ஞானதேசிகன் காலமானார்: 3 நாள் துக்கம் அனுசரிப்பு -ஜிகே.வாசன்

politics

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூப்பனாரின் தீவிர ஆதரவாளராகவும் திகழ்ந்த ஞானதேசிகன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (ஜனவரி 15) காலமானார்.

மூப்பனாருக்குப் பின் ஜி.கே.வாசன் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது அதில் இணைந்து மாநிலத் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்தார். 2001, 2007 என  2 முறை ராஜ்யசபா எம்.பி.யாகப் பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவராக இருந்த ஞானதேசிகன்  நெஞ்சுவலி காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறிவந்தார்.

மீண்டும் நேற்று முதல் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்படவே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூப்பனாருக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர் ஞானதேசிகன்.   ‘மூப்பனார்தான் தன்னை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கினார்,  எம்.பி. பதவி வாங்கிக் கொடுத்தார் என்பதற்காக, மகன் ஜி.கே. வாசன் கட்சி ஆரம்பித்ததும், அவருக்கு விசுவாசமாகச் செயல்பட்டார். பெரிய, பெரிய தலைவர்கள் கூட தமாகாவுக்கு வந்தாலும், இங்கு எதுவும் நடக்காது என கட்சியை விட்டு சென்ற நிலையிலும், மூப்பனார் நம்மை வளர்த்தது போல, நாம் அவருடைய மகனுக்கு உறுதுணையாக இருப்போம்’ என கட்சியில் தொடர்ந்து செயல்பட்டவர்.

இன்று அவருடைய மறைவு தமாகாவினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இதனிடையே ஞானதேசிகன் உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளதாகத் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஞானதேசிகன் மறைவையொட்டி 3 நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும்

துக்கம் அனுசரிக்கும் விதமாகக் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகனின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும் இயக்கத்திற்கும் மிகப்பெரிய இழப்பு.

ஞானதேசிகன் மாணவர் பருவத்திலேயே பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் பெருந்தலைவரது இறுதி மூச்சு வரை அவருடன் சிறப்பாகப் பணியாற்றியவர். பெருந்தலைவர் மறைவிற்குப் பிறகு  மூப்பனார் தலைமையில் இந்தியத் தேசிய காங்கிரசிலும் அதன்பிறகு தமிழ் மாநில காங்கிரசிலும் தனது இறுதி மூச்சு வரை பெரும் பங்காற்றியவர்.

இரண்டு முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகச் செயல்பட்டவர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக டெல்லியில் குரல் கொடுத்தவர்.  தமிழகத்தினுடைய மூத்த வழக்கறிஞர், சிறந்த பண்பாளர், மாற்றுக் கட்சியினரிடம் நன்கு பழகக்கூடியவர், அனைவராலும் மதிக்கப்படுபவர்.

மூப்பனாருடைய நம்பிக்கைக்குரியவராக அவர் வாழ்ந்த காலங்களில் அவர் எடுத்த முக்கிய முடிவிற்குத் துணை நின்றவர். மூப்பனார் மறைந்த பிறகு தன்னுடைய அரசியல் நலனிலும் மூப்பனார் குடும்பத்தினர் நலனிலும் அக்கறை கொண்டவராக தன்னுடைய இறுதி மூச்சு வரை செயல்பட்ட ஞானதேசிகனின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார். 1949ஆம் ஆண்டு  ஜனவரி 20ஆம் தேதி ஞானதேசிகன் பிறந்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஞானதேசிகனுக்கு திலகவதி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். பிறந்தநாள் கொண்டாட இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில் அவரது மறைவு குடும்பத்தினருக்கு மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *