மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 16 ஜன 2021

ராஜேந்திரபாலாஜி: ஜெ.வின் திண்டுக்கல் பாணியில் எடப்பாடியின் விருதுநகர்

ராஜேந்திரபாலாஜி: ஜெ.வின் திண்டுக்கல் பாணியில் எடப்பாடியின் விருதுநகர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மாவட்டச் செயலாளர்களாக இருக்கக்கூடியவர்கள் அளிக்கும் தகவல்கள், ‘ தொகுதி நல்லா இருக்கு.... மாவட்டம் நல்லா இருக்கு’ என்ற ரீதியிலேயே இருப்பதால்... உண்மையான நிலவரத்தை அவர்களைத் தாண்டி தெரிந்துகொள்ள முதலமைச்சர் தனக்கு நெருங்கிய நண்பர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்கிறார்.

அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே பல மாவட்டங்களிலும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல நண்பர்கள் உண்டு. கட்சி கடந்து அரசியல் அறிந்த நண்பர்களும் இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் அளிக்கும் வழக்கமான அறிக்கைகளை தாண்டிய கிரவுண்ட் நிலவரத்தை இந்த நம்பிக்கைக்குரிய நண்பர்கள் மூலமாகத் தெரிந்து கொள்கிறார் முதல்வர்.

இந்த வகையில் பொங்கல் அன்று தன் வீட்டில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வந்த சில நண்பர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர்களிடம் சுமார் 2 மணி நேரம் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவின் தற்போதைய நிலை என்ன, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த தொகுதியில் கொடுக்கலாம் என்பது போன்ற ஆலோசனை நடத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள், 11 ஒன்றியங்கள் உள்ளன. 6 நகராட்சிகள் உள்ளன.

“கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 11 ஒன்றியங்களில் 7 ஒன்றியங்களை திமுக ஜெயித்தது. மீதியுள்ள நான்கு ஒன்றியங்களில் தான் அதிமுக ஜெயித்தது. அதுவும் கடுமையான போராட்டத்திற்கு பிறகே கிடைத்தது. மாவட்டத்தில் அதிமுகவின் இந்த நிலைமைக்கு காரணம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான். அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீங்கள் விடுவித்தீர்கள். ஆனால்... மீண்டும் தளவாய் சுந்தரம், வேலுமணி ஆகியோர் மூலம் உங்களை சரிகட்டி பதவியை வாங்கிவிட்டதாக ராஜேந்திர பாலாஜி மாவட்டத்தில் சொல்லி வருகிறார் ”என்று அந்த நண்பர்கள் முதல்வரிடம் தெரிவித்தார்கள். அதற்கு லேசாகச் சிரித்துக் கொண்டே எடப்பாடி... "நானும் கேள்விப்பட்டேன்" என்று சொல்லியிருக்கிறார்.

“ராஜேந்திர பாலாஜி மீதான புகார்கள் எல்லாம் எனக்கும் தெரியும். அவரை நான் பாத்துக்குறேன்‌” என்ற முதல்வரிடம் விருதுநகர் மாவட்டத்தில் தொகுதிவாரியாக எந்தெந்த சமுதாயத்திற்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று அந்த நண்பர்கள் ஒரு திட்டத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

“சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்து தேவேந்திர குல வேளாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இம்முறை மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு அளிக்கலாம். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியை நாடார் சமுதாயத்தினருக்கு அளிக்கலாம். விருதுநகர் தொகுதியில் நாயுடு சமூகத்தினரும், தேவேந்திர குல வேளாளர்களும் அதிகம். கூட்டணியில் தேமுதிக இருந்தால் விருதுநகரை அவர்களுக்கு கொடுத்து விடலாம். நாமே நின்றால் நாயுடு சமூகத்தினரை நிறுத்தலாம்.

திருச்சுழி தொகுதி தற்போது திமுகவின் தங்கம் தென்னரசுவிடம் இருக்கிறது. அந்தத் தொகுதியில் முத்தரையர்கள் ஓட்டு 20 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. அங்கே முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த வரை நிறுத்தினால் தொகுதியில் கணிசமாக இருக்கும் தேவேந்திர குல வேளாளர்களும் ஆதரிப்பார்கள். இது தங்கம் தென்னரசுவுக்கு டஃப் ஃபைட் தருவதாக இருக்கும். பிற சமுதாயத்தைச் சேர்ந்தவரை நிறுத்தினால்... தங்கம் தென்னரசுவை எளிதில் ஜெயிக்க வைப்பது மாதிரி தான் இருக்கும் . சாத்தூர் தொகுதியில் ஏற்கனவே பாஜக போட்டியிட்டுள்ளது. கூட்டணியில் பாஜக இருந்தால். சாத்தூரை பாஜகவுக்கு கொடுத்துவிடலாம்"என்ற முதல்வரிடம் ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தனித்தொகுதி என்பதால் எந்த சமுதாயத்துக்கு வாய்ப்பளிப்பது என்ற கேள்வி அங்கே எழவில்லை.

சிவகாசி தொகுதி மறவர் சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டால்... இப்போது அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிடுவார்?

இதுபற்றியும் முதல்வர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

"ராஜேந்திர பாலாஜி மாவட்டத்தில் திமுகவோடு அனுசரனையாகத் தான் இருக்கிறார். அவருக்கு சீட் இல்லை என்றால் வெளியே வருத்தப்படுவதாக தெரிந்தாலும், செலவு மிச்சம் என்று போய்விடுவார். எனவே அவருக்கு சீட்டுக் கொடுத்து செலவு செய்ய வைக்க வேண்டும். கடந்த ஆட்சியில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் ஐ. பெரியசாமியோடு தொடர்பில் இருந்ததை அறிந்து... ஐ பெரியசாமி க்கு எதிராக நத்தம் விஸ்வநாதனை நிறுத்தினார் அம்மா. அதேபோல வரும் தேர்தலில் ராஜேந்திரபாலாஜியை அருப்புக்கோட்டை தொகுதியில் திமுகவின் கே. கே. எஸ். எஸ். ஆர். ஆருக்கு எதிராக நிறுத்துங்கள்" என்று யோசனை தெரிவித்துள்ளார்கள்.

ஆலோசனை முடிந்ததும், “ அடிக்கடி டச்சில் இருங்கள்” என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார் எடப்பாடி. விருதுநகர் மட்டுமல்லாமல் இதே போலப் பல மாவட்டங்களிலும் தனக்குத் தெரிந்த அதிமுக நண்பர்கள் மூலமாக தொடர் ஆய்வு நடத்தி வருகிறார் முதல்வர்.

வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 16 ஜன 2021