மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

அஞ்சல் தேர்வுகள் தமிழிலும் எழுதலாம்! இறங்கி வந்த மத்திய அரசு!

அஞ்சல் தேர்வுகள் தமிழிலும் எழுதலாம்!  இறங்கி வந்த மத்திய அரசு!

தமிழ் நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்தப்படுமென்று சு.வெங்கடேசன் எம்.பிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் (ஊழியர் நலன்) டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிக்கை கடந்த 04.01.2021 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் தேர்வர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான தேர்வுகள் 14.02.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே தபால் காரர் பதவிக்கான பணி நியமனத் தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படுமென்று 16.07.2020 அன்று மாநிலங்களவையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதியளித்திருந்ததையும், 30.07.2020 அன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் மத்திய அரசு இது போன்ற உறுதி மொழி அளித்ததையும் குறிப்பிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கணக்கர் பதவிகளுக்கான தேர்வுகளும் தமிழில் நடத்தப்பட வேண்டும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சி.பி.எம்) மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக திமுக எம்பியும் மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் இதுகுறித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்த நிலையில்... இதுகுறித்து தனக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் வந்திருப்பதாக மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் (ஊழியர் நலன்) டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா மதுரை எம்.பி.க்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

’தமிழ் நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகள் தொடர்பான 04.01.2021 அறிவிக்கைக்கு பின்னிணைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த மையப்படுத்தப்படாத துறைவாரித் தேர்வுகளை ஆங்கிலம், இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் எழுதலாம் என்ற தெரிவு அதில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பின்னிணைப்பை இக் கடிதத்துடன் தங்களுக்கு அனுப்பியுள்ளோம். நீங்கள் வெளிப்படுத்திய கவலைகள் இதன் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது என நம்புகிறேன்"என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரை எம்பி வெங்கடேசன் கருத்து தெரிவிக்கையில்,

"எனது கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. என்னுடைய கோரிக்கையால் தமிழில் தேர்வுகள் நடைபெறுவது தேர்வர்களுக்கு ஒரு "சமதள ஆடு களத்தை" ஏற்படுத்தித் தருவதாகும். மேலும் அந்தந்த மாநிலங்களில் மக்களுக்கு சேவை ஆற்றுபவர்களுக்கு மாநில மொழிகளில் தேர்ச்சி என்பதே முக்கியம். அதுவே மக்களுக்கான சேவையையும் வலுப்படுத்த உதவும். இன்னும் கூடுதலாக சொல்வதானால் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக தமிழகம் என்றும் முன் வரிசையில் நிற்கும் என்பதையும் உறுதி செய்வதாகும். ஆகவே எல்லா மத்திய அரசுப் பணிகளிலும், மத்தியப் பொதுத் துறை நியமனங்களிலும் தமிழுக்கு உரிய இடத்தை உறுதி செய்ய எனது முயற்சிகள் இடையறாது தொடரும்" என்று கூறியுள்ளார்.

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 15 ஜன 2021