மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

புதுச்சேரி பிளான் ரத்து: ஸ்டாலின் திடீர் ஆக்‌ஷன்!

புதுச்சேரி பிளான் ரத்து: ஸ்டாலின் திடீர் ஆக்‌ஷன்!

புதுச்சேரியில் திமுக மாநில நிர்வாகிகள் கூட்டம் ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றதையடுத்து, அம்மாநில திமுகவினர், ‘அடுத்து நாம்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம்’ என்ற உற்சாகத்திலும் நம்பிக்கையிலும் இருக்கிறார்கள்.

புதுச்சேரியில் திமுக மாநில நிர்வாகிகள் கூட்டம் ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்றது. அதில் திமுகவின் மேலிடப் பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன் எம்பி கலந்துகொண்டு புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்றும் புதுச்சேரியின தற்போதைய நிலை மாற்றி எழுதப்படும் என்றும் அறிவித்தார்.

புதுச்சேரியின் திமுக முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகனை அந்தக் கூட்டத்திலேயே பலரும் முன்மொழிந்தனர்.

இந்தப் பின்னணியில் இப்போது புதுச்சேரி பற்றிய தனது முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் மாற்றிக் கொண்டிருப்பதாக தலைமைக்கு நெருக்கமான தரப்பிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

புதுச்சேரி திமுக அமைப்பாளர்கள் சிவக்குமார்,சிவா, நஜீம் ஆகியோர் அந்த கூட்டத்தில் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்கள்.

தெற்கு மாநில அமைப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான சிவா பேசும்போது,

“புதுச்சேரி சரித்திரத்தை மாற்றி அமைக்க வந்திருக்கிறார் அண்ணன் ஜெகத். புதுச்சேரி அரசியலும் ஆட்சியும் மோசமாகவுள்ளது நமது கட்சிக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று திமுக தலைவரிடம் சொல்லியபோது, ’முதலில் நீங்கள் மூன்று அமைப்பாளரும் ஒற்றுமையாக வாங்கய்யா பார்ப்போம்’ என்றார் கோபமாக. அதன் பிறகு நான் (சிவா) வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், காரைக்கால் மாநில அமைப்பாளர் நாஜிம் மூன்று பேரும் ஒன்றுசேர்ந்து சென்னை அறிவாலயத்துக்கு சென்றோம். தலைவர் பார்த்து மகிழ்ச்சி என்றார்.

அப்போதுதான் புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன் பிறகு புதுச்சேரி நிர்வாகிகளை அழைத்து மூன்றரை மணி நேரம் ஒதுக்கி அவரவர் கருத்துக்களைக் கேட்டு ஒப்புதல் கொடுத்தவர், அன்றிலிருந்து இன்று வரையில் ஒரு நாளைக்கு நான்குமுறை தொடர்புகொண்டு கட்சி நிலவரத்தைப் பற்றியும் புதுச்சேரி அரசியல் சூழ்நிலையைப் பற்றியும் கேட்டறிந்து வருகிறார்.

இப்போது நடக்கும் ஆட்சியில் தொழிற்சாலைகள் மூடி கிடக்கிறது. கார்ப்பரேஷன் காலியாகிவருகிறது, வேலை வாய்ப்புகள் இல்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது” என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி திமுக வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் பேசும்போது, “மில்கள் இயங்கவில்லை. இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. இருக்க இடம் இல்லை. வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலை போக்க திமுக தலைமையிலான ஆட்சி அமையவேண்டும்.

புதுச்சேரியில் திமுக ஆட்சியை அமைக்கத் தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க நாஜிம் சிவா, நான் (சிவக்குமார்) மூவரும் ஒன்றாகப் போயிருந்தோம், எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியளிக்கிறது இந்த ஒற்றுமை தேர்தலுக்கு பிறகும் நீடிக்குமா, ஒற்றுமையா இருப்பீர்களா என்று கேட்டார் தலைவர். அப்போது சிவா கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒப்புக்கிட்டார். அன்று முதல் நான் சிவாவை விடுவதே இல்லை. எந்த நேரமும் சிவா.. சிவா என்றுதான் கூப்பிட்டுகிட்டு இருப்பேன்.

ஐயா ஜெகத்ரட்சகன் முதல்வர் பொறுப்பு ஏற்றதும் மக்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் தரமாக மருத்துவம் கொடுப்பார். அப்போது நான் சுகாதாரத்துறை அமைச்சராகவிருப்பேன், சிவாவுக்குக் கலால் துறை அமைச்சர்” என்று அமைச்சரவைப் பட்டியலையே வாசித்தவர்,

“ஜெகத்ரட்சகன் அவர்கள் முதல்வர் பதவி ஏற்றதும் இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுப்பார். அரசாங்கத்தில் கொடுக்கமுடியாவிட்டாலும் ஒரு தொழிற்சாலையை உருவாகி வேலை வாய்ப்புகள் கொடுப்பார். புதுச்சேரி மாநில பட்ஜெட்டை விட அவரது (ஜெகத்) பட்ஜெட் மிகப்பெரியது. 2021 மே 14 அன்று திமுக ஆட்சி அமைக்கும் முதல்வராக ஜெகத்ரட்சகன் பொறுப்பேறுப்பார் என அடித்து சொல்கிறேன். அன்றுதான் நான் பிறந்த நாள்” என்றெல்லாம் உற்சாகமாகவும் உறுதியாகவும் பேசினார்கள்.

இந்த நிலையில்தான் சென்னையில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமிருந்து போன் வந்துள்ளது.

ஏற்கனவே புதுச்சேரியில் திமுக செய்யும் தனி ஆவர்த்தன முயற்சிகள் பற்றி புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலுக்குக் கொண்டு சென்றனர். ராகுல் காந்தியும் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேசியிருக்கிறார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மீது கடுமையான புகார்களை ராகுல் காந்தி சோனியாவிடம் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து சோனியாவிடம் ஸ்டாலின் மீது ராகுல் கடும் புகார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தப் பின்னணியில்தான் 18 ஆம் தேதி புதுச்சேரி திமுக நிர்வாகிகள் கூட்டம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும்போது ஸ்டாலினுக்கு போன் செய்த ராகுல் காந்தி, ‘புதுச்சேரியில நம்ம கூட்டணியில என்ன நடக்குது? ஒரே கன்ஃப்யூஸா இருக்கு. நீங்க கொஞ்சம் பார்த்து க்ளியர் பண்ணுங்களேன்’என்று பேசியிருக்கிறார். ஸ்டாலினும், ‘நான் இதுகுறித்து கவனிக்கிறேன்’ என்று ராகுலுக்கு பதில் அளித்துள்ளார்.

ராகுலிடம் இருந்து வந்த போனையடுத்து ஸ்டாலின் தனது நலம் விரும்பிகள் சிலரிடம் பேசியிருக்கிறார். அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகுதான் மறுநாள் 19 ஆம் தேதி காலையில் தி இந்து ஆங்கில பத்திரிகையில் ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘புதுச்சேரியில் திமுகவின் நடவடிக்கைகள் கட்சியை பலப்படுத்தும் வகையில்தான். தேர்தல் பணிகள் அல்ல. தேர்தல் கூட்டணியோடு இதைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்’ என்று பதில் அளித்திருந்தார்.

இதைப் பார்த்து புதுச்சேரி திமுகவினருக்கு, ‘ஜெகத்ரட்கனை முதல்வர் வேட்பாளர்னு நேத்துதான் முன்னிறுத்தினோம். இன்னிக்கு தலைவர் இப்படி பேட்டி கொடுத்திருக்காரே? இதுதான் குழப்பமா இருக்கு”என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 19) மதியம் ஜெகத்ரட்சகனிடம் பேசிய திமுக தலைவர், “புதுச்சேரியில் திமுக -காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது”என்று கூறியிருக்கிறார்.

புதுச்சேரி கூட்டத்துக்காக மிகப்பெரிய தொகையை செலவு செய்துவிட்ட ஜெகத்ரட்சகனும், ஸ்டாலினின் திடீர் மாற்றத்தை அடுத்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

ஆக புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சனை முன்னிறுத்துவது என்று ஸ்டாலின் எடுத்த முடிவில் தற்போது பின் வாங்கியிருக்கிறார்.

-வேந்தன்

மண்ணின் மைந்தர்...ஒரு லட்சம் பேருக்கு வேலை: புதுச்சேரிக்கு புது திசை காட்டும் ஜெகத்ரட்சகன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 20 ஜன 2021