மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

டிஜிட்டல் திண்ணை: டெல்லி பயணம் - எடப்பாடிக்குக் கிடைத்த உத்தரவாதம்!

டிஜிட்டல் திண்ணை:  டெல்லி பயணம் - எடப்பாடிக்குக் கிடைத்த உத்தரவாதம்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஜனவரி 18ஆம் தேதி டெல்லி செல்கிறார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதன்முறையாக மேற்கொள்ளும் டெல்லி பயணம் இது.

இந்தப் பயணத்தில் நாளை 19ஆம் தேதி பிரதமர் மோடியைச் சந்திக்கும் எடப்பாடி, அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட வேறு சில அமைச்சர்களையும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

கடந்த சில மாதங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜக தலைமையிடம் இருந்து சற்று இடைவெளி பேணுவதாகத் தகவல்கள் வந்தன. ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் நெருக்கத்தில் இருக்கிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி பாஜக தலைமையிடம் இருந்து சற்று தள்ளியே இருக்கிறார் என்றும் அதிமுக வட்டாரத்திலேயே இருவேறு கருத்துகள் உலவின.

இந்த நிலையில்தான் முதவ்வரின் டெல்லி பயணம் அரசு ரீதியாக மட்டுமல்ல; அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

டெல்லி செல்வதற்கு முன் தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. அப்போது அந்த அமைச்சர்கள்,.. 'உங்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதற்கு பாஜகவின் டெல்லி தலைமைக்கு ஏன் இவ்வளவு தயக்கம். அதை வைத்துதான், ஓபிஎஸ் இடையில் சில கேம் ஆடிக் கொண்டிருக்கிறார்' என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு முதல்வர்....'பாஜக தரப்பில் நம்மிடம் சீட்டுகளை கன்ஃபார்ம் செய்வதற்கு சில உத்திகளை மேற்கொள்வார்கள். அதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ரஜினி வரவில்லை என்றதுமே அவர்களுக்கு அதிமுகவை தவிர வேறு ஒரு பலமான பிடிமானம் இருக்க முடியாது. இதை அவர்கள் உணர்வார்கள் என்று காத்திருந்தேன். இப்போது உணர்ந்திருக்கிறார்கள்.

டெல்லியில் இருந்து என்னிடம் பேசி நமது முதல்வர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் கட்சிப் புள்ளிகளுக்கும் தகவல் அனுப்பி வைத்துள்ளார்கள். அதனால்தான் பாஜக பொதுச்செயலாளர் சி.டி. ரவி அதிமுகவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள்தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இங்கே உள்ள முருகனும் இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். அதனால் டெல்லி பயணத்துக்கு முன்பே நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது' என உற்சாகமாகச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி.

அப்போது சில அமைச்சர்கள்.,. 'அண்ணே..இதெல்லாம் ஓபிஎஸ் அண்ணனுக்கு தெரிஞ்சும் அவர் ஏன் அப்பப்போ சில சலசலப்புகளை ஏற்படுத்திக்கிட்டிருக்காரு' என்று கேட்டனர்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, 'ஓபிஎஸ் அண்ணனுக்கும் டெல்லியின் மூவ் எல்லாமே நல்லா தெரியும்... அவருக்கும் இதைப் பற்றி சொல்லி இருக்காங்க. ஆனால், நம்மோடு முழுசாக இணக்கம் ஆகிவிட்டால் நாம் அவரை ஓரங்கட்டி விடுவோமோ என்ற ஒரு சின்ன சந்தேகம் அண்ணனுக்கு இருக்கிறது. அதனால்தான் அவர் தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக அவ்வப்போது சில அதிர்வுகளை ஏற்படுத்துவாரு. அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை' என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, டெல்லி பாஜக தலைமையிலிருந்து சில உறுதி மொழிகளையும் சில உத்தரவாதங்களையும் பெற்றுக் கொண்டுதான் டெல்லி புறப்படுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி. அவர் டெல்லி சென்று திரும்பியதும் மேலும் சில அதிரடிகளை மேற்கொள்வார் என்கிறார்கள் அவரது வட்டாரத்தில்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ்அப்.

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

திங்கள் 18 ஜன 2021