மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 16 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: ஏட்டுச் சுரைக்காயை பரிந்துரைக்கும் புதிய வேளாண் சட்டங்கள்!

சிறப்புக் கட்டுரை: ஏட்டுச் சுரைக்காயை பரிந்துரைக்கும் புதிய வேளாண் சட்டங்கள்!

நா.மணி

ஏம்மா! "கீரை, கட்டு என்ன வெல?" "பதினைஞ்சு ரூபாங்க". " என்னம்மா! நேத்துத்தான பத்து ரூபான்னு கொடுத்தே!". "ஏங்க இன்னிக்கு கீரையே கெடைக்கலங்க" இந்த உரையாடல் வழியாக, கீரையின் விலை தீர்மானிக்கப்பட்டு விற்பனையாகி விடுகிறது. கீரையின் விலை, அதனை வாங்கத் தயாராக இருக்கும் மக்கள் திரள், அவர்களிடம் உள்ள வாங்கும் சக்தி/ பணம் ஆகியவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்பட்டு, கீரை விற்பனையாகிறது. இதைத் தான் "சந்தை சக்திகளின் படி விலைத் தீர்மானம்" என்கிறார்கள்.

கீரை மட்டுமல்ல, நெல் கோதுமை போன்ற முக்கியமான அத்தியாவசியப் பண்டங்கள் தவிர மீதமுள்ள எல்ல வேளாண்மை விளை பொருட்களின் விலைகளும் தீர்மானிக்கப்படுகிறது.‌

அதுமட்டுமின்றி, தொழில் துறை மற்றும் சேவைத் துறை பொருட்களுக்கும் விலை இப்படித் தான் தீர்மானிக்கப்படுகிறது.

இதைப் போலவே, ஒரு கோடியே பத்து லட்சம் ஏக்கரில் விளையும் நெல்லின் விலையையும், சுமார் எழுபத்தி ஐந்து லட்சம் ஏக்கரில் விளையும் கோதுமையின் விலையையும், சக்திகளின் படி தீர்மானம் செய்யலாம் என்கிறது புதிய வேளாண்மை சட்டத் திருத்தம். இதன் விளைவாக, நிலைத்த வளர்ச்சிக்கு வித்திடலாம். சந்தையில் கிடைக்கும் பிரத்யோகமான உரிமைகளை பயன்படுத்தலாம். இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் தனியார் முதலீடுகள் கூடும். இதன் வழியாக வேளாண்மை உற்பத்தி திறன் அதிகரிக்கும். தரம் உயரும் என்கிறார்கள் அரசும் அதன் ஆதரவாளர்களும்

எனவே, அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து விவசாய விளைபொருளின் விலைத் தீர்மானத்தையும் சந்தையின் விலை நிர்ணய போக்குகளுக்கு விட்டு விட வேண்டும் என்கிறது மத்திய அரசு.

இது உண்மையில்லை. இந்திய விவசாயம் அழிந்து விடும். உணவுத் தற்சார்பு முடிவுக்கு வந்துவிடும் என்கிறார்கள் விவசாயிகளும் அவர்களது ஆதரவாளர்களும். தங்கள் நிலைப்பாடு சரியானதே என்பதையும், மேற்படி சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகள் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேல் எதிர்த்து களமாடி வருகிறார்கள். தங்கள் இன்னுயிரைத் தயங்காமல் தியாகம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

அத்தியாவசிய பொருட்கள் சந்தை சக்திகளின் கீழ் இருக்கும் போது ஏற்படும் தீமைகள்:

போராட்டங்களும் உயிர் துறப்புகளும் தெரியாமல் அல்லது புரியாமல் எடுக்கும் முயற்சிகளின் விளைவு. சந்தையே விலையைத் தீர்மானிக்கட்டும், என்று விட்டுவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு எல்லோரும் அறிந்த இரண்டு நிகழ்வுகளை நினைவு கூறலாம். ஒன்று, 1930 களில் ஏற்பட்ட ‌உலகப் பெரு மந்தம். மற்றொன்று முப்பது லட்சம் பேரைப் பலி கொண்ட இந்திய வங்கப் பஞ்சம். இரண்டுமே வேளாண் விளைபொருளின் விளைச்சல் பற்றாக்குறையோ அல்லது அபரிதமான மகசூல் காரணமாக ஏற்பட்ட உபரியோ அல்ல. இவ்விரண்டுமே விவசாயிகளையும் மக்களையும் பெருமளவில் பாதித்த நிகழ்வு. பல லட்சம் உயிர்களை பலி கொண்ட நிகழ்வுகள். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணம், வேளாண்மை உற்பத்தியல்ல. அன்றைய சூழ்நிலையை ஒட்டி, சந்தையில் விலைத் தீர்மானம் நடைபெற்றதே காரணம். இதன் விளைவாக, விவசாயிகள் கடன் வலையில் சிக்கினர். மக்கள் உணவு கிடைக்காமல் செத்து மடிந்தனர்.

சந்தையே விலையை தீர்மானிப்பதன் விளைவுகள்:

"பொருட்களின் அளிப்பும் தேவையும் விலையை நிர்ணயம் செய்யட்டும்" என்ற‌ சந்தை விதியை முன் வைப்போருக்கு வேறொன்றையும் நினைவு படுத்த வேண்டும். வேளாண்மை உற்பத்திமுறை தனித்துவமானது. மகசூல் முழுவதும் ஒரே நேரத்தில் சந்தைக்கு வரும். சந்தையில் வரத்து அதிகரித்தால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காது. விளைச்சல் குறைந்து, உற்பத்தி குறைந்து விட்டால், எல்லா மக்களுக்கும் கட்டுப்படியான விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்காது.

வேளாண்மை விளைபொருளின் விலை உயர்ந்தால்,‌ பெரும் பகுதி உழைப்பாளி தங்கள் வருவாயில் கணிசமான பங்கை உணவுத் தேவைக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் மற்ற பண்டங்களை வாங்கி நுகர்தல் என்பது குறையும். ஒட்டு மொத்த பொருளாதாரமும் பாதிக்கும்.

சந்தைக்கு ஏற்ற பொருள் உற்பத்தி:

சந்தையில் எந்தப் பொருளுக்கு நல்ல விலை கிடைக்கிறதோ அந்தப் பொருட்களை விவசாயிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டால், உணவு தானிய உற்பத்தியில் இருந்து விவசாயிகள் மாற்றுச் சாகுபடிக்கு சென்று விடுவார்கள். பணப் பயிர்களோ, உணவு தானியங்களோ எதுவாயினும் சர்வதேச சந்தையில் எந்தப் பொருளுக்கு நல்ல விலை கிடைக்கிறதோ அல்லது உள்ளூரில் பெரு நகரங்களில் அதிக வருவாய் பிரிவினருக்கு எது தேவையோ அதனையே உற்பத்தி செய்வார்கள். இதனால் உணவு உற்பத்தி சரிந்து வீழும்.

உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்து விட்டோம் என்பதெல்லாம் பழங்கதை ஆகிவிடும். நாமும் கூட உணவுத் தேவைக்காக வெளிநாட்டு நெல் மணிகளையும் கோதுமையையும் நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உணவுப் பொருட்களை விவசாயிகள் உற்பத்தி செய்து வரும் வரையில் அவர்களுக்கு கூடுதல் வேலை ஆட்கள் தேவை. உதாரணமாக ஒரு ஏக்கருக்கு பத்துப் பேர் தேவையெனில், பணப் பயிர்கள் அல்லது தோட்டப் பயிர்கள் என்று விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை திசை திரும்பிய பின்னர் ஐந்து பேர் இருந்தால் போதுமானது. தென்னை மரம், மாமரம், புளியமரம், மாமரம் என ஏதேனும் ஒரு சாகுபடிக்கு விவசாயிகள் மாறும் நிலை வரலாம். இதன் விளைவாக, விவசாயம் இன்று எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்து வருகிறதோ அதில் பாதியளவு கூட வேலை கிடைக்காமல் போகும்.இப்படி வேலை இழக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் எங்கு செல்வார்கள் என்று கண நேரம் கூட சந்தை சக்திகளின் ஆளுகைக்கு விட்டு விடலாம் என்று கூறுபவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை.

அயல்நாட்டுகளின் பிடி இறுகும்:

நமக்கு தேவையான உணவை நாமே உற்பத்தி செய்ய இயலாத நிலையில், உணவுக்காக வெளிநாட்டு இறக்குமதியை நம்பி நிற்கும் சூழ்நிலை ஏற்படும். வெளிநாட்டினர், இன்றைய உலகமய சூழ்நிலையில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம். உலக வர்த்தகம் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தயவில் தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உணவு தானியங்களின் இறக்குமதி, அதன் விலைகளோடு மட்டும் நேரடியாக இது தொடர்பு கொண்டிராது என்பதும் தெள்ளத் தெளிவான விசயம். அந்த நாடுகளின் அரசியல் நலன்கள், வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்கள் எல்லாம் அடக்கம் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இந்த நலன்கள் என்ற சொல்லில் பணம் மற்றும் பணம் சாராத இரண்டு விதமான கட்டுப்பாடுகளும் இருக்கும்.

நம் நாட்டு விளை நிலங்களில் என்ன உற்பத்தி செய்ய வேண்டும் என்று வெளிநாட்டினரே முடிவு செய்வார்கள்.

எனவே, நம்மைப் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அல்லது அனைவருக்குமான உணவு உற்பத்தியை உத்திரவாதம் செய்து கொள்வது தான் அடிப்படைத் தேவை. உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் சேமிப்பு அதிகமாக இருப்பது தவறேதும் இல்லை. பற்றாக்குறையாக இருப்பதே பெரும் தவறு.

தற்போதைய நிலை நீண்ட கால அனுபவம்:

இந்தியாவில் உணவு உற்பத்தியை உத்திரவாதம் செய்யவும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், பெருவாரியான மக்களுக்கு உணவை உத்திரவாதம் செய்யவும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஏற்பாடே குறைந்த பட்ச ஆதரவு விலை, கொள்முதல், விற்பனை விலை, உணவு மானியம் போன்ற ஏற்பாடுகள் ஆகும். இதில் இருக்கும் குறைகளைக் களைந்து செழுமைப் படுத்தி முன்னேற்றம் காண வேண்டுமே தவிர பின்னோக்கி செல்லக் கூடாது. இத்தகைய ஏற்பாடுகள் மேற்குலக நாடுகள் விரும்பாதவை. அவற்றின் நலன்களுக்கு விரோதமானவை. எனவே அவை இந்த ஏற்பாட்டை விரும்பாது. எதிர்க்கவே செய்யும். அத்தோடு உள்ளூர் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கும் தற்போதைய ஏற்பாடுகள் எதிரானவை. அவையும் அணிசேரவே செய்யும். தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஏற்பாட்டில் குறைகள் இருக்கலாம். அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டியவையே அன்றி ஒழித்துக் கட்டப்பட வேண்டியவை அல்ல. தற்போதைய வேளாண்மை அங்காடி முறையும் நடைமுறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் வேதனைகளிலிருந்து உருவாக்கப்பட்டது.

வேளாண்மை விளை பொருட்களின் விலை தீர்மானத்தை சந்தை சக்திகளிடம் ஒப்படைத்து விடலாம் என்று பேசுவது சந்தைப் பொருளாதார ஏட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளவை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற சொலவடை அனுபவப் பகிர்வு. அதனை உதாசீனம் செய்தல் முற்றிலும் பாதக விளைவுகளை உருவாக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

சனி 16 ஜன 2021