விஜயபாஸ்கருக்குத் தொல்லை கொடுக்கிறோமா? சிபிஐ அதிகாரிகள் விளக்கம்

politics

குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனை விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக தகவல்கள் கசிந்ததையடுத்து அதை நாம் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.

இதையடுத்து நம்மை தொடர்பு கொண்ட சிபிஐ. அதிகாரிகள் சிலர் சிரித்தபடியே நம்மிடம் பேசினார்கள்.

“சிபிஐயின் எல்லா நடவடிக்கைகளுக்கும் அரசியல் பின்னணியைப் பொருத்திப் பார்ப்பது நம்முடைய மீடியாக்களுக்கு வழக்கமாகிவிட்டது.நீங்களும் இதில் அவசரப்பட்டு விட்டீர்களே” என்றவர்கள்…

“பொள்ளாச்சி பாலியல் வழக்கை பொறுத்த வரை அண்மையில் அதிமுக பிரமுகர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் இப்படித்தான் எல்லா மீடியாக்களும் அரசியல் பின்னணி என்று எழுதினார்கள். நிலைமை என்னவென்றால் தமிழகத்தில் சிபிஐக்கு பல வழக்குகள் விசாரணைக்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லா வழக்குகளையும் ஒரே நேரத்தில் விசாரிக்கும் அளவுக்கு புலனாய்வுக் குழுவினர் எண்ணிக்கை அதிகம் கிடையாது. எனவே ஒரு வழக்கை முடித்து அதில் கணிசமான முன்னேற்றமும், துப்பும் கிடைத்த பிறகு அடுத்த வழக்கை நோக்கி கவனம் செலுத்துவோம். இது சிபிஐக்குள் நடக்கும் நிர்வாக ரீதியான நடவடிக்கை.

அதன்படிதான் ஏற்கனவே விசாரித்து வந்த ஒரு வழக்கில் சில விஷயங்களை முடித்த பிறகு பொள்ளாச்சி வழக்கின் மீது கவனம் திருப்பினோம். அதில் அந்த நபர் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை எடுக்க போதுமான முகாந்திரங்கள் இருந்ததால் நடவடிக்கை எடுத்தோம். அவ்வளவே.

கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வெளிநாட்டிலிருந்து வாங்கிய ஹம்மர் கார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவரது தேனாம்பேட்டை வீட்டிற்கு சென்றபோது, ஏதோ அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்காக நாங்கள் செல்வதாக நினைத்துக் கொண்டு அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கற்களாலும் கட்டைகளாலும் எங்களை தடுத்தனர். காரணம் அப்போது மத்தியில் ஆளுங்கட்சியான காங்கிரசுக்கும் அதில் பங்கேற்ற திமுகவுக்கும் இடையிலான அரசியல் பிரச்சினைதான் என்று மீடியாக்கள் வழக்கம்போல பேசின.

நாங்கள் உதயநிதி தொடர்பான ஹம்மர் வழக்கு தொடர்பாக ஆதாரங்களை சேகரித்து அது தொடர்பாக உதயநிதியை விசாரிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். ஆனால் அந்த நேரத்தில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டதால் … அதற்கு இரு தினங்கள் கழித்து நாங்கள் விசாரணைக்கு சென்றதால், கூட்டணி விலகலுக்கும் எங்கள் விசாரணைக்கும் முடிச்சுப் போட்டு விட்டன மீடியாக்கள். ஆனால் இது தொடர்பாக நாங்கள் சில நாட்களுக்கு முன்பே முடிவு செய்து உதயநிதியை விசாரிக்கும் தேதியை முடிவு செய்துவிட்டோம்.அதேநேரம் அரசியல் ரீதியாகவும் சில சம்பவங்கள் நடந்ததால் இது இரண்டுக்கும் எளிதாக முடிச்சிடப்பட்டது.

அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ‘ஜெயலலிதா அதிகார வட்டாரத்தில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த சென்னையில் இருக்கும் சிபிஐ அதிகாரிகளை பயன்படுத்தியிருக்கிறார்’என்று சோனியாவிடம் புகார் சொல்லியிருக்கிறார். சோனியா உடனே பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சொல்லி சென்னையில் இருந்த சிபிஐ அதிகாரிகளை மாற்றிவிட்டார்கள். உதயநிதி ஸ்டாலினை அடுத்து இதே போன்ற வெளிநாட்டு கார் விவகாரத்துக்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் விசாரணை செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கு சென்னை சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்டதால் அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

எனவே சிபிஐக்குள் நடக்கும் நிர்வாக ரீதியான விஷயங்களுக்கு கூட அரசியல் சாயம் பூசப்படுவது போலத்தான், இப்போது விஜயபாஸ்கர் பி.ஏ. சரவணனை நாங்கள் விசாரித்து வருவதாகவும் ஒரு தகவல் கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. குட்கா வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் அதை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

சிபிஐயை பொறுத்தவரை ஏராளமான வழக்குகளை விசாரித்து வருகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் நாங்கள் துறை ரீதியாக ஏதும் நடவடிக்கை எடுத்தால் கூட அது வேறு மாதிரி பார்க்கப்படுவது வழக்கமாகிவிட்டது. பல வழக்குகள் அரசின் தலையீடு இல்லாமல் நடந்து வருகிறது. அரசு நிர்வாகத் தலையீடு இருக்கும் வழக்குகளும் உண்டு.

ஆனாலும் இப்போதைக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் பி.ஏ. சரவணனை நாங்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை” என்று விளக்கினார்கள்.

எவ்வித உள்நோக்கமும் இன்றி வெளியிடப்பட்ட அந்த செய்திக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

-பாரதி�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *