சசிகலா விடுதலைக்குப் பின் ஆட்சி நீடிக்குமா? ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!


திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக அமைச்சர்களின் தொகுதிகளில் கிராம சபைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். வேலுமணியின் தொண்டாமுத்துர், முதல்வரின் எடப்பாடி, விஜயபாஸ்கரின் விராலிமலை ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 19) மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பாதரை ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின்.
அதில் பேசிய ஸ்டாலின், “வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கு அடையாளம்தான் இந்த கூட்டம். இந்த கூட்டத்திற்கு நீங்கள் ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள். அமைதியாக, கட்டுப்பாட்டோடு நீங்கள் இருக்கின்ற காட்சியை பார்க்கின்றபோது நிச்சயமாக நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியாக தெரிகிறது.
சமீபத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட சில அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம், ஆதாரங்களோடு, ஊழல் புகார் பட்டியலை கவர்னரிடத்தில் கொடுத்திருக்கிறோம். அந்தப் புகார் கொடுக்கப்பட்டு கிட்டதட்ட 2 மாதம் ஆகிறது. இது தவறு என்றால் எங்கள் மீது அவர்கள் வழக்குப்போட்டிருக்கலாம். ஆனால் இதுவரைக்கும் வழக்குப் போடவில்லை. ஏன் வழக்கு போடவில்லை? ஆகவே தவறு நடந்திருக்கிறது. இது எல்லாம் உண்மை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், நாம் 4 மாதம் கூட பொறுத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சசிகலா வெளியே வந்தவுடன் இந்த ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியப்போகிறது என்ற நிலை இன்றைக்கு உருவாகி இருக்கிறது”என்று பேசினார்.
இந்நிலையில் ஸ்டாலினின் பேச்சுக்கு இன்று (ஜனவரி 20) காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பதில் கூறியிருக்கிறார்.
“எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தான் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று கூறி வருகிறார். நான் மக்களால் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவன். என்னை முதல்வராக அதிமுக எம்எல்ஏக்கள் தான் தேர்வு செய்தார்கள். மக்களுக்கு நிறைவான ஆட்சியை நாங்கள் தருகிறோம். எனது ஆட்சி சில நாட்களில் முடிவுக்கு வரப்போவதாக ஸ்டாலின் கூறி வருகிறார். ஜனவரி 27ஆம் தேதிக்குப் பிறகும் எனது தலைமையிலான ஆட்சி நீடிக்கும். சசிகலா விடுதலையாகி வந்தாலும் நான்தான் முதல்வராக நீடிப்பேன்”என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
வேந்தன்