப்போது பல மடங்கு அதிகமாகி, மறைமுகமாக ஆளுங்கட்சிக்கு இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாக மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த உடன் பிறப்புகள் குமுறுகின்றனர்.

உதாரணமாக, கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாவட்டப் பொறுப்பை திமுக வழங்கி இருக்கிறது. அவருடைய கட்டுமானம் சீல் வைக்கப்பட்டபோது, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த திமுக புள்ளிதான் ஆளும்கட்சியின் விஐபியிடம் பேசி அதைத் திறப்பதற்கு உதவியதாகவும், அதற்கு ஈடாக அந்த ஆளும்கட்சி விஐபிக்கு எதிராக இந்த மாவட்டம் எந்த வேலையும் செய்யக் கூடாது என்ற உத்தரவாதம் பெறப்பட்டதாகவும் திமுக நிர்வாகிகள் சில நிகழ்ச்சிகளை சுட்டிக்காட்டுகின்றனர். இதைத் தங்களுடைய கட்சித் தலைமை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது இவர்களின் கவலையாக இருக்கிறது.

இதற்கேற்ப புதிய வியூகத்தைக் கையில் எடுத்திருக்கிறது திமுக. கொங்கு பகுதியில் கவனிக்கப்படாமல் உள்ள அருந்ததியர் சமூக மக்களின் வாக்குகளை முழுமையாக வாங்குவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறது. அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜ் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே இதற்கான வேலைகள் தொடங்கிவிட்டதாகச் சொல்கின்றனர் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள். ஆனால் பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் முருகன், சபாநாயகர் தனபால் போன்றவர்களுக்குத் தரப்பட்டுள்ள அரசியல் அங்கீகாரத்தைச் சுட்டிக்காட்டி இதை முறியடிக்கும் முயற்சி நடக்கிறது. ஆனால் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு உள் ஒதுக்கீடு தந்ததில் திமுக மீது இன்னும் அந்தச் சமுதாயத்தினருக்கு நன்றி இருப்பதாகச் சொல்லும் திமுக நிர்வாகிகள், கடந்த ஐந்தாண்டுகளில் அதிமுக ஆட்சியில் அருந்ததியர் மக்கள் பலவிதங்களில் புறக்கணிக்கப்பட்டதையும், பாதிக்கப்பட்டதையும் நினைவூட்டி திண்ணைப் பரப்புரைகளைத் தொடங்கியிருக்கின்றனர்.

இது எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகுமென்று தெரியவில்லை. ஆனால், அருந்ததியர் காலனியில் மக்களோடு சேர்ந்து சாப்பிடுவது, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர உத்தரவிடுவது என ஆளும்கட்சியினர் அதிரடி காட்டி வருகின்றனர். அந்தப் பகுதிகளில் வேலைகளும் வேகமடைந்துள்ளன. ஏற்கெனவே கொங்கு மண்டலம் முழுவதும் எக்கச்சக்கமான வளர்ச்சிப் பணிகள் நடப்பதோடு இந்த வேலைகளும் நடப்பதால் அருந்ததியர் மக்களின் வாக்குகளும் எங்களுக்கே என்று அதிமுகவினர் நம்புகின்றனர்.

தொழில்வளம் மிக்க கொங்கு மண்டலத்தில் திமுக காலத்தில் ஏற்பட்ட அதீத மின்வெட்டுதான், திமுக மீது இப்போதும் இருக்கும் அதிருப்திக்கும் அச்சத்துக்கும் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதையும் கடந்து ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஆதரவு போன்ற காரணங்களால் பாரதீய ஜனதா மீதும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுக மீதும் கொங்கு மக்களுக்கு வெறுப்பே அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றிக்கு அதுவே காரணமென்பது இவர்களின் வாதமாகவுள்ளது.

கொங்கு மக்களின் சமுதாயப்பற்று, ஆளும்கட்சியின் அதிரடி வேலைகள் அனைத்தையும் தாண்டி திமுக திரும்பவும் வெற்றி பெறுவதற்கு அந்தக் கட்சி எடுத்துள்ள புதிய வியூகம் கைகொடுக்குமா என்பதை இப்போது அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியே தங்களுக்குக் கிடைக்குமென்று திமுகவும், எப்போதும் போல சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலையைத்தான் கொங்கு மக்கள் ஆதரிப்பார்கள் என்று அதிமுகவும் அசால்ட் ஆக இந்தத் தேர்தலை ‘டீல்’ செய்தால் கிடைக்க வேண்டிய வெற்றி, எதிர்திசைக்குப் போய்விடுமென்பதே இப்போதைய களநிலவரம்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

புதன் 20 ஜன 2021