மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 19 ஜன 2021

டாக்டர் சாந்தா மறைவு: அரசு மரியாதை- முதல்வர் அறிவிப்பு

டாக்டர் சாந்தா  மறைவு: அரசு மரியாதை- முதல்வர் அறிவிப்பு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் பத்மஸ்ரீ டாக்டர்வி.சாந்தா இன்று (ஜனவரி 19) காலை உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர், தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்தில் பரவலாக்கிய அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையோடு நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

“பத்மஸ்ரீ டாக்டர்வி.சாந்தா அவர்களின் குடும்பத்தாருக்கும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மருத்துவர் வி.சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமைசேர்க்கும் வகையிலும், அவரது தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்”என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்தவர் மருத்துவர் சாந்தா. அவர் எப்போதும் நினைவுக்கூரப்படுவார். சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனம் ஏழைகளுக்கும் எளிய மக்களுக்கும் சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. 2018-ம் ஆண்டில் நான் சென்னை அடையாறு இன்ஸ்டிடியூட்டிற்கு சென்றதை நினைவு கூர்கிறேன்.. டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஓம் சாந்தி’’ என்று பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் டாக்டர் சாந்தா அவர்களைப் போல் இன்னொருவரை இந்தியாவில் மட்டுமல்ல - உலகத்திலேயே காண்பது அரிது. தனது மருத்துவப் படிப்பை முடித்தவுடன் 12 படுக்கைகள் மற்றும் ஒரேயொரு கட்டடத்துடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் துவங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்த அவர், மூன்று ஆண்டுகள் சம்பளமே பெறாமல் தன்னலமற்ற சேவை ஆற்றியவர். உலகெங்கும் வாழ்வோருக்குப் புற்றுநோய் சிகிச்சையளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தி - அம்மருத்துவமனையில் கடந்த 66 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு மிகுந்த சேவையாற்றியவர். அங்குள்ள ஒவ்வொரு செங்கல்லும் டாக்டர் சாந்தா அவர்களின் புகழ் பாடும்! மருத்துவமனையிலேயே தனது வாழ்க்கை முழுவதையும் கழித்த ஒரு மருத்துவர் இன்றைக்கு நம்மை விட்டுப் பிரிந்திருப்பதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

நோபல் பரிசு பெற்ற திரு. சி.வி.ராமன் மற்றும் திரு. எஸ்.சந்திரசேகர் குடும்பத்திலிருந்து வந்த டாக்டர் சாந்தா - ஏழை எளியவர்களும், நடுத்தர மக்களும் - ஏன், அனைத்துத் தரப்பு மக்களும் தரமான புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்கு தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவர் மீது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததை நானறிவேன். உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள “சுகாதார ஆலோசனைக் குழுவின்” உறுப்பினராகப் பணியாற்றியவர். உலகின் எந்த மூலையில் புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் - அதை உடனே இங்கே கொண்டு வந்து ஏழை எளியவர்களுக்காகப் பணியாற்றியவர்”என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் சாந்தா மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். மறைந்த டாக்டர் சாந்தாவின் உடல் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 19 ஜன 2021