மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி?

சிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி?

ராஜன் குறை

கடந்த வாரம் துக்ளக் ஆண்டு விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசிய சில கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. நீதிபதிகள் யார் காலையோ பிடித்து பதவிகளைப் பெறுகிறார்கள் என்று பேசியது ஒரு சர்ச்சை. வீடு பற்றி எரியும்போது சாக்கடை நீரையும் பயன்படுத்தி தீயை அணைக்கலாம் என்று ஒரு உவமையைச் சொல்லி, சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவையும் அ.இ.அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பது சசிகலா மற்றும் அ.இ.அ.தி.மு.க-வை சாக்கடை நீரென்று குறிப்பிட்டதாகக் கருதி இன்னொரு சர்ச்சை. இந்தச் சர்ச்சைகளைக் குறித்து அதிகம் பேசும்போது அவர் பேச்சினை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ்-காரர். பார்ப்பனீய சிந்தனை கொண்டவர். பாஜக ஆதரவாளர். அதனால் தி.மு.க-வை எதிர்க்கிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான். மேலும் அவர் தி.மு.க-வுடன், அ.இ.அ.தி.மு.க-வை ஒப்பிட்டு அ.இ.அ.தி.மு.க, தி.மு.க-வை விட நல்ல கட்சி என்று பாராட்டுவதும் புதியதல்ல. அ.இ.அ.தி.மு.க அரசையே வழிநடத்துவது பாஜக-தான். ஓ.பி.எஸ்ஸை தர்மயுத்தம் செய்யச்சொல்லி தான் தூண்டிவிட்டதாக குருமூர்த்தியே கூறியதும் நாம் அறிந்ததுதான். தேர்தல் என்று வந்துவிட்டால் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் சசிகலா அணி வாக்குகள் சிதறக் கூடாது என்ற அக்கறையில் இப்போது அதே சசிகலாவைக் கட்சியில் இணைக்கலாம் என்று சொல்வதும் ஒரு அரசியல் கணக்குதான். இப்படி மேலோட்டமாக நாம் இந்த கூற்றுக்களை எடுத்துக்கொள்ளும்போது அவற்றின் அடிப்படையாக விளங்கும் கருத்தியல் மோதலைக் காணாமல் விட்டுவிடக் கூடாது. அதைப் புரிந்துகொள்ள தி.மு.க குறித்து அவர் கூறும் குற்றச்சாட்டுகள், அதை எதிர்ப்பதற்கு அவர் கூறும் காரணங்களை ஆராய்வது அவசியம். அப்படியென்ன தி.மு.க-வுடன் அவருக்கு பிரச்சினை? வீடு பற்றி எரிகிறது என்று உவமை சொல்லும் அளவு இப்போது என்ன நடந்துவிட்டது? பத்தாண்டுகளாக தி.மு.க ஆட்சியிலேயே இல்லையே? மத்தியில் ஏழாண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி, மாநிலத்தில் பத்தாண்டுகளாக அ.இ.அ.தி.மு.க ஆட்சி. ஒரு எதிர்க்கட்சியாகப் போட்டியிடும் தி.மு.க-வைத் தோற்கடிப்பதை எரியும் வீட்டில் நெருப்பை அணைப்பதாக உருவகம் செய்யுமளவு ஏன் பதற்றமடைய வேண்டும்? அதை விளக்குவதற்காக அவர் தி.மு.க மீது சொல்லும் சில குற்றச்சாட்டுகளைப் பரிசீலிப்போம்.

தி.மு.க பிரிவினை அரசியல் செய்கிறதா?

தி.மு.க மறைமுகமாகவும், நேர்முகமாகவும் பிரிவினையை ஆதரிக்கும் கட்சி என்கிறார் குருமூர்த்தி. தி.மு.க திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு 58 ஆண்டுகள் ஆகிறது. அப்படி திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிய காலத்திலேயே உண்மையான அதிகாரப் பகிர்வுகளுடன் கூட்டாட்சி ஏற்பட்டால் அதில் பங்கேற்போம் எனப் பலமுறை கூறியுள்ளார் அறிஞர் அண்ணா. அமெரிக்க அரசியல்வாதி வெண்டல் வில்க்கி என்பவர் கூறிய உலகக் கூட்டாட்சி குடியரசிலும் பங்கேற்க தயார் என்றே கூறியுள்ளார். எத்தகைய சுயாட்சி உரிமைகளுடன் கூடிய கூட்டாட்சி என்பதுதான் தி.மு.க எழுப்பிய முக்கிய கேள்வியே தவிர, பிரிவினை அல்ல. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட பிறகு தி.மு.க தேசிய அரசியலில் அனைத்து கட்சிகளுடனும் நல்லுறவை பேணி வந்துள்ளது. நடுவண் அரசின் எல்லா துறைகளிலும், அங்கங்களிலும் தமிழர்கள் கணிசமாக பங்காற்றுகிறார்கள். செயற்கைக்கோள்களைச் செலுத்துவது, விண்வெளி ஆராய்ச்சி என்றால் அப்துல் கலாம் முதல் இஸ்ரோ சிவன் வரை பலர் பங்காற்றியுள்ளார்கள். ராணுவத்தில் எத்தனையோ பேர் பங்காற்றுகிறார்கள், உயிரிழக்கிறார்கள். மத்திய அரசிலேயே வாஜ்பேயி பிரதமராக இருந்த அரசு உட்பட பதினைந்து ஆண்டுகள் தி.மு.க அங்கம் வகித்துள்ளது. இந்தியாவின் நலன்களை மட்டுமல்ல, மூன்றாம் உலக நாடுகளின் நலன்களையும் W.T.O என்ற உலக வர்த்தக அமைப்பில் தன் திறன்மிக்க வாதங்களால் பாதுகாத்தார் தி.மு.க தலைவர் முரசொலி மாறன். இருபதாண்டுகள் தூங்கியெழுந்த ரிப் வான் விங்கிள் என்ற பாத்திரம் போல ஐம்பதாண்டுகளாகத் தூங்குகிறாரா குருமூர்த்தி? கடந்த ஐம்பதாண்டுக் கால இந்திய வரலாற்றில் தி.மு.க-வின் பங்களிப்பு என்பது கணிசமானதல்லவா? இன்றைக்கும் பாஜக-வுக்கு எதிராக இந்தியா முழுவதிலும் எதிர்க்கட்சிகளை, மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டுள்ளதே தி.மு.க? அதனால்தானே உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலினே நேரில் செல்கிறார்... கலைஞர் சிலை திறப்புக்கு அகில இந்திய தலைவர்களை அழைக்கிறார்... எங்கிருந்து வருகிறது இந்தப் பிரிவினை அரசியல் குற்றச்சாட்டு?

தி.மு.க இந்து மதத்துக்கு எதிரானதா?

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை இந்து மதம் என்று கூறப்படக்கூடிய வழிபாட்டு முறைகள், சடங்குகளுக்கு ஏதாவது தடையோ, தீங்குகளோ இழைத்துள்ளதா? எந்த கோயிலாவது பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக புகார் உள்ளதா? ஜெயலலிதாதான் இந்து மத நம்பிக்கைகளில், வழிபாட்டில் தலையிட்டார். கிராம கோயில்களில் ஆடு, கோழிகளை பலி கொடுக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்தார். அதன்மூலம் பெரும்பான்மையான பக்தர்களின் மனங்களைப் புண்படுத்தி, அவர்கள் பெருந்துயர் கொள்வதற்கு காரணமானார். பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அவரே இந்த தடைச் சட்டத்தை விலக்கிக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அதுபோல மத வழிபாட்டு விஷயங்களில் தலையிட்டதில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் இந்து மதத்தில் புகுந்துவிட்ட பல சமூக விரோத சிந்தனைகளை மட்டுமே விமர்சித்து வந்தது. பார்ப்பனர்கள் பிறரை விட உயர்பிறப்பினர் போன்ற மூட நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தியது. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் பார்ப்பனீய ஆரிய சிந்தனையை எதிர்த்து “இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?” என்று கேட்ட சித்தர் வழியில் நின்று ஆன்மிக வாழ்வை மேம்படுத்தியது. நாகரிக உலகில் பலரும் படிப்பதற்கும் கேட்பதற்கும் சங்கடப் படக்கூடிய புராணக் கதைகளைக் கேள்விக்கு உட்படுத்தியது. அதன் மூலம் முதிர்ச்சியடைந்த, பண்பட்ட மதமாக இந்து மதம் விளங்க வழிகோலியது. திருமூலரின் மிக நுட்பமான இறையியல் சிந்தனையை, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டை தங்களது இறைநம்பிக்கை தொடர்பான கோட்பாடாக அறிவித்ததன் மூலம் ஆழமான ஆன்மிகப் பார்வைக்கு வித்திட்டது. மனித குலத்தின் சாரம், அதன் ஆன்மா என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்பதும் அது தன்னிலும் செயல்படும் ஆற்றலாக ஒற்றை ஆற்றலையே உருவகிக்க முடியும் என்று கூறியதன் மூலம் மத நல்லிணக்கத்துக்கும், குறுகிய வேறுபாடுகளைக் கடந்த ஆன்மிகப் பார்வைக்கும் வழி வகுத்தது. தி.மு.க தலைவர்கள் பலர் தனிப்பட்ட முறையில் நாத்திகர்களாக இருந்தாலும் அவர்கள் நாத்திகத்தை அரசியல் கொள்கையாகப் பேசியது இல்லை. செக்யூலரிசம் என்ற மதச்சார்பின்மையைத்தான் அரசியலில் கடைப்பிடித்தார்கள். அதேபோல சிறுபான்மை மதங்களை சார்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்படக் கூடாது என்பதால் அவர்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தினார்கள். எந்த ஒரு பண்பட்ட மனிதரும் சிறுபான்மையினர் நலன்கள் பெரும்பான்மையினரின் நலன்களுக்கு எதிரானது என்று நினைக்க மாட்டார்.

தி.மு.க பார்ப்பனர்களுக்கு எதிரானதா?

பார்ப்பனர்கள் பிறரைவிட உயர் பிறப்பாளர்கள் என்று கூறும் பார்ப்பனீய சிந்தனைகளையையும், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அவர்களே மேலாதிக்கம் செலுத்திய நிலையையும் விமர்சித்து சமூகத்தை மக்களாட்சிக்கும், அதிகாரப் பகிர்வுக்கும் இட்டுச்சென்றதைத் தவிர பார்ப்பனர்களுக்கு எந்த ஒரு சிறு தீங்காவது தி.மு.க-வால் ஏற்பட்டதாகச் சொல்லமுடியுமா? பார்ப்பனர்கள் பிறரது பழக்க, வழக்கங்களை இழித்துரைத்த அளவுக்குப் பார்ப்பனர்களை பிறர் இழித்துப் பேசியதாக சொல்ல முடியுமா? பிற சமூகங்களுக்கும் அனைத்து துறைகளிலும் போதிய இடம் கிடைக்க வழி செய்ததை, பார்ப்பனர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதாகக் கூற முடியுமா? ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களில், ஆலயங்களில் சடங்குகளை செய்விக்கும் பார்ப்பனர்களின் தொழிலுக்கு எந்த இடையூறாவது ஏற்பட்டுள்ளதா? தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் பார்ப்பன சமூகத்திற்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்று கூற முடியுமா? இட ஒதுக்கீட்டையே தங்களுக்கு எதிரானதாகப் பார்க்கும் சமூக விரோத பார்ப்பனீய நோக்கினை கைவிட்டுவிட்டால் அந்த சமூகத்திற்கு எந்தவொரு பாதிப்பும் தமிழகத்தில் ஏற்பட்டதாகக் கூற முடியுமா? சோ ராமசாமியும், குருமூர்த்தியும் எந்தவொரு தடையும் சிக்கலும் இல்லாமல் தி.மு.க-வைத் தொடர்ந்து விமர்சித்து இயங்குவது சாத்தியமாகத்தானே இருக்கிறது? ஏன் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா முதல்வராகவே பதவி வகித்தாரே?

தி.மு.க பார்ப்பனர்கள் கட்சியில் உறுப்பினராக சேர்வதை தடை செய்யவில்லை. பிரபல வக்கீல் ராமன் என்பவர் கட்சியில் இணைந்து பணியாற்றியுள்ளார். அண்ணா உள்ளிட்ட தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். ராஜாஜி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி கண்டார்; தி.மு.க-வுடன் இணைந்து இந்தியை மட்டும் ஆட்சிமொழியாக்குவதை எதிர்த்து அறுபதுகளில் போராடினார். கலைஞர் தன் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் மதத்தில் புரட்சி செய்த மகான் என்று ராமானுஜரின் வாழ்க்கையைத் தொடராக தானே கதை வசனம் எழுதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார். மக்களாட்சிக்கும், அதிகாரப் பகிர்வுக்கும் ஆதரவாக இருப்பது வேறு; பார்ப்பனர்களுக்கு எதிராக இருப்பது வேறு. தி.மு.க சாமான்யர்களுக்கும் அதிகாரப் பகிர்வினை சாத்தியமாக்கிய கட்சி.

தி.மு.க எதிர்ப்பின் மர்மம்

இப்படி இல்லாத காரணங்களை குருமூர்த்தி புனைந்துரைப்பது எதனால் என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். தி.மு.க ஊழல் கட்சி, அதனால் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்று விடுதலையாகும் சசிகலாவுடன் சேர்ந்து அதை எதிர்க்கிறேன் என்றால் குழந்தை கூட சிரித்துவிடும். பாரதீய ஜனதா கட்சிக்குத் தமிழகத்தில் வளர வேண்டும் என்றால் அதற்கு தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரண்டையும்தான் எதிர்க்க வேண்டும். எதனால் தி.மு.க-வை மட்டும் வீட்டை எரிக்கும் நெருப்பாகக் கருதி பதற்றமாக எதிர்க்க வேண்டும்? அப்படியென்ன பிரச்சினை குருமூர்த்திக்கு அந்த கட்சியுடன்?

இதற்கான உண்மையான விடை திராவிடம் என்ற சொல்லில்தான் இருக்கிறது. அண்ணாவின் “ஆரிய மாயை” நூலில் இருக்கிறது. இந்திய தேசியத்தை ஒற்றை கலாச்சார மூலம் கொண்டதாக உறுதிப்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் லட்சியம். அது கங்கை சமவெளியில் உருவான வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய மரபு. அப்படி நிறுவுவதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் ஆரியர் வருகைக்கு முன்னரே இந்திய நிலத்தில் ஒரு பண்பாடு இருந்தது என்ற கருத்தாக்கம்தான். அந்தக் கருத்தாக்கத்துக்கு வலுவான துணையாக இருப்பது சமஸ்கிருத மொழிக்கும், ஆரிய பண்பாட்டுக்கும் மாற்றாகக் கருதப்படும் தமிழ் மொழியும், திராவிட பண்பாடும்தான். மொழிகளும், பண்பாடுகளும். மனித இனங்களும் ஒன்றோடொன்று கலக்காமல் இருப்பதில்லை என்றாலும், ஒட்டு மொத்த இந்திய பண்பாடும், அதன் மூலமும் ஆரிய வேதகால பண்பாடுதான் என்று சொல்லமுடியாதபடி செய்வது திராவிடம் என்ற சொல்தான். அதற்கேற்றாற்போல தமிழகத்தில் வழங்கிய ஜைனம், பெளத்தம், சைவம், வைணவம் எல்லாமே தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளவையாக விளங்குகின்றன. தமிழகம் தொடர்ந்து தனித்துவ மிக்க சிந்தனை போக்குகளை உருவாக்கி வந்துள்ளது. அது ஒற்றை இந்திய அடையாளத்தைக் கட்டமைக்க பெரியதொரு தடையாக உள்ளது.

குருமூர்த்தியின் எதிர்ப்பை, “நெருப்பை அணைக்கும்” பதற்றத்தை நாம் ஒற்றை இந்திய அடையாளத்தைக் கட்டமைக்க முயலும் பாசிசத்துக்கும், கலாச்சார பன்மையின் ஊற்றாக விளங்கும் திராவிடக் கருத்தியலுக்கும் இடையிலான போராட்டமாகவே பார்க்க வேண்டும். ஒரு எதிர்க்கட்சியை நெருப்பெனப் பார்த்து ஆளும் கட்சிக்காரர் பதறுவதற்கு அந்த எதிர்க்கட்சியின் கருத்தியல் வலிமைதானே காரணமாக இருக்க முடியும்.

கட்டுரையாளர் குறிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

திங்கள் 18 ஜன 2021