மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

கோர்ட் உத்தரவை மீறி ஸ்மார்ட் சிட்டி வேலை: கோவை மாநகராட்சிக்கு பறந்தது ஓலை!

கோர்ட் உத்தரவை மீறி ஸ்மார்ட் சிட்டி வேலை: கோவை மாநகராட்சிக்கு பறந்தது ஓலை!

கோயம்புத்துார் மாநகராட்சிப் பகுதிக்குள் இருக்கும் 9 குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 400 கோடி ரூபாய் அளவுக்கு நிறைய வேலைகள் நடக்கின்றன.

குளங்களை பொழுதுபோக்குக்கான இடங்களாக மாற்றுவதற்காக நடக்கும் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட வேலைகளில் பெரிய அளவில் ஊழல் நடப்பதாக சில நாட்களுக்கு முன்பாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. முதலில் இருந்தே இந்த குற்றச்சாட்டை அழுத்தம் திருத்தமாக வைத்துக்கொண்டிருப்பவர், சிங்காநல்லுார் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திக்.

‘‘கோவையில் ரூ.62 கோடி மதிப்பில் உக்கடம் பெரிய குளம் பணிகள் , ரூ.40 கோடி மதிப்பில் வாலாங்குளம் பணிகள், ரூ.31 கோடி மதிப்பில் செல்வ சிந்தாமணி குளத்தின் பணிகள் , சிங்காநல்லுார் குளத்தில் ரூ.12.47 கோடியில் பணிகள், போன்ற பல்வேறு கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் உள்ளிட்ட மொத்தம் சுமார் 998 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருவதாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது..

இவற்றில் , கோவை , உக்கடம், பெரியகுளம் வடக்கு பகுதியில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்படும் என குளத்தில் சுமார் 25 அடி தூரம் மண் போட்டு, மூடப்பட்டு , அதில் திட்டப்பணிகள் நடத்தப்பட்டுள்ளது. குளக்கரைகளை மேம்படுத்தும்போது, குளங்களின் அளவை குறைக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், நீதிமன்றத்தையும் மீறி ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் குளக்கரையோர பகுதிகளை மூடி வருகின்றனர்.

மேலும், பெரியகுளத்தில் தற்போது முழு அளவில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இங்கே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எந்த முயற்சியும் கோவை மாநகராட்சி எடுக்கவில்லை. குளங்களில் உள்ள சாக்கடை நீர்தேக்கம் தடுக்காமல் பெரும் தொகை செலவிடுவதால் எந்த பயனும் கிடையாது. குளத்தின் கரையை அழகு படுத்துவதாக சொல்லிவிட்டு, அதில் துர்நாற்றம் வீசும் சாக்கடை நீரை தேக்கி வைத்தால் மக்கள் எப்படி பயன்படுத்த முடியும்?. அந்த குளக்கரையோரம் , சிறிது நேரம் நின்று பார்க்கும் மக்கள், கழிவு நீரின் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக் கொண்டு ஓடும் அவலம் இருக்கிறது.

இந்தக் குளத்தில் பணிகள் அரை குறையாக இருக்கும் போதே கடந்த 25.06.2020 அன்று , தமிழக முதல்வரை வரவழைத்து, அவசரகதியில் திறந்து வைக்கப்பட்டது அது என்ன நோக்கத்திற்காக அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது என்று மக்கள் அனைவரும் அறிவார்கள். 23.83 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட வாலாங்குளம் சீரமைக்கும் பணிகளும் 30 சதவீதம் கூட முடியவில்லை. இக்குளத்தில், கோவை அரசு மருத்துவமனை கழிவுநீர் தேங்குகிறது. இக்குளத்து நீரின் துர்நாற்றத்தால் சிவராம் நகர், அபிராமி நகர், சுங்கம் உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் தவிக்கின்றனர். சாக்கடை நீரை சுத்திகரிக்காமல் ,நீர் நிலைகளை சீரமைக்காமல் அலங்கார பணிக்காக மட்டும் ஸ்மார்ட்சிட்டி நிதியில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

பெரிய குளம் கரையோர பகுதியில் வணிக நோக்கத்திலான கடைகள் அமைக்கப்பட்டு , அந்த கடைகள் அனைத்தும் அதிமுக வினருக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. செய்யும் பணிகள் அனைத்திலும் லாபம் ஏதாவது இருக்கிறதா என்பதில் மட்டும்தான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்ணும் கருத்துமாக உள்ளார்.’’

இப்படி எம்எல்ஏ கார்த்திக் குற்றச்சாட்டுகளைக் குவித்துள்ளார். கோவை மாவட்ட அமைச்சரும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறையின் அமைச்சருமான வேலுமணி இதற்கு பதிலடி தரும் வகையில் பேட்டி கொடுத்தார்.

‘‘ஐம்பது ஆண்டுகளில் நடக்காத பணிகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது பொறுக்காமல் ஏதாவது சொல்ல வேண்டுமென்பதற்காக ஊழல் நடப்பதாக திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஸ்மார்ட் சிட்டி பணிகளில் எந்த ஊழலும் நடக்கவில்லை. இந்த வேலைகள் முடிவடையும்போது கோயம்புத்துார் மாவட்ட மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு மிகச்சிறந்த பொழுது போக்குக்கான இடங்களாக இவை இருக்கும். சென்னைக்கு மெரினா பீச் இருக்கிறது. உழைப்புக்குப் பெயர் பெற்ற கோவை மக்களுக்குப் பொழுதுபோக்குவதற்கு இடங்களே இல்லை. அந்தக் குறை விரைவில் நீங்கிவிடும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

அரசியல்ரீதியாக இந்த மோதல் நடந்துகொண்டிருப்பதற்கிடையில், எம்எல்ஏ கார்த்திக் ‘‘குளக்கரைகளை மேம்படுத்தும்போது, குளங்களின் அளவை குறைக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், நீதிமன்றத்தையும் மீறி ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் குளக்கரையோர பகுதிகளை மூடி வருகின்றனர்.’’ என்று கூறியுள்ள கருத்து, சமூகஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தரமில்லாத பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று ஏராளமான புகைப்படங்களுடன் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ள திமுகவினர், நீதிமன்ற உத்தரவை மீறி, நீர் நிற்கும் பரப்புகளை மூடுவது குறித்த புகைப்படங்களையும் பகிர்ந்த வருகின்றனர்.

இதுபற்றி நாம் களத்தில் இறங்கி விசாரித்தபோது, கோவையைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பு (கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ்) சென்ற 2016 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த பொதுநலமனுவின் (Writ Petition. No.1612/2016) மீது சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நொய்யல் ஆறு பாய்கின்ற இந்த குளங்களில் ஏற்கெனவே இருக்கும் ஆக்கிரமிப்புகளை ஓராண்டுக்குள் அகற்ற வேண்டும். புதிதாக எந்த ஆக்கிரமிப்பையும் அதாவது வளர்ச்சித் திட்டங்களையும் அனுமதிக்கவே கூடாது என்று உத்தரவு தரப்பட்டுள்ளது.

அங்குள்ள குளங்களில் ஏற்கெனவே இருக்கின்ற அரசுத்துறைகளின் ஆக்கிரமிப்புகளான போக்குவரத்து பணிமனை, சிவில் சப்ளை உணவுக்கிடங்கு, துணை மின் நிலையம், தண்டவாளங்கள் போன்றவற்றுக்கு நீதிமன்றம் விலக்கு அளித்தது. அன்றைக்கு இருந்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த அந்த உத்தரவில், ஆட்சியரே ஒப்புதல் தரும்பட்சத்திலும் எந்த வளர்ச்சித்திட்டங்களையும் செய்யக்கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவை மீறி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பேரூர் குளத்தில் கரையை அகலப்படுத்துவதாகக் கூறி 30 அடி தார் ரோடு அமைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதை எதிர்த்து தமிழ்மறை என்பவர் பொதுநலமனு (W.P. 1498/2019) தாக்கல் செய்தார். அதற்கு ‘கரையை பலமாக்கும் வேலை மட்டுமே நடக்கிறது. தார்ரோடு அமைக்கவில்லை’ என்று பேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.

அதற்குப் பின்புதான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒன்பது குளங்களில் எக்கச்சக்கமான வேலைகள் நடக்கின்றன. அந்த குளங்களில் கரையை அகலப்படுத்துவதாகக் கூறி, நீர் நிற்கும் பரப்பு மூடப்பட்டுள்ளது. வாலாங்குளத்துக்கு நடுவில் செல்லும் வகையிலும் மண்ணைப் போட்டு மூடி புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் இப்போது திமுக பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறது. இந்த பிரச்சினையில் கோவை நகரில் இயங்கிக் கொண்டிருக்கும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் கடும் அதிருப்தி இருந்தாலும் யாருமே அதை எதிர்த்துக் குரல் கொடுக்கவோ, சட்டரீதியாக தடுத்து நிறுத்தவோ தயங்கிவருகின்றனர். அந்த அமைப்புகளை நடத்துவோர், பலவிதமான தொழில்களைச் செய்துவருவதால் ஆளும்கட்சியினரால் ஏதாவது இடையூறு வருமென்று பயந்து அமைதி காப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஏற்கெனவே பொதுநல மனு தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் தீர்ப்புப் பெற்ற அதே நுகர்வோர் அமைப்பு சார்பில் மாநகராட்சிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் தரப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், இப்போது நடந்துவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் தொடர்ந்து நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வேலைகளை வேகமாக முடித்து தேர்தலுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விட வேண்டுமென்று அதிமுகவினர் கருதுகின்றனர். ஆனால் கரையை பலப்படுத்தும் பெயரில் நீர்நிலைப் பரப்பை குறைத்துவிட்டது என்று அதிமுக அரசின் மீது விழுந்துள்ள கறையை நீக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

–த.நிவேதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 15 ஜன 2021