மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

அதிமுகவில் சசிகலா- ஓபிஎஸ் பதிலுக்குக் காத்திருக்கும் அமமுக

அதிமுகவில் சசிகலா- ஓபிஎஸ் பதிலுக்குக் காத்திருக்கும் அமமுக

சசிகலா அதிமுகவில் சேர வாய்ப்பே இல்லை என்று நேற்று (ஜனவரி 19) டெல்லியில் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் இதழ் இன்று (ஜனவரி 20) பதிலளித்துள்ளது.

பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் சந்தித்தார். பிரதமருடன் சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி... அமித் ஷா, மோடி ஆகியோர் உடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பேசியதாகவும், அரசியல் பேச இப்போது நேரமில்லை என்றும் தெரிவித்தார் முதல்வர்.

அப்போது நிருபர்கள், “விடுதலையாகி வெளியே வரும் சசிகலா அதிமுகவில் சேர வாய்ப்பிருக்கிறதா?” என்ற கேள்வி கேட்க,

“ஒண்ணும் வாய்ப்பே இல்லை.அவர்கள் அதிமுக கட்சியில் இல்லை. நூறு சதவிகிதம் வாய்ப்பே இல்லை” என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் தினகரன் பற்றிய கேள்விக்கு, “ அவரது கட்சியில் அவர் மட்டும்தான் இருக்கிறார். இன்னும் சில பேர்தான் இருக்கிறார்கள். மற்ற அனைவரும் அதிமுகவுக்கு வந்துவிட்டார்கள். அவரையே அம்மா பல காலம் நீக்கி வைத்திருந்தார். அம்மா மறைவுக்குப் பிறகுதான் அவருக்கு பதவி கொடுத்தார்கள். அம்மா இருக்கும்போதே அவர் கட்சியிலேயே கிடையாது”என்று தினகரனை பற்றியும் தீர்மானமாக பதில் சொன்ன முதல்வர், ‘நன்றி வணக்கம்’ என்று சொல்லி பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 20) அமமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் 7 ஆம் பக்கத்தில் அம்புஜம்-பங்கஜம் என்ற பெயரில் ஒரு கருத்துச் சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அம்புஜம் “அதிமுகவில் சின்னம்மாவுக்கு இடமில்லை என்று கூவத்தூர் பழனிசாமி கூவியிருக்கிறாரே?”என்று கேட்க, அதற்கு பங்கஜம், “இணை ஒருங்கிணைப்பாளர்தானே அவர்? ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்லப் போறாருன்னு பார்ப்போம். அதன் பிறகு உரிய பதிலளிப்போம்” என்று கூறுவதாக அந்த கருத்துச் சித்திரம் எழுதப்பட்டிருக்கிறது.

அதாவது அதிமுகவில் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்ற எடப்பாடியின் கருத்துக்கு ஓபிஎஸ் இதுவரை ஏதும் சொல்லவில்லை. ஏற்கனவே சசிகலாவுக்கு அதிமுகவில் இடமுண்டா என்ற கேள்விக்கு, ‘அதுபற்றி தலைமை முடிவு செய்யும்’ என்று ஒருமுறை பதில் அளித்திருந்தார் ஓபிஎஸ்.

இந்நிலையில் எடப்பாடியின் கருத்து பற்றி ஓபிஎஸ் பதில் கூறிய பிறகு அடுத்து பதிலளிப்போம் என்று அமமுக கூறியிருப்பது அதிமுகவிலும், அமமுகவிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

-வேந்தன்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 20 ஜன 2021